அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார் ,கிஷோர் ராஜ்குமார், சங்கர்குரு ராஜா, வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர்.இயக்கம் டி சுரேஷ்குமார், ஒளிப்பதிவு ஜெ. கல்யாண், இசை விஷ்ணு பிரசாத் ,ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் ஸ்ரீவித்யா ராஜேஷ், பி. ராஜேஷ்குமார் தயாரித்துள்ளனர்.
பெரும்பாலான சினிமா கதாநாயகர்களின் ஆதர்ச குணமான வேலைக்குச் செல்லாமல் பொறுப்பற்றுத் திரியும் போக்கு கொண்டவர்தான் நாயகன் அன்சன் பால்.பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாகத் திரிகிறார்.ஆனால் நாயகி ரெபா ஜான் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்கும் கனவில் இருக்கிறார்.அப்படிப்பட்ட நாயகன் இப்படிப்பட்ட நாயகியை ஒரு மழை நாளில்,நாயகி மழையில் நனைவதைப் பார்த்ததும் காதல் கொள்கிறார்.தனது கனவை முன்னிறுத்தி நாயகி அந்த காதலை நிராகரிக்கிறார்.நாயகி பாரம்பரியமிக்க பிராமணர், நாயகனோ கிறிஸ்தவர். இது ஒரு பக்கம் காதலுக்கு குறுக்கே உள்ள தடை. ஆனாலும் நாயகி பின்னால் தொடர்கிறார் நாயகன்.மனம் கனியட்டும் என்று பொறுமையுடன் காத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் அவரது தீவிரத்தை எண்ணி காதலை ஏற்கும் மனநிலை நாயகிக்கு வருகிறது.
அப்படிப்பட்ட சூழலில் இருவரும் பைக்கில் செல்லும் போது விபத்துக்குள்ளாகிறார்கள். அவர்கள் பிழைத்தார்களா? அவர்கள் காதல் பிழைத்ததா? என்பதுதான் மழையில் நனைகிறேன் படத்தின் மீதிக் கதை.
மலையாளத்தில் சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் சற்றே அறிமுகம் ஆகி இருக்கும் அன்சல் பால், நாயகனாக நடித்துள்ளார். தனது பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார். பணக்கார வீட்டுப் பையனாக மனம் போன போக்கில் விடுதலைப் பறவையாக வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக்கொண்டு இருப்பவராகவும், காதலுக்காக சிரமங்களை ஏற்றுக் கொள்ளும் மனமுள்ளவராகவும் தனது நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் ரெபா ஜான், அழகு மற்றும் நடிப்பு என இரண்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகனின் அப்பாவாக வரும் மேத்யூ வர்கீஸ் , அம்மாவாக வரும் அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக வரும் சங்கர்குரு ராஜா, நாயகனின் நண்பராக வரும் கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.
விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை. ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் வண்ணமயம் காட்டுகின்றன.
விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோரது வசனங்கள் காதல் காட்சிகளுக்குப் பலம் சேர்க்கின்றன.கதை எழுதி இயக்கியிருக்கிற டி.சுரேஷ் குமார், மென்மையான காதல் கதையைக் கையாண்டுள்ளார்.காதலர்கள் ஒன்று சேர்வார்களா? என்ற விறுவிறுப்போடு கதையைக் கொண்டு செல்கிறார். அதே சமயம், இரண்டாம் பாதியில் இயக்குநரின் திருப்பங்கள் ரசிகர்கள் எதிர்பாராதவை.
காதலர்களுக்கான சிக்கல்களை மேலும் சுவாரசியமும் ஆழமும் கலந்து உருவாக்கி இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் காதல் என்னும் பெருமழையில் நனைய வாய்ப்பாக இருந்திருக்கும்.மழையில் தொடங்கி மழையில் முடிகிறது இந்த கதை.மழை சார்ந்த காட்சிகள் ரசிகர்களுக்குப் புது அனுபவத்தை த தரும். திரையில் ஒரு காதல் மழை இப்படம்.