‘மதராஸி ‘திரைப்பட விமர்சனம்

சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜுமேனன், விக்ராந்த் ,ஷபீர் கல்லாரக்கல், லிவிங்ஸ்டன், .தலைவாசல் விஜய், வினோதினி வைத்தியநாதன், சந்தான பாரதி, ரிஷி ரித்விக் நடித்துள்ளனர்.ஏ. ஆர் .முருகதாஸ் எழுதி இயக்கியுள்ளார். சுதீப் இளமோன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு லட்சுமி மூவிஸ்.

ஏ. ஆர் .முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு அடுத்ததாக நல்லதொரு வெற்றி தேவையாக இருக்கும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்தக் கூட்டணியில் இந்த ‘மதராஸி’ படம் உருவாகி வெளியாகி உள்ளது.

படத்தின் கதை என்ன என்று கேட்டால்,தமிழ்நாட்டில் துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விட்டு,அதை வணிகமாக்க ஒரு சட்ட விரோதக் கும்பல் முயற்சி செய்கிறது. துப்பாக்கிகளை கன்டெய்னர்களில் கடத்திக் கொண்டு ஆந்திர எல்லை கடந்து தமிழகத்தில் நுழைய முயல்கிறது.ஒரு கட்டத்தில் சிறிய அளவில் தமிழகப் பகுதிகளில் துப்பாக்கிகளை ரகசியமாகப் பரப்பி , வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன.அவர்களைப் பிடிப்பதற்கு காவல்துறை வலை விரித்து வியூகம் அமைத்திருக்கிறது.ஆனால் குற்றவாளிகளின் நெட்வொர்க் பெரிதாக உள்ளது. நாசக்கார கும்பலுக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தன் காதலி தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கூறிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். மேலிருந்து குதித்தும் விடுகிறார்.அதிர்ஷ்டவசமாகக் காயங்களோடு தப்பிக்கிறார். அந்த ஆயுதக் கடத்தல் நடவடிக்கையில் காயமடைந்த போலீஸ் உயர் அதிகாரி பிஜுமேனனும் சிவகார்த்திகேயனும் ஒரே ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். அப்போது இருவரிடையே பழக்கம் ஏற்படுகிறது. தன்னை ஏன் காப்பாற்றினார்கள் என்று கேட்கிறார் சிவா. தான் சாகத்தான் வேண்டும், சாகத்தான் வேண்டும் என்கிறார் .அப்போது அந்த பயங்கரவாத தடுப்பு பணியில் இருக்கும் என்.ஐ.ஏ அதிகாரி பிஜு மேனன் ‘ஒரு மூன்று நாள் உன் சாவைத் தள்ளிப் போடு ‘என்று அவரைத் தனது வேட்டை திட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்.அவரை இணைத்துக் கொண்டு திட்டங்கள் தீட்டுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் சாதாரணமான மனநிலை உள்ளவர் அல்ல, 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு பிறகு அவர் ஒரு Fregoli Delusion பிரச்சினை கொண்ட மன நோயாளியாக மாறி இருப்பது தெரிகிறது .அதன்படி பாதிக்கப்படுபவர்களை எல்லாமே தனக்குத் தெரிந்தவர்களாக நினைத்துக் கொள்வார்.
அது அவரது பெற்றோரை இழந்த விபத்துக்குப் பிறகு ஏற்பட்டுவிட்ட மனச்சிக்கல் என்பது காவல்துறைக்குத் தெரிகிறது.இருந்தாலும் அவரை இணைத்துக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். அந்தத் துப்பாக்கி கடத்தல் காரர்களைப் பிடித்தார்களா? சிவகார்த்திகேயன் தனது காதலி ருக்மிணி வசந்த்துடன் சேர்ந்தாரா என்பதே 162.33 நிமிடங்கள் கொண்ட ‘மதராஸி’ படத்தின் மீதிக் கதை. 

