‘ஹர ஹர மகாதேவகி’ ,இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில், ” இயக்குநர் சந்தோஷ் இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’ ஒரு திரில்லர் திரைப்படம். சந்தோஷ் குமார் என்னை சந்தித்து பிரபுதேவாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவின் ரசிகன். அவர் நடிப்பில் வெளியான ‘முக்காலா முக்காபுலா..’ என்ற பாடலை என்னுடைய சொந்த ஊரில் வருடம் முழுவதும் ஒலிக்க வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர் வட்டாரத்தில் அனைவரிடமும்,‘ பிரபுதேவா அனைவரும் ரசிப்பது போல் ஒரு நடன கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் திறமையை நிரூபிப்பார்’ என சொல்வேன். அது இந்த படத்தில் நடைபெற்றிருக்கிறது. ஒற்றைக் காலுடன் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ” நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரை சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். நடிகர் ஆர்யா தான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார். மேலும் இந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம். பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று பார்ப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தவை எல்லாம் இல்லாமல், புதிய பாதையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பிரபுதேவா உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.” என்றார்.
இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசுகையில், ” இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு பிறகு கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினேன். ‘யூ’ சர்டிபிகேட் படமான அந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதால், எனக்கான அடையாளம் கிடைக்கவில்லை. அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னுடைய சூழல் என்னை திசை மாறி பயணிக்க வைத்து விட்டது. அதே தருணத்தில் நீண்ட காலமாக திரில்லர் ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது போன்ற வித்தியாசமான ஜானரில் படத்தை இயக்குவதற்காகத் தான் திரையுலகில் அறிமுகமானேன். இனிமேல் இயல்பான கதைகளை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
கஜினிகாந்த் படத்தில் எனக்கு கிடைத்த ஒரு திரையுலக வழிகாட்டி.. நண்பர் ஆர்யா. முன்பெல்லாம் தொடர்புகளுக்காக ‘யெல்லோ பேஜஸ்’ என்ற ஒரு பத்திரிக்கையை வைத்திருப்போம். என்னுடைய யெல்லா பேஜஸ் ஆர்யா தான். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரது முகவரியும் தொடர்பு எண்ணும் அவருடைய டைரியில் இருக்கும். பிரபுதேவாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன், ஆர்யா, இயக்குநர் ஏ. எல். விஜய்யை தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஏ எல் விஜய் மூலமாக பிரபுதேவாவை சந்தித்து, கதையை விவரித்தேன். கதையைக் கேட்டவுடன், ‘பிடித்திருக்கிறது. இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.
நிறைய தயாரிப்பாளர்கள் சந்தோஷ், அடல்ட் படத்தை தான் இயக்குவார் என்று என் மீது முத்திரை குத்தினார்கள். இந்த தருணத்தில் தான், ‘பிரபுதேவாவை வைத்து பொய்க்கால் குதிரை என்ற திரில்லர் ஜானரில் படத்தை இயக்குகிறேன்’ என்று வினோத்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். படத்தை இயக்குவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார்.
இமான் அவர்களிடம் வேறு ஒரு படத்திற்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நடைபெறவில்லை. அதன் பிறகு இந்த படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம். பாடல் எந்த சூழலில் இடம் பெறுகிறது என்பதனை ஒரு குறிப்பாக சொன்னால் போதும். அவர் அதனை உணர்ந்து. ஏராளமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைத்து, கவிதைகளாக்கிக் கொடுப்பார். அதிலிருந்து நாம் தேர்வு செய்வதுதான் கஷ்டமாக இருக்கும்.
‘பொய்க்கால் குதிரை’ படத்தை பற்றி நான் பேசுவதை விட, படம் நிறைய பேசும். நான் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்லவில்லை இயல்பாக படமெடுத்திருக்கிறேன். படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.” என்றார்.
நடிகர் பிரபுதேவா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், ‘ஜூன் போனால் ஜூலை..’ எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன். இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘சிங்கிள்..’ என்ற பாடலில் ‘கால் போனால் கல் கடுக்கும்…’என்றொரு வரி இடம்பெற்றிருந்தது. அதற்கான அர்த்தத்தை கேட்டு வியந்தேன்.
சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும் போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை தான். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டி இமான் இசையமைப்பாளர் என்ற எல்லையை கடந்து, ‘மை டியர் பூதம்’ என்ற படத்தில் இரண்டு புதிய இசைக்கலைஞர்களை பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடைய மனிதநேயத்தை அறிந்து வாழ்த்துகிறேன்.
படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.
சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். இதற்காக படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிபடும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.
தயாரிப்பாளர் வினோத்குமார், தீவிரமான செயல்பாடு உடையவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி உத்வேகத்துடன் செயல்படுவாரோ.. அதேபோல் பட குழுவில் அவருடைய செயல்பாடு இருக்கும். இது போன்ற வேகமாகச் செயல்படும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் சொல்வதை நிறைவேற்றுவார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொணர்ந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் பொய்க்கால் குதிரை எனும் திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.