நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி, டெல்லி கணேஷ், சாய்தீனா, மு.ராமசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார் .சுந்தர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார் .படத்தொகுப்பு நாகூரான், வசனம் நாகராஜன் கண்ணன்,அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்துள்ளார்.ராகுல் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஓர் எழுத்தாளர் படைத்த கற்பனைப் பாத்திரங்கள் நிஜமாக எழுந்து அவர் முன் வந்து நின்றால்,கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் என்ற ஒருவரிக் கற்பனை தான் இந்த படத்தின் கதை.
அந்தக் காலத்தில் கல்யாணப்பரிசு படத்தில் வரும் தங்கவேல் காமெடி ஒன்று உண்டு .அவர் தான் எழுத்தாளர் பைரவன் என்று மனைவிடம் பொய் சொல்லிக்கொண்டு இருப்பார். எழுத்தாளர் பைரவனாக நடிப்பார் .அப்போது அவரைத் தேடி வரும் வாசகர்கள் உண்மையான பைரவன் எழுதிய படைப்புகள் சார்ந்து கேள்விகள் கேட்பார்கள். அந்தக் கதாபாத்திரங்கள் பற்றிக் கேட்பார்கள்.. இதில் உண்மையான எழுத்தாளராக வாசன் இருக்கிறார். அவர் பிரபல இதழ்களில் தொடர்கதைகள் எழுதி வருகிறார். தான் ஒரு படைப்பாளி என்கிற கர்வத்துடன் இருக்கும் அவர் உயிர்ப்பான கதாபாத்திரங்களைப் படைத்து வருகிறார் .ஆனால் அவரது கதாபாத்திரங்களின் குணச்சித்திரம் பற்றியும் கதை சம்பவங்களின் போக்கு பற்றியும் கேட்டும் விமர்சித்தும் அடிக்கடி அவருக்குத் தொலைபேசியில் அழைப்புகள் வரும். அவரைக் கேள்வி கேட்டு தொல்லை கொடுப்பார்கள். ஆனால் அந்தக் கதாபாத்திரங்களே நிஜமான மனிதர்களாக உருவெடுத்து அவரிடம் வந்து அவரது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவரை அலைக்கழிப்பது தான் இந்த படத்தின் கதை. அப்படி அவர் சிருஷ்டித்த சில பாத்திரங்கள் தங்களது கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் காரணம் இவர்தான் என்று அவரைத் தேடி பழிவாங்கத் துடிக்கின்றன. முடிவு என்ன என்பதுதான் ‘மாயக்கூத்து’ திரைப்படத்தின் கதை.
தமிழ் சினிமாவிற்கு இது வித்தியாசமான கற்பனையாக அறிமுகமாகியுள்ளது .ஆரம்ப கட்டத்தில் இது ஒரு விளையாட்டு போலத் தோன்றி அந்தப் பாத்திரங்களுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை. ஆனால் தீவிரமாக அந்தப் பாத்திரங்கள் செயல்படும்போது அவர்களோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறார் இயக்குநர்.பரபரப்பான சம்பவங்களால் இந்தப் படத்தை ஒரு விறுவிறுப்பான திரில்லர் படம் போல் மாற்றி விடுகிறார் இயக்குநர் ராகவேந்திரா.
கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே மாறி உள்ளார்கள்.அது மட்டுமல்ல கையில் கிடைத்த ஆட்களை கொண்டு நடிக்க வைக்காமல் வசீகரமான தோற்றமும் நடிப்பாற்றலும் திரைத்தோற்றத்தில் திருப்தி அளிக்கும் முகங்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளது இயக்குநரின் சாமர்த்தியம்,
அப்படி இதில் எழுத்தாளர் வாசனாக நாகராஜன் நடித்துள்ளார் .எழுத்தாளர் என்கிற படைப்பு கர்வத்துடன் இருக்கும் அவர் தனது நிஜ வாழ்க்கையில் அலைக்கழிப்புகள் துரத் தும்போது பிறகு ஒரு சாதாரண மனிதராக உடைந்து போய் அவர் ஓடத் தொடங்குகிறார். இந்தக் காட்சிகளில் அவர் அனுதாபத்தை அள்ளுகிறார்.
பத்திரிகை ஆசிரியராக சில நிமிடக் காட்சிகளில் வந்தாலும் டெல்லி கணேஷ் தனது திரைத்தோற்றத்தால் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளார்.வேலைக்கார பெண்ணாக வரும் ஐஸ்வர்யா,எழுத்தாளர் மனைவியாக வரும் காயத்ரி,சிறப்புத் தோற்றத்தில் வரும் பேராசிரியர் மு.ராமசாமி,பெயர் தெரியாத அந்த ஆட்டோக்காரர் என யாவரும் நல்ல நடிப்பை வழங்கி உள்ளனர்.
ஒரு குடிகாரக் கணவன் அவன் மனைவி மகனின் ஸ்கூல் பீஸ்க்காக அல்லாடுவது , நீட் தேர்வுக்கு சிரமப்படும் ஒரு ஏழை மாணவி, ஐம்பதாவது கொலையை செய்ய துடிக்கும் ஒரு தாதா,இன்னொரு மேல் தட்டு இளம் ஜோடி என சமுதாயத்தில் மாறுபட்ட அடுக்குகளில் உள்ள கதாபாத்திரங்களைக் காட்டியும் அவர்களை சந்திக்க வைத்தும் திரைக்கதை அமைத்துள்ளார்.முதலில் தனித்தனி துண்டுகளாகத் தெரியும் சம்பவங்கள் ஒன்றிணையும்போது சுவாரஸ்யம் தட்டுகிறது.அதே நேரம் அந்தக் கதாபாத்திரங்கள் அவரவர் பார்வையில் அவர்கள் சிரமப்படுவதாக உணரும்போதும் அவர்கள் மேலும் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.
இதே கதையில் அந்த பாத்திரங்கள் எழுத்தாளரிடம் சாத்வீகமான முறையில் தீர்வு தேடி வந்திருந்தால் எப்படி இருக்கும்? இவ்வளவு பரபரப்புக்கு வாய்ப்பிருந்திருக்காது. ஆலோசனை சந்திப்புகளாக மாறியிருக்கும்.இது திரில்லர் காலம் என்பதால் இந்தப் படத்தை திருப்பங்கள் கொண்ட திரில்லராக மாற்றி உள்ளார் இயக்குநர்.இக்கதையினூடாகச் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நாட்டு நடப்பைத் தொட்டுக் காட்டி அரசியலையும் பேசி உள்ளார் இயக்குநர்.
இந்தப் படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவினை வழங்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம்கிருஷ்ணன்.படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அழகான பின்னணி இசையையும் சூழலுக்கு ஏற்ற பாடல்களையும் வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் அஞ்சனா.அர்த்தமுள்ள வசனங்களை எழுதியுள்ளார் நாகராஜன் கண்ணன்.அனைவருமே படத்துக்குச் செழுமை சேர்க்கும் வகையில் இயங்கி உள்ளார்கள்.
மொத்தத்தில் இந்தப் படம் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்க வேண்டிய அளவிற்கு தரத்தையும் சீர்மையையும் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் செலவு சில லட்ச ரூபாய் என்கிறபோது அதிர்ச்சியாக இருந்தது. கோடிகளில் செலவழிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் புதிய படக்குழுவினரை வாழ்த்தலாம் .இவர்கள் மேலும் பல வித்தியாசமான கதைகள் தந்து திரையுலகைப் பெருமைப்படுத்தக்கூடும்


