‘மகாராஜா’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி, அனுராக் காஷயப் ,நட்டி நடராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி,அருள் தாஸ், முனிஷ்காந்த், பேபி ஷைணிக்கா, ராட்சசன் வினோத் சாகர் ,பாய்ஸ் மணிகண்டன், காளையன், பி எல் தேனப்பன், சரவண சுப்பையா, எஸ் எஸ் ஸ்டேன்லி, செல்வன் சேகர், வெற்றிவேல் ராஜா, பாரதிராஜா, மோகன்ராம், ஸ்ரீஜா ரவி, லிஸி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காந்தாரா புகழ் பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து.எடிட்டிங் பிலோமின் ராஜ், சண்டைப் பயிற்சி அனல் அரசு.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரித்திருக்கின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களின் ஐம்பதாவது, நூறாவது படம் என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் .பல படங்கள் அதைப் பூர்த்தி செய்யாமல் போய்விடுவதுண்டு.
ஆனால் விஜய் சேதுபதி எந்த எதிர்பார்ப்பும் எழுப்பாமல் தனது ஐம்பதாவது படத்தை ஒரு திருப்பு முனைப்படமாகக் கொடுத்துள்ளார்.

‘மகளுக்காக பழி தீர்க்கும் அப்பா’ என்கிற ஒரு வரிக் கதை தான் படம் .ஆனால் அதை இழை பிரித்து வெவ்வேறு அடுக்குகளில் வசீகரமான விறுவிறுப்பான படமாகக் கொடுத்துள்ளார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்.

படம் தொடங்கியதும் விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் தனது லட்சுமியைக் காணவில்லை என்று கண்டுபிடித்துத் தருமாறு கூறுகிறார் .கண்டுபிடித்துக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார்.யார் அந்த லட்சுமி ? என்றால் அது தன் மனைவியோ மகளோ இல்லை செல்லப்பிராணியும் இல்லை என்கிறார். பிறகு யார் அது? அதற்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?
விஜய் சேதுபதி மனைவியை இழந்தவர்.ஒரே மகளை பாசத்துடன் வளர்ப்பவர். அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் ?முதற்பாதி சிரிப்பு வரவழைத்தாலும் இரண்டாம் பாதி வேறு திசையில் பயணிக்கிறது.எதிர்பாராத பாதையில் எதிர்பாராத திருப்பங்களுடன் உச்சக்கட்டத்தை நோக்கி டாப் கியரில் பறக்கிறது.இதற்கு மேல் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தால் படம் பார்க்கும் சுவாரசியம் கேட்டு விடும்.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் தனது நடிப்பில் பல உயரங்களைத் தொட்டுள்ளார்.அலட்டல் இல்லாத முகபாவனைகள் மூலம் ஏற்றுள்ள தனது பாத்திரத்தின் மன உணர்வுகளைக் காட்டியுள்ளார்.குறிப்பாக, கிளைமாக்ஸில் உண்மை தெரிந்து அனுராக் கஷ்யப்பிடம் அவர் கலங்கி நிற்கும் இடத்தில், தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.பிரதான பாத்திரம் ஆக அவர் இருப்பதால் மற்றவை எல்லாமே துணைப் பாத்திரங்களாகவே தெரிகின்றன.

அனுராக் காஷ்யப் ஏற்றுள்ள பாத்திரத்துக்கு ஏற்ற நியாயம் செய்துள்ளார். தனது புகழ் பிம்பத்தை வெளிப்படுத்தாமல் பாத்திரத்திற்குள் பொருந்தி உள்ளார்.

அபிராமி வருகிற சில காட்சிகளில் அழுத்தமான தனது அனுபவ முத்திரையைப் பதித்துள்ளார்.கெட்ட போலீசாக வரும் நட்டி நடராஜ் தனது அனாயாசமான நடிப்பை வழங்கி உள்ளார்.
அருள்தாஸ், முனீஷ்காந்த் அவரது அணியில் வருகிறார்கள்.

இதுவரை அசட்டுக் காமெடிகளில் எரிச்சலூட்டி வந்த சிங்கம் புலிக்கு இதில் வித்தியாசமான வேடம். முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாம் பாதியில் அடப்பாவியாகவும் சொல்ல வைக்கிறார்.அவருக்கு நல்லதொரு திசை மாற்றம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மறுப்பிரவேசம் செய்துள்ள மம்தா மோகன்தாஸ் படத்தில் வரும் பகுதி குறைவுதான் என்றாலும் மனதில் பதிகிறார்.
படத்தின் பயணத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை வழங்கி உள்ளார் தினேஷ் புருஷோத்தமன்.காந்தாரா புகழ் இசை அமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் பாடல்களை விட பின்னணியில் பின்னியுள்ளார்.

இந்தப் படம் ஒரு பழிவாங்கும் கதை தான் என்றாலும், வெட்டுக்குத்து ரத்தம் என்று இருந்தாலும் படம் இறுதியாகச் சொல்வது அன்பு காட்டுங்கள் என்பதைத்தான்.சக மனிதர்களிடம் உடன் வாழும் உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது. அப்படிச் சக மனிதர்கள் மீதும் சக உயிர்கள் மீதும் அன்பு செலுத்துபவன் தான் மகாராஜா என்பதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி.
மொத்தத்தில் இந்தத் திரைப்படம் திரையரங்கு அனுபவத்தைத் திருப்தியாக்கும்.