சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா ,எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
தனது நண்பரான பிரேம்ஜி கல்யாணத்திற்காக துபாயிலிருந்து விமானத்தில் கோவை வரும் சிம்புக்கு, நடக்கப்போகும் நிகழ்வு கனவாக வருகிறது. அதில் சிம்பு முதல்வரான எஸ்.ஏ. சந்திரசேகரை சுட்டுக்கொல்கிறார். இந்த சம்பத்தில் இருந்து சிம்பு முதல்வரான எஸ்.ஏ சந்திரசேகரை எப்படி காப்பாறுகிறார் என்பதுதான் கதையின் கரு. அதற்காக அவர் எடுக்கும் முயற்சியே மீதமுள்ள படம். டைம் லூப் கதையை தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி அழகாக சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு.
படத்தில் சிம்புவுக்கு தேவையில்லாத மாஸ் காட்சிகள் எதுவும் கிடையாது. சிம்புவின் நடிப்பு அருமை. அவருக்கும், வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையே நடக்கும் ஆடு, புலி ஆட்டம் ரசிகர்களை கட்டிப் போடுகிறது.
படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக செல்கிறது. அதிலும் இடைவேளை நேரத்தில் வரும் ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை.சமகால அரசியலைத் தொட்டுக்காட்டி அரசியல் கிண்டல் செய்யவும் தவறவில்லை இயக்குநர்.
சிம்பு தான் நாயகன் என்றாலும் தனது அட்டாகசமான நடிப்பால் ரசிகர்களின் கைத்தட்டல்களை தன் வசப்படுத்தி, அசத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. படத்தில் வந்து செல்கிறார்.
சிம்பு, ஒய்.ஜி மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா என மூவரும் இடம்பெறும் ஒரு சீரியசான காட்சியில், திரையரங்கையே சிரிப்பு மழையில் நனைய வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.யுவனின் பி.ஜி.எம். படத்திற்கு பக்க பலம்.
முதல் பாதியில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வந்தாலும் அது டைம் லூப் என்கிறல் விஷயத்தைத் தெளிவு படுத்தும் விதமாக இருப்பதால் போர் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியை பார்க்கும்போதுதான் அதன் அர்த்தம் மேலும் விளங்குகிறது.
படத்தின் இரண்டாவது பாதி தான் படத்தின் தரத்தைக் நிர்ணயிக்கக் கூடியது. அந்த வகையில் இதன இரண்டாவது பாதியை விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் கொண்டு சென்றிருக்கிறார் .
இருவருக்கும் வெற்றிகள் இல்லை பெரிய பரபரப்பு இல்லை என்கிற நிலையில்,இந்த மாநாடு படம் சிம்புவுக்கு மட்டுமல்ல வெங்கட்பிரபுவுக்கு மறுவாழ்வு தந்த படம் எனலாம்.