துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா நடித்துள்ளனர்.மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக்சேகல், பா ரஞ்சித், அதிதி ஆனந்த் தயாரித்துள்ளனர்.
கபடி மீது காதல் கொண்டிருக்கும் ஒரு வீரன் உள்ளூர் சாதியத் தடைகளையும் மேலே செல்ல செல்ல எதிர்ப்படும் சமூகத் தடைகளையும் கடந்து எப்படி உடைத்து முன்னேறி வெற்றி பெறுகிறான் என்பதுதான் 168.21 நிமிடங்கள் கொண்ட ‘பைசன்’ காளமாடன் படத்தின் கதை.
ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் கபடி போட்டியில் கபடி வீரன் கிட்டான் பங்கேற்கும் தருணத்தில் இருந்து கதை பின்னோக்கி விரிகிறது.அவன் கடந்து வந்த பாதைகளை காட்சிகள் ஆக்கி கண் முன் காலத்தை விரிக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தென் மாவட்டங்களில் நடந்த சமூக மோதல்களையும் சமூகங்களுக்கிடையே நிலவி வரும் பகைமை உணர்ச்சியையும் அது எவ்வாறு சமகால வாழ்க்கையையும் இளைஞர்களின் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது என்பதை அத்தியாயம் அத்தியாயமாக விளக்குகிறது படம்.அந்த ரணகளக் காட்சிகளில் ரத்தமும் சதையுமாக கதை மாந்தர்கள் தோன்றி நம்மை பதை பதைக்க வைக்கிறார்கள்.
பைசன் என்றால் ஒருவகை காட்டெருமை. சாதுவாக பொறுமையாகத்தான் இருக்கும் அது. ஆனால் வெறி கொண்டால் அதை அடக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவனின் கதை தான் இது. பைசன் என்கிற மாடு போல சன்னதம் வந்த காளை மாடன் சாமி போல முறுக்கேறிய உடலுடன் செருக்கேறிய மனதுடன் தோற்றத்திலும் உடல் மொழியிலும் நிமிர்ந்து நிற்கிறார் துருவ் விக்ரம்.அதிகம் பேசாமலே கபடி கபடி என்று கபடி விளையாட்டின் மீது ஆசை, கனவு, வெறியாக இருக்கும் துருவ் விக்ரம் ஏற்றுள்ள அந்த கிட்டான் பாத்திரம் அசல் கிராமத்து இளைஞனாகவே தோன்றுகிறது.பத்து டிபன் பாக்ஸ் எடுத்து சாப்பாடுகளை வெட்டுவது ஆகட்டும், வெறி தீர மைதானத்தைச் சுற்றி ஓடுவதாகட்டும் எங்கும் ஓடிக்கொண்டே இருப்பதாகட்டும் விளையாட்டு வீரனின் அந்த வெறி தெரிகிறது. அவமானப்படுத்தப்படும் போது சீறுவதாகட்டும் தன் தந்தையைத் தாக்கியவனை துவம்சம் செய்வதாகட்டும் ஆவேசத்திலும் பொறி பறக்கிறது. கபடி விளையாட்டில் அதகளம் செய்கிறார்.இந்த பாத்திரத்தில் கரைந்து போய் துருவ் விக்ரம் காணாமல் போய்விட்டார்.
துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி தன் மகனை சமூக பதற்றத்தில் இருந்தும் எதிரிகளிருந்தும் காப்பாற்றத் தவிக்கும் அந்த தந்தை பாத்திரத்தில் கலங்க வைத்துள்ளார் .அவர் நடித்த படங்களில் சிறப்பான நடிப்புத் தருணங்களை இதில் சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் துருவ் மீது கட்டற்ற காதலும் கொண்டவராக அந்தப் பாத்திரத்தைச் சரியாகச் செய்துள்ளார். துருவ் விக்ரமின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன் தன் தம்பியின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் அக்காவாக வருகிறார். விளையாட்டு ஆசிரியராக வரும் அருவி மதன்,சரியான ஆசிரியர் என்றும் ஜாதி மத பேதங்கள் பார்ப்பதில்லை என்கிற பாத்திரத்தில் சரியாக நடித்துள்ளார்.
ஒரு தரப்பு சமூகத் தலைவராக வரும் இயக்குநர் அமீர் ,சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்.அதேபோல இன்னொரு தரப்பு சமூகத் தலைவராக வரும் லால்,உண்மையான திறமைசாலிகளை அங்கீகரிக்கும் மனதுடன் வருகிறார்.வன்முறை இரண்டு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதம் என்பதால் இரண்டு சமூகத் தலைவர்களுமே கொல்லப்படுகிறார்கள்.
காண்டீபன் பாத்திரத்தில் வரும் அழகம்பெருமாள் சில காட்சிகளில் வந்தாலும் நினைவில் நிற்கிறார்.
ஒளிப்பதிவாளர் எழிலரசு கே படத்தின் காட்சிகளை நேரடி அனுபவமாக உணரும் வகையில் எதார்த்தமாகப் படப் பதிவு செய்துள்ளார்.நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்குச் செறிவூட்டுகின்றன.
இங்கே மகன் துருவ் கபடி ஆடும் போது அங்கே தந்தை பசுபதி சாமி ஆடும் போது காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டி ஒரு மாயாஜால அனுபவம் கொடுத்துள்ளார் இயக்குநர்.முடிந்தவரை காட்சிகளை பாசாங்கு இல்லாமல் எடுத்துள்ளார்கள்.மாரி செல்வராஜ் சொல்ல வந்த சில உணர்வுகளை நேரடியாகவும், பூடகமாகவும், குறியீடுகளாகவும் பல விதங்களில் காட்டியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராராஜ் , ‘எனக்குத் தெரிந்தது ஒரே பாடல் தான். அதனை எப்போதும் பாடி கொண்டிருப்பேன்’ என்பார்.அதாவது அவரது படம் எப்போதும் சாதியத்தைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் என்பதுதான்.
ஒரு கபடி வீரரின் கதையை சொல்ல வந்த போதும் அவர் நினைத்த சாதிப் பிரச்சினையை பின்னணியாக வைத்து அதன் தாக்கத்தை உணர வைத்துள்ளார். 
அவர் திரைக்கலையை முறையாகப் புரிந்து கொண்டிருப்பதால் பிரச்சாரத் தொனியின்றி எந்தச் சமூக கருத்தையும் அவரால் சொல்ல முடிகிறது. பலகாட்சிகளை, கருத்துக்களை யூகித்துப் பொருள் கொள்ளவும் வைக்கிறார்.
மொத்தத்தில் கொம்பு நீண்டு ‘பைசன்’ மிரட்டுகிறது.