முதல் 10 நிமிடங்களிலேயே கண்களை மிரட்டும் துரத்தல் காட்சிகள் என்று தொடங்கி ‘மதராஸி’ படத்தின் முதல் பாதி மெல்ல வேகம் எடுத்தது டாப் கியரில் பயணம் செய்து இடைவேளை வரை வந்து நிற்கிறது.முதல் பாதியில் ஆயுதக் கடத்தல் கும்பல்களின் கொடூர திட்டங்கள், போலீஸ் வியூகங்கள், மோதல்கள், சிவகார்த்திகேயன் ருக்மிணி வசந்த் காதல், சிவகார்த்திகேயனின் பெற்றோருக்கு ஏற்படும் விபத்து என்று கலர்ஃபுல், மகிழ்ச்சி ,சோகம் ,பரபரப்பு என்று சென்று முடிகிறது.இரண்டாம் பாதி வேகம் எடுக்கிறது.இரண்டாம் பாதியில் வில்லன் வித்யுத் ஜாம்வல், சிவகார்த்திகேயன் மோதும் காட்சிகள் நம் முழு கவனத்தை ஈர்க்கின்றன.மோதல் நிகழும் இடங்களும் அதன் பின்னணியும் மட்டுமல்ல மோதும் விதமும் ஆக்ஷன் விருந்தாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் ரகுராம் பாத்திரத்தில் வருகிறார். மிகை நடிப்பு காட்டாமல் அளவோடு நடித்துள்ளது இதம்.மாலதி பாத்திரத்தில் வரும் ருக்மிணி வசந்த்தின் அழகில் சரணடைவதும் அவருக்காக எதையும் செய்யும் மனநிலைக்கு வருவதும், ஆக்சன் காட்சிகளில் ஆவேசம் காட்டியுள்ளதும் மனம் பிறழ்ந்தவராக பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் தனக்குத் தெரிந்தவர்களாக நினைத்துச் செயல்படுவதும் என்று அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கும் விதம் நன்று.அந்த வகையில் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மாலதி பாத்திரத்தில் வரும் ருக்மிணி வசந்த் நல்ல முக வசீகரம், பொருத்தமான உடல் மொழி ,தேவையான நடிப்பு என்று கவர்கிறார்.ஹேப்பி ஸ்ட்ரீட்டில் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு திறந்தவெளிப் பாடகியாக வருகிற போதும்,பல் மருத்துவ பயிற்சி மருத்துவராக மருத்துவமனையில் செயல்படும் போதும்,சிவகார்த்திகேயனின் குறையை ஏற்றுக்கொண்டு பரிவோடு அவர் மீது காதலைப் பொழியும்போதும் பிறகு சிவகார்த்திகேயனின் அபாயம் கண்டு பதறும்போதும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

அரக்க குணம் கொண்டு இரக்கமே இல்லாத பாத்திரத்தில் ஆயுதக் கடத்தல் செய்யும் முக்கிய புள்ளியாக வரும் வித்யுத் ஜாம்வலின் நடிப்பு மிரட்டல்.பிஜு மேனனும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.பொறுப்பும் பதற்றமும் கலந்த அந்த பயங்கரவாத தடுப்பு பணி செய்யும் அதிகாரி பாத்திரத்தில் நன்றாகவே வெளிப்படுகிறார்.ஷபீர் கல்லாரக் கல் ஆயுதக் கடத்தல் கும்பலை இயக்குபவராக வருகிறார், வில்லத்தன நடிப்பில் மிரட்டுகிறார்.பிஜுமேனனின் மகனாக விக்ராந்த் வந்து இறந்து பார்ப்பவர் மனதில் பதிந்து போகிறார். லிவிங்ஸ்டன், .தலைவாசல் விஜய், வினோதினி வைத்தியநாதன், சந்தான பாரதி  போன்றோரும் துணைப் பாத்திரங்களில் வந்து தங்கள் நடிப்புப் பங்கையாற்றியுள்ளார்கள்.

படத்தின் பிரம்மாண்டத்தை கண் முன் நிறுத்துவது சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு. படத்தில் பரபரப்பை ஒரு நொடி கூட தவறவிடாமல் நமக்கு கடத்திக் கொண்டே இருப்பது அனிருத்தின் இசை. இடையில் இழைந்தோடும் பாடல்களும் உள்ளன.

எப்போதும் ஏ ஆர் முருகதாஸ் ஒரு சமூகக் கருத்தைச் சொல்பவர் .மது,போதை மருந்து கலாச்சாரத்தைப் போல் மெல்ல பரவி விஸ்வரூபம் எடுக்கும் அபாயமாக ஆயுதக்கடத்தல் என்பதும் மாறிவிடக்கூடும் என்பதைக் கூறி எச்சரித்து இருக்கிறார். சமூகத்தில் இப்போது அடிமைப்படுத்தி இருக்கும் செல்பி மோகத்தையும் ரீல்ஸ் மோகத்தையும் காட்டும் வகையில் காட்சிகளை வைத்திருக்கிறார். இன்று சமூக நோயாக மாறி இருக்கும் ஒருவர் செய்தால் அதனைத் தொடர்ந்து அத்தனை பேரும் அவர் பக்கம் சேர்ந்து கொள்ளும் மந்தை  மனப்பான்மையையும் கிண்டல் செய்துள்ளார்.

ஒரு வணிக ரீதியான வெற்றிப்படமாக்க வேண்டும் என்று சில தர்க்க சமரசங்களைச் செய்து கொண்டு தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே, சின்ன சின்ன மீறல்களைக் கடந்து படத்தை ரசிக்க வேண்டும்.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு நல்லதொரு ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை