தலைமுறை இடைவெளி என்கிற இழையை எடுத்துக்கொண்டு திரைக்கதையாக்கி ஒரு குடும்பத்துக்கேற்ற அழகான படமாக வந்துள்ளது தான்’ ப.பாண்டி’.
தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல வாழாமல், தங்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும், என்பதை அழகான திரைமொழியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
ராஜ்கிரண் ஓய்வு பெற்ற ஸ்டண்ட்மாஸ்டர். ஓய்வுக்காலத்தில் தனது பிள்ளை பிரசன்னாவின் நிழலில் அரவணைப்பில வாழ்கிறார். தனது பிள்ளைக்கு கட்டுப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் தான் வாழும் இந்தஅடிமை வாழ்க்கை பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். எங்கே போவது என்று தெரியாமல் இருக்கும் அவருக்கு, திடீரென்று தனது முதல் காதலும், காதலியின் நினைவும் வர, உடனே காதலியை தேடிச் செல்கிறார்., தன் காதலியைச் சந்தித்தாரா இல்லையா? அதன் பிறகு என்ன நடந்தது ?என்பது தான் ‘ப.பாண்டி’ படத்தின் கதை.
தனுஷ் இயக்கும் முதல் படம் என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பலம்தான். இருந்தாலும், படத்தில் இடம்பெற்ற அனைத்து சிறப்புகளும் ராஜ்கிரணுக்கே .முழுப்படத்தின் எடையையும் அவரே சுமந்துள்ளார். இது வரை கிராமத்து ராஜாவாக வலம் வந்த அவர், முதல் முறையாக பேண்ட் போட்டு நடித்துள்ளார். .இது அவருக்கு நிச்சயமாக புதுப்பிறவிதான் என்கிற அளவில் உள்ளது அவரது பாத்திரச்சித்தரிப்பு. சபாஷ் தனுஷ்.
ராஜ்கிரணின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்று சற்று கெத்து காட்டி போகிறார். அந்த பாத்திர அளவே அழகு. நடிகர் தனுஷைக் காட்டிலும் இயக்குநர் தனுஷுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாக பார்த்த மடோனா செபஸ்டியன், பாரம்பரிய தோற்றத்தில் வந்து போகிறார். ராஜ்கிரணுக்கு அடுத்தபடியாக ரசிகர்களைக் கவனிக்க வைக்கிறார் ரேவதி .
இயக்குநருக்கேற்ற பாதையில் வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் பயணித்துள்ளன.
ராஜ்கிரண், ரேவதி இடையிலான உறவைச் சொல்லும் காட்சிகள் கத்தி மேல் நடப்பது போன்றவை என்றாலும், அதை இயக்குநராக தனுஷ் கவனமாகவே கையாண்டுள்ளார்.
ரோபோ சங்கரை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. படத்தின் சில நிமிட காட்சிகளில் வந்தாலும், இயக்குநர் கெளதம் மேனனை அவர் அழைக்கும் விதத்தில் திரையரங்கையே குலுங்க குலுங்க வைக்கும். ராஜ்கிரணின் மகனாக நடித்துள்ள பிரசன்னா, சொன்னதை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.ராஜ்கிரணின் பேரன் பேத்திகளாக வரும் அந்த இரு குட்டிச் சுட்டிகளும் அழகு.அனாயாச நடிப்பில் மனதை அள்ளுகின்றனர்.
வயதான காலத்தில், தான் செய்வதை கண்டிக்கும் தனது மகன் பிரசன்னா, இதே விஷயங்களை சிறு வயதில் செய்யும் போது அதை ராஜ்கிரண் எடுத்துக் கொள்ளும் விதத்தை அவ்வபோது காட்சிகளாக நம் கண் முன் நிறுத்தும் தனுஷ்,தலைமுறை இடைவெளிக்கான காரணத்தைப் புரிய வைக்கிறார்.ஒவ்வொரு பிரச்சினையையும் பேரன்,அப்பா,தாத்தா என் மூன்று தலைமுறையினரும் அணுகும் விதம் வேறுபடுவதை அழகான காட்சிகள் மூலம் தனுஷ், காட்டியுள்ளார், இது பாராட்டத்தக்கது.ஆங்காங்கே தெறிக்கும் இயல்பான வசனங்கள் நேர்த்தி.
யாருக்குப் படமெடுப்பது என்பது முக்கியம்.எல்லாருக்குமான படமெடுப்பது சிரமம்.பெற்றோர் பிள்ளைகள் அனைவருக்குமான ஒரு படத்தை எடுத்து உள்ள தனுஷ் முதல் முயற்சியிலேயே நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டார் எனலாம் .