ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த்,பிந்து மாதவி தேஜு அஸ்வினி,லிங்கா , போஸ் வெங்கட், சோனியா,ஷாஜி,ரெடின் கிங்ஸ்லி, வேட்டை முத்துக்குமார், ஹரிப்பிரியா, சந்திரிகா ரவி ,ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,’கண்ணை நம்பாதே’ படங்களுக்குப் பின் இயக்குநர் மு.மாறன் இயக்கி உள்ள படம்.இசை சாம் சி எஸ், ஒளிப்பதிவு கோகுல் பினோய்,தயாரிப்பு -தெய்வ கனி அமல்ராஜ்.
கோயம்புத்தூரில் கூரியர்போன்ற பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஒரு நாள் முக்கியமான பார்சல் ஒன்றைத் திருடு போக விட்டுவிடுகிறார். இதனால், அவரது காதலி தேஜு அஸ்வினியை ஜி.வி.யின் முதலாளியான வேட்டை முத்துக்குமார் கடத்திச் செல்கிறார். பொருளை கொடுத்துவிட்டு பெண்ணை அழைத்துச் செல் என்கிறார்.இது ஒரு பக்கம் என்றால்,இன்னொரு பக்கம், கோவையின் பெரிய தொழிலதிபர் ஸ்ரீகாந்த் – பிந்துமாதவி தம்பதியின் ஒரே மகள் காணாமல் போகிறார். பிறகு அந்த சிறுமி கடத்தப்பட்டது தெரிகிறது.கடத்திச் செல்லப்பட்ட கதாநாயகியும் காணாமல் போன சிறுமியும் ஏன் கடத்தப்பட்டார்கள்?
எப்படி மீட்கப்பட்டார்கள்? இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு விடை விடை தேடிச் செல்வதே ‘பிளாக் மெயில்’ படத்தின் கதை செல்லும் பாதை.
ஜி.வி பிரகாஷ். – தேஜு அஸ்வினி காதலோடு படம் தொடங்குகிறது. முதல் பாதி க்ரைம் த்ரில்லராக விறுவிறுப்பாகச் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரிசையாக முடிச்சிடும் திருப்பங்கள் நம்மைக் கிறுகிறுக்க வைக்கின்றன.யார் ப்ளாக் மெயில் செய்வது என்று தெரியாமல் அதில் ஒரு புதிர் வைத்து அவிழ்ப்பது சுவாரஸ்யம்.
சாமானிய வாலிபராக வருகிறார் ஜி வி பிரகாஷ் குமார். தன் காதலியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தவிக்கும்போதும் அதற்கான வியூகங்கள் அமைக்கும் போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் தேஜு அஸ்வினிக்கு குறைவான காட்சிகளே உள்ளன. கட்டிப்பிடித்துக் காதல் செய்து கண்ணீர் சிந்தி செல்கிறார்.மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் .நடித்துள்ள ஸ்ரீகாந்த், சற்று உக்கிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. தனது மனைவி பிளாக் மெயில் செய்யப்படுவது தெரிந்தும் நிதானம் காட்டுவது ,முதிர்ச்சியாகக் கையாள்வது அவரது பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்துகிறது.
பிந்து மாதவி பயம், தவிப்பு,பிள்ளைப் பாசம், குற்ற உணர்ச்சி என்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டி நடித்துள்ளார்.
லிங்கா, வேட்டை முத்துக்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓரளவு கவனிக்கவும் வைக்கின்றனர். ஜி.வியின் நண்பராக நடித்துள்ளார் ரமேஷ் திலக். பெரிய அளவுக்கு இல்லையென்றாலும் பக்க மேளம் போல் வந்து செல்கிறார்.. இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோரும் வருகிறார்கள்.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.பின்னணி இசைக்குப் பெயர் பெற்ற அவர், த்ரில்லர் கதைக்கேற்ற பின்னணி இசையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது.
சமுதாயத்தின் இருட்டுப் பக்கங்களை பிரதிபலிக்கும் போதைப் பொருள் கடத்தல், பெண்களை ஆபாசப் படம் எடுத்த மிரட்டுதல், திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம், பழிவாங்கல் எனப் பலவும் கதைக்குள் உள்ளன.
பிளாக் மெயில் என்ற எதிர்மறை விஷயத்தை வைத்துக்கொண்டு இந்த கிரைம் திரில்லரை உருவாக்கி இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, பட உருவாக்கம் போன்றவற்றில் விறுவிறுப்பு காட்ட முயன்றுள்ளார் இயக்குநர். சோர்வூட்டாத திரைக்கதை படத்திற்குப் பலம்.
க்ரைம் திரில்லர் படத்தின் ரசிகர்களுக்கு ‘பிளாக்மெயில்’ திருப்தி அளிக்கும்.


