’மகாசேனா’ திரைப்பட விமர்சனம்

விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான்விஜய், கபீர் துகான் சிங் ,மகிமா குப்தா, விஜய் சேயோன், ஆல்ஃப்ரட் ஜோஸ், சிவ கிருஷ்ணா, இலக்கியா மற்றும் பலர் நடித்துள்ளனர். தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு- மனாஸ் பாபு.டி.ஆர், ஏ பிரவீன் குமார் இசையமைத்துள்ளார் .மருதம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

குரங்கணி மலைப்பகுதியில் மலை மேல் உள்ள மக்களுக்கும் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கும் 3000 ஆண்டுகளாகப் பகைமை நிலவுகிறது.அவ்வப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுவதும் கொலை செய்வதும் நடக்கிறது.மேற்பகுதியில் உள்ளவர்களை விட அடிவாரத்தில் உள்ளவர்கள் நாகரீகம் குறைவாக இருக்கிறார்கள்.மேலே உள்ள பழங்குடியினரின் தளபதி போல் இருப்பவர் விமல்.அவர் சேனா என்கிற யானையை வளர்க்கிறார். அவரது பகுதியின் கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன் சிலை மதிப்பு மிக்கது. அதைத் திருடுவதற்கு திட்டமிடுகிறார்கள். வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவார மக்களை வைத்து களவாடுவதற்கு திட்டம் போடுகிறார். இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகள் அல்லியைத் தாக்கிவிடுகிறது. அல்லி இறந்து விடுகிறாள்.கிராமமே பதறுகிறது யானையோ காட்டுக்குள் சென்று விடுகிறது.
யானையைத் தேடி காடு செல்கிறார் விமல்.இந்த பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு அந்த சிலையைத் திருட முயற்சி செய்கிறார்கள்.அவர்கள் முயற்சியை விமல் எப்படி எதிர்கொண்டார் ? காட்டுக்குள் சென்ற யானை என்னவானது ? என்பது தான் 135-32 நிமிடங்கள் கொண்ட ’மகாசேனா’ படத்தின் மீதிக்கதை.

விமல் தான் கதாநாயகன் என்றாலும் அவரே ஒரு பாத்திரம் போல் தான் வருகிறார்.பெரிய முகபாவனைகள் காட்டாமல் எளிமையாக அதைச் செய்து இருக்கிறார்.

நாயகியாக வரும் சிருஷ்டி டாங்கே, தீரமிக்க பெண்ணாக வருவார் என்று எதிர்பார்த்தால் வீரம் வெளிப்படுத்தும் காட்சிகளில் சோடை போய் விடுகிறார்.அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை எடுபடவில்லை. உருவக் கேலி செய்வது தான் நகைச்சுவை என்று அவர் வண்டி ஓட்டுகிறார்.வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லத்தனமும் இல்லாமல் நகைச்சுவையும்இல்லாமல் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறார்.

வில்லனாக வரும் கபிர் துஹான் சிங், அடிவாரத்தைச் சேர்ந்த கங்காவாக வரும் மஹிமா குப்தா, இடும்பனாக வரும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியராக வரும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளியாக வரும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவி சுபாங்கி , விமலின் மகள் சிறுமி இலக்கியா ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு  காடுகள் மலை சூழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு செய்து தன்னை நிரூபித்துள்ளார்.படத்தின் சோர்வு தரும் வேளைகளில் பின்புலங்கள் தான் ஈடு செய்கின்றன.யானை வரும் காட்சிகள் பிரமாண்டம்.

இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை பெரிய படத்தின் தரத்திற்கு உள்ளது.

மூன்று விதமான கதைப் போக்குகளை முடிந்தவரை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்,மலைவாழ் மக்களின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் சுற்றுலாப் பயணம் என்று அந்தப் பகுதிக்கு வரும் கல்லூரி மாணவ மாணவிகளின் அலப்பறைகளும் யோகி பாபு செய்யும் வாய்ச்சவடால் காட்சிகளும் படத்தின் கதை ஓட்டத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை

எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், தான் சொல்ல வந்ததைவிட்டு விட்டு திசை திருப்பங்களில் சிக்கிச் சுழன்று திணறி இருக்கிறார்.திரைக்கதையைக் கவனப்படுத்தி இருந்தால் அவர் பிரபு சாலமனின் தொடர்ச்சியாக மாறி இருப்பார். ஆனால் தவறிவிட்டார்.

மொத்தத்தில், ‘மகாசேனா’ பின்புலத்தை மட்டும் பேசவைக்கும் படமாக மாறி விட்டது..