‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்பட விமர்சனம்

விமல்,கருணாஸ் ,மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.மைக்கேல் கே ராஜா இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு : எம்.தியாகராஜன்.ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

விமல் அமரர் ஊர்தி ஓட்டுநர். திருநெல்வேலி சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சென்னையில் விபத்தில் மரணம் அடைகிறார் .அவரது உடலை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி செல்ல வேண்டும்.மரணமடைந்தவருக்கு ஊரில் நல்ல மரியாதை உண்டு அவருக்கு இரண்டு குடும்பங்கள் உண்டு.அவற்றிற்கிடையே பகை உண்டு. இறந்த செய்தி அறிந்து யார் கொள்ளி வைப்பது என்று பிரச்சினை முளைக்கிறது.அமரர் ஊர்தி ஓட்டுநர் விமலின் மனைவியோ பிரசவத்திற்கு காத்திருப்பவர். பண நெருக்கடி. பணத் தேவைக்காக மனைவியை மருத்துவமனையில் வேறொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு வண்டி ஓட்ட வேண்டிய கட்டாயம்.

இறந்த அந்த பெரியவர் உடலை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி செல்கிறார் விமல். போகிற வழியில் வண்டியில் கருணாஸ் ஏறிக் கொள்கிறார் அவர் ஒரு கூத்துக் கலைஞர்.போகிற வழியில் இருவருக்குள்ளும் பேச்சு முற்றி பிரச்சினை வருகிறது.இந்த பிரச்சினையால் வழியில் அந்த பெரியவர் உடலை யாரோ கடத்தி விடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கல்கள் தீர்வாக மாறும் ஒரு திருப்பு முனை நேர்கிறது.அது என்ன? அந்த பெரியவர் உடலை யார் கடத்தினார்கள்? போன்றவற்றிற்கு விடை கூறுவதுதான் ‘ போகும் இடம் வெகு தூரமில்லை’ படத்தின் திரைக்கதையின் பாதை.

இப்படத்தில் குமார் என்கிற அமரர் ஊர்தி ஓட்டுநராக விமல் நடித்துள்ளார்.இதுவரை ஏற்காத வேடம், வெளிப்படுத்தாத முக பாவனைகள் என்று வருகிறார்.அதிகம் பேசாமலேயே பார்வையாளர்களை ஆட்கொள்கிறார்.‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக மாறலாம்.

கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் வருகிறார்.ஜீவனுள்ள அந்தப் பாத்திரத்தில் தனது குணச்சித்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது,பரபரப்பான திரைக்கதைக்குப் பலம் .

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ், படத்தொகுப்பாளர் எம்.தியாகராஜன் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி அவரவர் பணியில் சிறப்பு காட்டியுள்ளது.

அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு  கதாபாத்திரங்களை வைத்து,வாழ்க்கை அனுபவமாக ஒரு படத்தை வழங்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா.

மொத்தத்தில் போகுமிடம் வெகு தூரமில்லை பார்வையாளர்களை ஏமாற்றாத படம் எனலாம்.