‘மரியா’ திரைப்பட விமர்சனம்

சாய்ஶ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன்,சித்து குமரேசன், சுதா புஷ்பா, அபிநயா, விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன் நடித்துள்ளனர். ஹரி கே. சுதன் எழுதி இயக்கியுள்ளார்.மணி சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த் கோபாலகிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்சன் இசையமைத்துள்ளனர் காமேஷ் கே நிசார், ஷெரீப் ஏ படத்தொகுப்பு செய்துள்ளனர்.

மரியா ஒரு கன்னியாஸ்திரி.ஒரு கிறித்தவ கான்வென்ட்டில் சேவை செய்கிறாள்.சில நாட்கள் தெரிந்த உறவுக்காரப்பெண் ஆக்னஸ் அறையில் தங்குகிறாள். அங்கே இரண்டு ஜோடிகள் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் லிவிங் டுகெதர் விதத்தில்  திருமணம் செய்யாமல் ஒரு ஜோடியாக ஒன்றாக வசிக்கிறார்கள்.இவளை சிஸ்டர் சிஸ்டர் என்று மரியாதையாக அழைக்கிறார்கள்.ஆனால்  சர்வ சுதந்திரமாக அவர்கள் இருப்பதைப் பார்த்து தான் ஒரு கட்டுக்குள் இருப்பதாக மரியாவுக்குத் தோன்றுகிறது. மெல்ல மெல்ல காம உணர்வு தலை காட்டுகிறது. அதுவே குற்ற உணர்ச்சியாகி ஆண்டவரிடம் மன்னிப்பு கோருகிறாள். ஆனாலும் அதை மீறி காமம் பரவுகிறது. ஒரு நாள் மரியா,ஆக்னஸின் காதலனின் ஸ்பரிசத்தை உணர்கிறாள். மனதில் தீ பற்றிக் சொல்கிறது.அதிலிருந்து அவளால் எளிதாய் மீள முடியவில்லை.ஒரு கட்டத்தில் கன்னியாஸ்திரி சேவையைத் துறக்க முடிவு செய்கிறாள்.சாதாரண உலகியல் வாழ்க்கை வாழ விரும்புகிறாள்.

‘எதுவுமே செய்யாமல் சொர்க்கத்துக்கு போவதை விட எல்லாமும் பண்ணிட்டு நரகத்துக்கு போகலாம் ‘ என்று முடிவெடுக்கிறாள். ஊருக்குப் போய் இந்த விருப்பத்தை அம்மாவிடம் சொன்னபோது அவள் அதிர்ச்சியடைகிறாள்.அம்மாஅந்த முடிவை எதிர்ப்பதுடன் திட்டி வீட்டை விட்டு விரட்டியும் அடிக்கிறாள். மீண்டும் ஆக்னஸ் அறைக்கு வருகிறாள்.இந்த இந்த மன மாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டு அதிர்கிறார்கள். அதன் பிறகு அதுவரைக்கும் சிஸ்டர் என மரியாதை கொடுத்தவர்களும் அவமரியாதை செய்கிறார்கள். ஒரு நாள் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த ஆக்னஸ் சீறி எழுந்து எட்டி உதைத்து தாக்குகிறாள்; அவமானப்படுத்துகிறாள்.அதற்குப் பிறகு மரியா எடுத்த முடிவு என்பது தான் மீதிக்கதை.

‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று’ என்றாள் ஒளவை.கணவன், மனைவி குடும்பம் குடித்தனம் பிள்ளைகள் என்று உலகில் வாழ்வது கூட ஒரு அறம் தான் என்பது இதன் கருத்து.
பசி, கோபம் போல மனிதனின் ஆதார உணர்ச்சியாக இருப்பது காமம் அதை தடுப்பது பாவம் என்று சொல்வதுண்டு.

அனைத்தையும் அடக்கிக் கொண்டு கன்னியாஸ்திரி ஆக இருக்கும் ஒரு பெண்ணின் அக விடுதலைப் பற்றிப் படம் பேசினாலும் சொல்லியிருந்த விதத்தில் குழப்பம் மிகுந்து நேர்கோட்டுப் பாதையில் இருந்து கதை  நழுவிச் செல்கிறது.

ஒன்று அவர் உலகியல் பாதைக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் பழைய பணிக்குச் செல்ல வேண்டும்.சாத்தானிசம் என்கிற புதிய குழப்பத்துக்குள் ஆழ்த்தி அவளை இரண்டும் கெட்ட நிலையில் திரிசங்கு சொர்க்கத்தில் விட்டுள்ளார் இயக்குநர்.

மற்றபடி பட உருவாக்கத்திலும் உணர்வுகளைக் கடத்துவதிலும் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தை முழுக்க முழுக்க தாங்கி நிற்பது கன்னியாஸ்திரி மரியாவாக நடித்துள்ள சாய் ஸ்ரீ பிரபாகரன் தான். மெல்லிய அசைவுகளின் மூலமே அனைத்து உணர்வுகளையும் கடத்தி விடுகிறார்.அவர் வயதுக்கு மீறிய பாத்திரம் சுமந்தாலும் அதற்கு நியாயம் செய்துள்ளார்.
சித்து குமரேசன், சுதாபுஷ்பா, அபிநயா, விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன் என உடன் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பாத்திரங்களைக் குறையின்றி செய்துள்ளார்கள்.

சிறிய பட்ஜெட்டில் படம் உருவாகி இருந்தாலும் அந்தக் குறை தெரியாமல் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றனர். அதற்குக் காரணம் படத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் காமம் தான்.அதுவே கண்ணுக்குத் தெரியாத பாத்திரமாய் கதையை நகர்த்துகிறது.

இடையில் சாத்தானிசம் என்று பாவல் நவகீதன் சம்பந்தப்பட்டு வரும் காட்சிகள் அவ்வளவு ஒட்டாமல் உள்ளன.மொத்தத்தில் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் குழம்பி ஏதோ ஒன்றைச் சொன்ன கதையாக மரியா முடிகிறது.
இது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.