விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் சோனு சூட், சந்தானம், மனோபாலா,ஆர்யா, சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, லொள்ளு சபா சுவாமிநாதன் ,ஆர் சுந்தர்ராஜன், நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளனர்.சுந்தர் சி ஏற்றி உள்ளார் விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.
எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் நான் ஒருவன் உதவி செய்ய இருக்கிறேன் .ஏனென்றால் நான் ‘நண்பேண்டா’ என்கிற விதத்தில் நண்பர்களுக்காக உதவி செய்யும் கதாநாயகனின் கதை இது. இடையில் காதல், மோதல், சண்டைகள், ஆக்சன் சென்டிமென்ட் என்று அனைத்தையும் கலந்து கட்டி ஒரு முழு நீள மசாலாப் படமாக இயக்கி உள்ளார் சுந்தர் சி. மசாலாவின் மூலப்பொருட்கள் பழையதாக இருந்தாலும் மணம் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகன் விஷால் திருமணம் ஒன்றில் தனது பால்ய கால நண்பர்களைச் சந்திக்கிறார்.அவர் சந்திக்கும் இளமைக்கால நண்பர்கள் அனைவரும் ஏதோ ஒரு பிரச்சினையில் இருப்பதும் அதற்குக் காரணமாக ஒரு வில்லன் இருப்பதும் தெரிகிறது.அந்த வில்லன் ஒரு தொழிலதிபர். அதிகாரத்தையும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு அனைவரையும் ஆட்டிப் படைப்பதும் தெரிகிறது .அவரிடம் சமாதானமாகப் பேச விஷால் முயற்சி செய்கிறார். ஆனால் அவர் விஷாலை மதிக்காமல் அவமானப்படுத்துகிறார். அவரை எப்படி வழிக்குக் கொண்டு வந்து நண்பர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறார் என்பது தான் ‘மத கஜ ராஜா’ படத்தின் கதை.
இந்தப் படம் எடுக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, எனவே விஷால் இளமையாக தோன்றுகிறார்.அது மட்டுமல்ல நகைச்சுவை ஆக்சன் காட்சிகளிலும் சுவாரசியம் காட்டியுள்ளார். உடன் நடிக்கும் சக நட்சத்திரங்களுக்கும் அவர்கள் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பை கொடுத்துள்ளார். நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் இருவருக்கும் நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சி காட்டுவதிலும் விஷாலுடன் நெருக்கமாக இருப்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் சோனு சூட், வழக்கமான பணம் அதிகாரம் கொண்ட திமிரைக் காட்டும் நபராக வருகிறார். ஒரு காலத்தில் சந்தானத்தின் நகைச்சுவை எரிச்சல் ஊட்டும் வகையில் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவரைப் புதிதாக பார்ப்பது போல் உள்ளது .அதுமட்டுமல்ல விஷாலுடன் ,சக நடிகர்களுடன் தோன்றும் காட்சிகள் கலகலப்பாக சிரிப்பு மூட்டும் வகையில் உள்ளன. மனோபாலா, லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் ஆகியோருடன் சந்தானம் கூட்டணி அமைக்கும் போது காமெடி காட்சிகள் சரவெடி சிரிப்பே வர வைப்பவை.குறிப்பாக மனோபாலா பிணமாகத் தோன்றும் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கும் சிரிப்பு ரகம்.
ஆர்யா கெளரவ வேடத்தில் வருகிறார். விஷாலின் நண்பர்களாக வரும் சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் கலர்ஃபுல் கமர்சியல் குத்துகள். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் காட்சிகளில் வண்ணங்களை வாரியியிறைத்து கேமராவை சுழலுவிட்டுக் கவனத்தை ஈர்க்கிறார்.
எந்தக் காட்சியில் இருந்து படத்தைப் பார்த்தாலும் அந்தக் காட்சியிலேயே சிரிக்க ஆரம்பித்து விடுவோம் .அந்த அளவிற்குக் கலகலப்பையும் யிறைத்து பிசிறில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீகாந்த்.என்.பி.
படத்தில் காமெடி தூக்கலாக உள்ளன என்பதை ஒப்புக் கொள்ளலாம் .சில இடங்களில் காம நெடியும் கூட உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான பாணியில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு எளிமையான கருவுக்கு, அனைத்து தரப்பினரும் சிரிக்க கூடிய விதத்தில் இயக்கியிருக்கிறார். இந்த கலகல அனுபவத்திற்கு பக்கபலமாக பெரிய பெரிய அரங்கமைப்புகள் புதிய புதிய லொகேஷன்கள் என்று காட்சிகளில் தாராளம் காட்டியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.
புதிய புதிய முயற்சிகள் மத்தியில் சைக்கிள் கேப்பில் உள்ளே நுழைந்து ஒரு பெரிய கமர்சியல் ஹிட் கொடுப்பது சுந்தர் சியின் வழக்கம் இந்தப் படத்திலும் அதைச் செய்திருக்கிறார்.அந்த அளவிற்கு எந்த தர்க்கக் கேள்விகளையும் மறந்து மெய்மறந்து சிரிக்க வைத்து கலகலப்பூட்டி இருக்கிறார் சுந்தர் சி.
போரடிக்காத கலகல திரை அரங்க அனுபவத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் படம் தான் இந்த ‘மத கஜ ராஜா’ .