‘மாமன்’ திரைப்பட விமர்சனம்

சூரி, சுவாசிகா,ஐஸ்வர்யா லட்சுமி, மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், ராஜ்கிரண், கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர், சாயா தேவி, மிதிலா சங்கர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தின் கதையை சூரி அமைத்துள்ளார்.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.லார்க் ஸ்டுடியோ கே. குமார் தயாரித்துள்ளார்.

நாயகன் சூரி, தனது அக்கா சுவாசிகா மீது பாசம் வைத்திருக்கிறார்.நீண்ட நாள் அக்காவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் பிறக்கும் ஆண் குழந்தை மீது அளவற்ற பிரியமும் பாசமும் வைத்திருக்கிறார். அந்த குழந்தையும் தாய்மாமன் சூரியுடன் மாமா மாமா என்று ஒட்டிக் கொள்கிறான்.அந்த அளவற்ற ஒட்டுதலே சூரியின் தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு குறுக்கீடாக அமைகிறது.தான் காதலித்துக் கரம் பிடித்த ஐஸ்வர்யா லட்சுமி, தன் கணவர் சூரி, அக்கா மகன் மீது காட்டும் அளவற்ற பாசத்தை வெறுக்கிறார்.இதனால் குடும்ப உறவுகளில் விரிசல் விழுகிறது. மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதை உணர்ச்சிகரமாகச் சொல்வதே ‘மாமன்’.

வெறும் ஒரு துணைக்கோள் போல கதாநாயகனைச் சுற்றி வருவதும் அசட்டுத்தனமான நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதும் என்று இருந்த சூரி விடுதலை படத்திற்குப் பிறகு நடிப்பில் தனக்கான இடத்தை தேடிக்கொண்ட ஒருவராக மாறி நிமிர்ந்து நின்றார்.ஒரு நகைச்சுவை நடிகர் நெகிழ்ச்சிகரமான காட்சிகளில் நடிக்க முடியும் என்று தனது அடுத்த பரிமாணத்தை இப்படத்தில் காட்டி உள்ளார்.

தனது அக்கா மீதும் அக்கா மகன் மீதும் பாசம் காட்டுபவராகவும் மனைவி மீது காதலைப் பொழிபவராகவும் இந்த இரு உறவுகளை சமன் செய்யத் தவிப்பவராகவும் இப்படத்தில் பல்வேறு உணர்ச்சி தருணங்களை நடிப்பில் வெளிப்படுத்துகின்றார்.பாசக்கார காட்சிகளில் பார்ப்பவர்களைக் கலங்க வைக்கிறார்.ஒரு நல்ல தம்பியாகவும் நல்ல மாமனாகவும் நல்ல கணவனாகவும் பெயர் எடுக்க அவர் போராடுவது பெண்கள் மத்தியில் அனுதாப அலையைத் தேடித் தரும்.

சூரியின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி,மனைவிகள் கணவன்களிடம் எதிர்பார்ப்பது என்ன? அது நிறைவேறாமல் அடையும் ஏமாற்றம் என்ன என்பதை தனது  நடிப்பில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.அவர் ஒரு கட்டத்தில் வில்லி போல் தோன்றினாலும் அவர் பாத்திர நியாயம் செய்துள்ளார்.

மனைவியின் பெருமை பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரணின் பாத்திர வார்ப்பு படத்திற்குப் பலம்.

‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார் சுவாசிகா.  சூரியின் அக்காவாக நடித்திருக்கும் அவர் குணச்சித்திர நாயகியாக முத்திரை பதித்துள்ளார்.

சிறுவன் பிரகீத் சிவன் அப்பாவித்தனம் நகைச்சுவை வில்லத்தனம் போன்ற தோற்றம் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடுகிறான்.

பாபா பாஸ்கர், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என பிற துணைப் பாத்திரங்களில் வருபவர்களும் பதிகிறார்கள்.

இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை கதை ஓட்டத்துக்குச் செழுமை சேர்க்கிறது.ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் சரியாகக் கொண்டு சென்றுள்ளது.கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு நேர்த்தி.

குடும்ப உறவுகளின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் மனித மேலாண்மை போன்றவை சரியாகச் சொல்லப்பட்டுள்ளன.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், சரியான திரைக்கதை மூலம் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார்.

திருமண நிகழ்ச்சி, காது குத்துதல், சீமந்தம் என்று படம் முழுவதும் குடும்ப கொண்டாட்டங்களால் நிறைந்துள்ளது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், பெண்களைக் கவரும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாற்றிவிட்டார்.

மொத்தத்தில், இந்த ‘மாமன்’ தாய்மார்களால் கொண்டாடப்படுவான்.