சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மதன் கார்க்கியின் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். உடையலங்காரம் மற்றும் ஸ்டைலிங் ஏரியாவை மெருகூட்டியுள்ளார் வாசுகி பாஸ்கர்.
அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தின் ’மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. இப்போது பாடல் வைரலாகி வருகிறது.
இந்தப்பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிம்பு, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாக கலந்துரையாடல் மூலம் பகிர்ந்துகொண்டனர்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “சினிமாவில் பாடல் எழுத முயற்சித்த காலத்தில் யுவனிடம் எனது பாடல் வரிகளை காண்பித்து ஆலோசனை கேட்பது வழக்கம் ஆனால் யுவனின் இசையில் அவரது நூறாவது படமான பிரியாணியில் தான் அவருடன் இணைய முடிந்தது. அப்பா (வைரமுத்து)-ராஜா சார் காலத்தில், பாடல்களை கேட்பதற்கு மக்கள் ரேடியோவின் முன் காத்துக் கிடந்தார்கள்.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வேலைகளுக்கு இடையே தான் பாடலைக் கேட்கிறார்கள். அதனால் அவர்களது கவனத்தை ஈர்க்கும் விதமாக பாடல்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி உருவானது தான் இந்த ’மெர்ஸைலா’ பாடல்” எனக் கூறினார்
நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பேசும்போது, “மாநாடு படத்துல நடிக்க அழைப்பு வந்ததும் செட்டுல செம ஜாலியா இருக்கப்போறோம்னு சந்தோஷமா இருந்துச்சு.. ஆனா சிம்பு கூட டான்ஸ் ஆடனுமே அப்படின்னதும் அவருக்கு ஈடு கொடுத்து நம்மளால மேட்ச் பண்ணி ஆட முடியுமான்னு ஒரு டென்சனும் இருந்துச்சு.. ஆனா ராஜூ சுந்தரம் மாஸ்டர் என்னோட டென்சனை புரிஞ்சுக்கிட்டு எனக்கு வசதி பண்ணிக் கொடுத்தார்” என கூறினார்.
யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “வெங்கட் பிரபு படத்துல வேலை பார்க்குறது ஸ்பெஷல் தான். இன்னைக்கு வெளியாகி இருக்குற ’மெர்ஸைலா’ பாடலை, ஏன் பவதாரணியை பாட வச்சேன்னு கேட்குறாங்க.. கொடுக்கலேன்னா சண்டைக்கு வருவாங்களே” என ஜாலியாக கலாய்த்தார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ஒரு நல்ல படம் தனக்கு தேவையானவற்றை தானே தேடிக்கும்னு சொல்வாங்க.. அது இந்த மாநாடு படத்துக்குப் பொருந்தும். இந்த கதையை சொல்றதுக்கு முன்னாடி எஸ்டிஆரின் மாநாடு அப்படின்னு ரெண்டே வார்த்தைதான் வெங்கட் பிரபு எங்கிட்ட சொன்னார். அதுக்கப்புறம் தான் கதையை தாமதமாகத்தான் சொன்னார். இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான சமயத்துல பல நெகடிவ் விஷயங்கள் பேசப்பட்டாலும், இந்தபடம் தள்ளிப்போனதால பல நன்மைகள் நடந்திருக்கு.. சிம்பு வெயிட் லாஸ் பண்ணினார். எஸ்ஜே சூர்யா இந்தப்படத்துக்குள்ள வந்தார்.. சிம்பு தன்னை பத்தி பேசப்பட்ட அத்தனை