‘மருதம்’ திரைப்பட விமர்சனம்

விதார்த், ரக்ஷனா , அருள் தாஸ் ,லொள்ளு சபா மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா நடித்துள்ளனர்.வி .கஜேந்திரன் எழுதி இயக்கி உள்ளார் . என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார் .அருள் கே. சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி சந்துரு படத்தொகுப்பு செய்துள்ளார்.தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்,தயாரிப்பு : சி. வெங்கடேசன்.

வயலும் வயல் சார்ந்த பகுதியையும் மருதம் என்பார்கள். மருத நிலப் பின்னணியில் இந்தக் கதை உருவாகியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் கல்புதூர் கிராமத்தில் விவசாயி கன்னியப்பனாக வாழ்பவர் விதார்த்.அவர் மனைவி பெயர் சிந்தாமல்லி,
ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையை எல்கேஜி யில் சேர்க்க மூன்று லட்சம் காய்கறி வியாபாரி அருள்தாஸ் இடம் கடன் வாங்குகிறார்.
ஒரு நாள் அவரது நிலத்தைச் சுற்றி கம்பி வேலி போடுகிறார்கள். அதிர்ந்து போன விதார்த் அவர்களிடம் யார்  என்று விசாரிக்கிறார்.நாங்கள் நிலத்தை வாங்கி விட்டோம் என்கிற போது ஆவேசமாகிறார்.அவர்களிடம் சண்டை போடுகிறார். அந்த நிலத்தை வைத்து வங்கியில் கடன் வாங்கி இருந்ததாகவும் அது வட்டி அதிகமாகி மூழ்கியதால் ஏலம் விடப்பட்டு தாங்கள் வாங்கியதாகவும் கூறுகிறார்கள். இது அவர் அப்பா காலத்தில் வாங்கியதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என்று மறுக்கிறார். பிறகுதான் தெரிகிறது இது ஒரு மோசடி என்று.போலி ஆவணங்களை வைத்து வங்கியில் மோசடி செய்து அந்த நிலத்தை விற்றிருக்கிறார்கள் என்றுதெரிகிறது. இப்படிப் பாதிக்கப்பட்ட விவசாயி தீக்குளித்துச் சாகிறார்.இந்தச் சமூகம் வேடிக்கை தான் பார்க்கிறது,தோண்ட தோண்ட பல விவசாயிகள் இப்படிப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது .அதற்குக் காரணமானவர்களைத் தேடி செல்லும் விதார்த்தின் பயணமும் அவர் எதிர்கொள்ளும் அவமானங்களும் போராட்டங்களும் தான் 103 .23 நிமிடங்கள் கொண்ட இந்த’மருதம்’  திரைப் படத்தின் கதை செல்லும் பாதை.

நாம் நில அபகரிப்பு, பண மோசடி ,வங்கி கடன் மோசடி பற்றி எல்லாம் செய்திகளில் படித்துவிட்டுக் கடந்து போய்விடுகிறோம். ஆனால்  அவரவருக்கு வந்தால் தான் அதன் வலியும் வேதனையும் தெரியும். இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு இயக்குநர் கஜேந்திரன் மிக யதார்த்தமாக ஒரு முழுப் படமாக உருவாக்கி இருக்கிறார்.

நடிகர் விதார்த் படத்தில் அந்த விவசாயி கன்னியப்பனாகவே வாழ்ந்திருக்கிறார். ஏமாற்றப்பட்டது தெரிந்து பரிதவித்து பலரிடம் அவர் புலம்புவதும் திக்குத் தெரியாமல் விழிப்பதும் குரலை தழைத்து அவர் பேசுவதும் சில கட்டங்களில் பொங்கி எழுவதும் என்று அந்த அசல் கன்னியப்பனாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவி சிந்தாமல்லியாக வரும் நடிகை ரக்ஷனா பொலிவான தோற்றத்திலும் தளர்வான சட்டை , புடவை என்று அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்.

கடைக்காரராக வரும் அருள்தாஸ் இயல்பாக கண்டிப்பு காட்டுகிறார். அவருக்கு பொருத்தமான பாத்திரம் தான். படத்தில் வக்கீல் கந்தனாக வரும் தினந்தோறும் நாகராஜ் கவனிக்க வைக்கிறார் .மோசடி வங்கிக் காரர் ராஜசேகராக வரும் சரவண சுப்பையா நடிப்பிலும் குறை வைக்கவில்லை.படத்தில் விதார்த்துக்கு உதவுகிற வங்கியில் வேலை பார்க்கும் பெண்ணும் மனதில் பதிகிறார்.லொள்ளு சபா மாறன் சிரிக்க வைக்காமல் அனுதாபப்பட வைக்கிறார். இப்படி படத்தில் தோன்றும் அனைத்துப் பாத்திரங்களும் நிஜமாந்தர்களாகவே உணர வைக்கிறார்கள்.

படத்தின் வழக்கு சார்ந்து விதார்த் தேடிச் செல்லும் விவசாயிகள் அனைவரும் நிஜமாந்தர்களாகவே நடிக்க வைத்துள்ளார்கள்.

நில மோசடியில் பாதிக்கப்பட்ட அப்பாவி விவசாயிக்கு நீதி கிடைக்கும் பயணத்தில் நாம் உடன் செல்கிற உணர்வை அளித்துள்ளார் இயக்குநர். மொத்தத்தில் இந்தப் படம் ஒரு பாதிக்கப்பட்டவனின் வாழ்க்கையை இயல்பு மாறாமல் கூறியிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவும் இசையும் இணைந்து இயக்குநருடன் பயணம் செய்துள்ளன.குறிப்பாக ரகுநந்தன் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம்.

200 கோடி ரூ. 300 கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்கள் ,பெரிய நட்சத்திர நாயகன் நடிக்கும் படங்கள் எல்லாமே வெட்டு, குத்து, ரத்தம், போதை மருந்து, குடி, பாலியல் பலாத்காரம் என்று ரசிகர்களிடம் தீமைகளைப் பரிமாறும் இந்தத் திரையுலகில் தான் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் அநீதி இழைக்கப்பட்டவனின் கதையைக் கண்ணீரோடு கூறி உள்ளது.  

மொத்தத்தில் இந்தப் படம் மருத நிலப் பயணத்தில் ஒரு விவசாயின் நீதி கேட்டு செல்லும் நெடிய பயணத்தைப் பதிவு செய்துள்ளது.