சமூக அழுத்தம் மனிதனை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்லும் கதை இது.அதாவது கிராமங்களில் அடுத்தவர்களுக்காக மற்றவர்களுக்காக இந்த ஊர் என்ன சொல்லும் சமூகம் என்ன சொல்லும் என்பதற்காகத் தனது தகுதிக்கு மீறி குடும்ப நிகழ்ச்சிகளில் செலவு செய்து அதனால் நலிந்தவர்கள் பல பேர்.பிறருக்காகவும் வெற்றுக் கெளரவத்துக்காகவும் வீம்புக்காகவும் செலவுகள் செய்து பொருளாதார இழப்புகளையும் மன வருத்தங்களையும் சம்பாதிப்பது உண்டு.
அப்படி உறவுகளுக்குச் செய்முறை செய்வதில் உள்ள சிக்கல்களையும் போராட்டங்களையும் பற்றிப் பேசுகிறது இந்த ’மருத’ படம்.
சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்குச் சரவணன் வீம்பிற்காக அதிகமாகச் செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை அவமானப்படுத்துகிறார் அவரு மனம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனால் ஆவேசமடையும் விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று இருக்கிறார். இந்நிலையில் அனைத்தையும் மறந்து விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்கிறார்கள். இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஜி.ஆர்.எஸ். இவர் பாரதிராஜாவின் உதவியாளர். மண் மணம் மாறாமல் தன் குருநாதர் பாணியிலேயே படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார். இவருடைய நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. படம் இயக்கும் வேலையை மட்டும் அவர் பார்க்கலாம் என்று இந்தப் படம் செய்தி சொல்கிறது அவருக்கு.ஆனால், படத்தை இயக்கியதில் கவனிக்க வைத்திருக்கிறார்.
ஜிஆர்எஸ் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஏற்கெனவே பாசத் தங்கையாக கிழக்குச் சீமையிலே படத்தில் அசத்தியவர் தான் ராதிகா.
இந்தப் பாத்திரம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.அண்ணன் பாசம், தாய் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு இணையாகப் போட்டி போட்டு விஜி சந்திரசேகரும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் . விஜி சந்திரசேகர் நல்ல நடிகைதான் .அளவறிந்து நடிக்க வைத்து வாங்கினால் அற்புதமான நடிப்பைத் தருபவர். இதில் அளவைக் கூட்டி விட்டார்கள். அதுதான் பிரச்சினை. எனவே இவருடைய மிரட்டலான நடிப்பு ஒரு சில இடங்களில் மிகையாக இருக்கிறது.
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார் சித்தப்பு சரவணன். மாரிமுத்து மற்றும் நாயகியாக நடித்திருக்கும் லவ்லின் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.மாரிமுத்து சமீபகாலமாக நல்ல குணச்சித்திர நடிகராக வளர்கிறார்.
பங்கேற்றுள்ள நடிகர்கள் அனைவரும் நடிப்பில் கைதேர்ந்தவர்கள் என்று சில காட்சிகளில் மெய்ப்பிக்கின்ற வாய்ப்புள்ள இடம் அமைந்து இருக்கிறது .
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து இருக்கிறது.
செய்முறை என்கிற ஒரு நூலிழை விஷயத்தை எடுத்துக்கொண்டு ஒரு முழுப் படமாக விரித்து உருவாக்கியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் சில இடங்களில் மிகைப்படுத்தல்களால் சலிப்பு நேர்வதைத் தவிர்க்க முடியவில்லை.
படத்தில் பின்பாதி நீளத்தை குறைத்து பாத்திரங்களின் மிகை நடிப்பைக் கட்டுப்படுத்தி இருந்தால் படம் கட்டுக்குள் அடங்கி ரசிக்க வைத்திருக்கும்.
புதுவகை விருந்து தான் என்றாலும் திகட்டுவதை உணர வைக்கிறது.