தவறான விஷயங்களையும் அடிச்சு காலி பண்ணிட்டார்.. மற்ற படங்கள்ல கல்யாணியைப் பார்த்ததுக்கும் இந்தப்படத்துல பார்க்குறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. ஒவ்வொருநாளும் ஸ்பாட்ல கூடவே இருந்துருக்கேன்.. அத்தனை பேரோட உழைப்பையும் நேர்ல பாத்துருக்கேன். படம் முடிஞ்சு பார்க்கும்போது நாம உழைச்ச உழைப்பு வீணாகல அப்படின்னு ஒரு திருப்தி வந்துச்சு.. சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே இது பெரிய படமா இருக்கும்” என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, “சின்னப்பசங்களை வைத்து படம் இயக்கிய சமயத்தில் யுவன் தான் என் படங்களின் ஹீரோவாக இருந்தார். யுவன் என் படங்களுக்குத்தான் பெஸ்ட்டான பாடல்களை தருவார் என்று எல்லோரும் சொல்வார்கள்.. ஆனால் அவருக்கு செல்வா (செல்வராகவன்) தான் பர்ஸ்ட்.. அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் பொறாமை கூட உண்டு. எப்படி இளையராஜா-வைரமுத்து கூட்டணி மிகப்பெரிய புகழ்பெற்றதோ, அதேபோல அவர்களது வாரிசுகளான யுவனையும் மதன் கார்க்கியையும் எனது படத்தின் மூலமாகத்தான் ஒன்று சேர்க்கவேண்டும் என நினைத்து ‘பிரியாணி’ படம் மூலம் அதை சாதித்தேன். இதோ இந்தப்படத்திலும் இந்த ’மெர்ஸைலா’ பாடலில் அவர்கள் இணைந்திருப்பதில் சந்தோசம் தான்.. மதன் கார்க்கியின் வார்த்தைகளில் அவரது தந்தை வைரமுத்துவின் சாயலை விட கவிஞர் வாலியின் சாயல் தான் எனக்கு தெரிகிறது. ரஜினி சார் நடித்த நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்” என்கிற கல்யாண வீட்டு பாடலை போல கலகலப்பாக இருக்க வேண்டும் என மதன் கார்க்கியிடம் கேட்டேன். அதேபோலவே இந்த பாடல் அமைந்து விட்டது. இந்த பாடலை கேட்டதும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் சந்தோஷப்பட்டாலும், இந்தபாடலுக்கு சிம்புவுடன் ஆடனுமான்னு கொஞ்சம் பயந்தாங்க.
என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட்.. இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன்.. அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும். பரிசோதனை முயற்சியிலான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம்.. அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும்.
கார் ஓட்டுற காட்சி ஒன்னை படமக்குறப்போ, நான் வேகமா ஓட்டுவேன், அதனால ஒன்ஸ்மோர் கேட்டுறாதீங்கன்னு சிம்பு சொன்னார். அந்த காட்சியை ஒரே டேக்ல படமாக்கினோம். இந்தப்படத்துல சிம்பு ஒரு காமன்மேனா நடிச்சிருக்காரு. அதனால அவருக்குன்னு புதுசா ஏதாவது பஞ்ச் டயலாக் எழுதுன்னா, இந்த கேரக்டர் இப்படி பேசுனா சரியா வருமான்னு பஞ்ச் பேச தயங்குவாரு, விண்ணை தாண்டி வருவாயா படத்துல கௌதம் மேனன் புது எஸ்டிஆரை காட்டிய மாதிரி நானும் இந்த மாநாடு படத்துல புது எஸ்டிஆரை காட்டணும்னு நினைச்சேன்..
