தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு செயற்கரிய பணியையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, நடிகர் சிலம்பரசன், விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக, ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கூறியிருந்தார். அப்படி கூறியதுடன் நில்லாமல் தற்போது அதை செய்தும் காட்டியுள்ளார் சிலம்பரசன்.
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இன்று படிப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து ஏற்கெனவே தான் கூறியபடி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து பத்து மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு தனது அஞ்சலியை செலுத்தினார் சிலம்பரசன். இந்த நிகழ்வில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஸ்டன்ட் சில்வா, ஒளிப்பதிவாளர், இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.. இந்த நிகழ்வை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், தொடர்ந்து மரங்களை நடுவதில் தான் ஆர்வம் காட்டப்போவதாக கூறிய நடிகர் சிலம்பரசன், தனது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் ஆளுக்கொரு மரம் நட்டு, விவேக் கண்ட கனவை நனவாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.