ஜீவாவுக்கு அடிக்கடி கொடடாவி வருகிற பிரச்சினை .இந்த கொட்டாவியே கெட்ட ஆவி போல அவரைத் துரத்துகிறது. எனவே வேலைக்குப் போகிற இடத்தில் பிரச்சினை. காதலி நிலைக்கவில்லை. வேலையும் நிலைப்பதில்லை.
இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கொட்டாவியால் கண்பார்வையை பாதிக்கச்செய்ததால் ரவுடி ‘கூலிங்கிளாஸ் குணா’ சிபிராஜின் பகையும் வந்து சேர்கிறது.
ஏன் தனக்கு இது நேர்கிறது என்று ஆராயப் போனால் அது பரம்பரை கொடையாம். அவருடை தாத்தா ‘அதியன் ஓரி’ இப்படி மூச்சடக்கி எதிரிகளை ஊதித்தள்ளிய வரலாறு தெரிகிறது. தாத்தாவின் வரலாறுகளைப் படித்துவிட்டு உறிஞ்சுவதில் ஊதுவதில் திறமை பெறுகிறார் ஜீவா. பிறகு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வரும் ராட்சச கொட்டாவியை எப்படிச் சமாளிக்கிறார் என்பதே கதை. சொல்லும் போதே கொட்டாவி வருகிறதா? இதுதான் ‘போக்கிரிராஜா’ கதை.
பேண்டஸி கதையாகச் சிறுவர்களைக் குறிவைத்து எடுத்துள்ளார்கள் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ பட இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.
சாதாரண கொட்டாவி என்று நினைக்கிற ஒன்று வாயிலிருந்து புயல்போல காற்று வருவதாக மாறுகிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் அசட்டுத்தனமாக இருந்தாலும் சிரித்து வைக்கலாம். ஜீவா குறை வைக்காமல் ஒத்துழைத்துள்ளார். ஹன்சிகா கவர்ச்சி கூட்டி காட்டியுள்ளார் . இருவரும் சாலைகளில் பொறுப்பின்றி சிறுநீர் கழிப்பவர்கள் மீது தண்ணீர் பீச்சியடிப்பது கலகலப்பு.சிபிராஜ் படம் முழுக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு கேரளா வேஷ்டியும் வித்தியாசமான கெட்டப்பில் என கலக்கியிருக்கிறார்.ரவுடியாக மிரட்ட முயன்றுள்ளார். இமான் பாடலை ஹிட்டாக்கியுள்ளார். கண் பார்வை இல்லை என நினைத்து சிபிராஜிடம் ‘முனிஷ்காந்த்’ செய்யும் சேட்டைகள் வெடிச்சிரிப்பை வரவழைக்கும்.
இருந்தாலும் அஸ்திவாரம் இழந்த கட்டடம் போல ஆட்டம் காட்டுகிறது படம். அஸ்திவாரத்தைத் தவறவிட்டு ஆறடுக்கு மாடிவீடு கட்டி என்ன பயன்? சிரிப்பு காட்ட முயன்றது புரிகிறது. திரைக்கதையில் சிரத்தை காட்ட வேண்டாமோ?