சிம்பு-எஸ்ஜே சூர்யா இருவருக்குமான பேஸ் ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும்.. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார். ஒரு காட்சில கிட்டத்தட்ட நான்காயிரம் பேரை வச்சு மாநாடு மாதிரி ஒரு காட்சியை படமக்குனோம். இந்த காட்சியோட பிரமாண்டத்தை தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தா தான் நல்லா இருக்கும்.. சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பா’ன்னு சொல்லிட்டாரு. அந்தவகையில் மாநாடு தியேட்டருக்கான படம்.” என்றார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “எனக்கும் சிம்புவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.. ஒன்னு ரெண்டு பேருமே உச்சத்துல இருப்போம்.. இல்லேன்னா ரெண்டுபேருமே சிக்கல்ல இருப்போம்.. சிம்பு பான் இந்தியா படம் பண்ணனும்.. அதுக்கு மாநாடு ஒரு ஆரம்பமா இருக்கும்.. கொரோனா தொற்றால பாதிக்கப்பட்ட சமயத்துல கூட படத்தோட கேமராமேன் வந்து வேலை பார்த்தாரு. அதைவிட ஆச்சர்யம் அவரை சிம்பு கட்டிப்புடிச்சு பாராட்டுனாரு.. கல்யாணி பிரியதர்ஷனை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு மாடர்ன் ரேவதி தான் ஞாபகத்துக்கு வருவாங்க… வெங்கட்பிரபு கிளாசா படம் எடுக்கிறவரு.. அவருகிட்ட நம்ம கரகாட்டக்காரன் ஆடியன்ஸையும் சந்தோஷப்படுத்தணும் மறந்துறாதீங்கன்னு சொன்னேன்” என்றார்
சிம்பு பேசும்போது, “வெங்கட்பிரபு எப்பவுமே கதை சொல்ல மாட்டாரு.. மாநாடு படத்தை பத்தி ஒரு ஐடியா மட்டும் சொன்னாரு.. அது கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு.. வெங்கட்பிரபு விளையாட்டான ஆளு.. ஆனா இந்தப்படம் பார்த்ததும் நீங்க தான் இந்த படத்தை எடுத்தீங்களான்னு அவர்மேல ஆச்சர்யம் வரும்.. கல்யாணி சூட்டிங் ஸ்பாட்டுல ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க.. அவங்க சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க.. சினிமா பத்தி தெரியும்னாலும் இன்னும் நிறைய கத்துக்க விரும்புறாங்க.. எஸ்ஜே சூர்யா ஒய்.ஜி.மகேந்திரன் ரெண்டு பேரும் சேர்ந்து சும்மா கிழிச்சிருக்காங்க.. அவங்க நடிச்சதை பார்த்து எனக்கே டயலாக் மறந்து போய் நின்னுட்டேன்.. நான் பண்ற டென்சனுக்கு எஸ்ஜே.சூர்யா காட்டுற ரியாக்சனுக்கு தியேட்டர்ல ரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்சன் காட்டுவாங்கன்னு பாக்குறதுக்கு ஆவலா இருக்கேன்.. இந்தப்படத்தை தியேட்டர்ல பாக்குற ரசிகர்கள், படம் முடிஞ்சதும் அப்படியே எஸ்ஜே சூர்யாவை தூக்கிட்டு போயிருவாங்க..
இந்தப்படம் ஏன் தள்ளிப்போச்சுன்னு தெரியல.. ஆனா அந்த நேரத்துல பண்ணியிருந்தா கூட இவ்வளவு சரியா வந்திருக்காதுன்னு தான் சொல்வேன்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வளவு நாள் பொறுமையா இருந்து இந்தப்படத்தை முடிச்சிருக்கார்னா உண்மையிலேயே பெரிய விஷயம்.
இந்தப்படத்துல சிங்கிள் ஷாட்டுல ஒரு காட்சியில நடிச்சிருக்கேன்.. இதுக்கு முன்னாடி மன்மதன் படத்துல மொட்டை மதன் கேரக்டர் அழுதுக்கிட்டே பேசுற மாதிரி காட்சில தான் அப்படி சிங்கிள் டேக்ல நடிச்சேன்.. சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்னு அடிக்கணும். ஆனா இப்ப அந்த காட்சிக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது.. காட்சி முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சு கூட அழுகைய நிப்பாட்ட முடியலை…
நல்ல படம் கொடுத்தா மக்கள் பாராட்டுறாங்க.. மோசமான படம் கொடுத்தா கழுவி ஊத்துறாங்க.. இந்த மாநாடு படத்தை பார்த்துட்டு இவ்வளவு சுவாரஸ்யமா ஒரு விஷயத்தை சொல்லிருக்காங்களேன்னு அந்த வேலைக்கு மரியாதை கொடுப்பாங்க.. யுவன் தனித்தனி ஆல்பமும் பண்ணனும். பாலிவுட்ல அது ரொம்பவே ஹிட் ஆகியிருக்கு.. இதுதான் கரெக்ட் டைம்.” என கூறினார்.