
உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மகேஷ்’. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரம் அவருடையது.
M S பாஸ்கர், மகேந்திரன் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பும் பெரிதளவு பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பார்வதி நாயர் தனது கதாபாத்திரத்தில் ஜொலித்துள்ளார்.
தென்காசியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளைஞன் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்படி படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தை ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அழகாக படமாக்கியுள்ளார். சினிமா ரசிகர்களை ‘நிமிர்’ நிச்சயம் சந்தோஷப்படுத்தி ரசிக்கவைக்கும்.

உதயநிதியின் கதாபாத்திரத்தின் வளர்ச்சிக்கு மகேந்திரன் அவர்களின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாகும். மகேந்திரன் சார் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு இந்த படத்தின் கதையை கூறியபொழுது அவர் பரிந்துரைத்த தலைப்பு தான் ‘நிமிர்’. இதை விட பொருத்தமான தலைப்பு இக்கதைக்கு கிடைக்காது.

”நிமிர்” குறித்து நமீதா பிரமோத் பேசுகையில், ” ப்ரியதர்ஷன் சார் போன்ற ஒரு ஜாம்பவானோடு பணிபுரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். உதயநிதி ஸ்டாலின் சாருடன் பணிபுரிந்து ஒரு மறக்க முடியாத, அருமையான அனுபவம். அவரது எளிமையை கண்டு வியந்தேன். எனது கதாபாத்திரம் அவ்வளவு அழகாக வடிவமைத்துள்ளார் ப்ரியதர்ஷன் சார். திரையில் என்னை இவ்வளவு அழகாக நான் இதுவரை பார்த்ததில்லை. படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ரசிகர்கள் ‘நிமிர்’ படத்தை கண்டு மகிழும் நாளை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன் ” என்றார்.