‘மாய பிம்பம்’ திரைப்பட விமர்சனம்

ஜானகி ,ஆகாஷ் ,ஹரி ருத்ரன், ராஜேஷ் ,அருண்குமார் நடித்துள்ளனர்.எழுதி இயக்கி செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் கே. ஜே .சுரேந்தர்.ஒளிப்பதிவு – எட்வின் சகாய், இசை – நந்தா, படத் தொகுப்பு – வினோத் சிவகுமார், கலை – மார்ட்டின், பாடல் வரிகள் – விவேகா, பத்மாவதி ,நடனம் – ஸ்ரீ கிரிஷ்.

கடலூரில் இருந்து கொண்டு சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஜீவா. அவனுக்கு மூன்று நண்பர்கள் அவர்களின் பேச்சு எல்லாம் பெண்களைப் பற்றியதாகவே இருக்கும் .குறிப்பாக கேபிள் டிவி நடத்தும் ஒருவன் அது பற்றியே பேசிக் கொண்டிருப்பான். அவனது பேச்சு பெண்களை
மடிப்பது,வலையில் விழ வைப்பது, பற்றிய பேச்சாகவே இருக்கிறது.ஒரு பெண்ணைப் பார்த்தாலே அவள் விழுவாளா இல்லையா என்று அவன் சொல்லி விடுவான். இருவர் பழகுவதைப் பார்த்ததும் அதில் இருப்பது காதலா, காமமா என்று அவன் மீட்டர் போட்டு கணித்து விடுவான், அப்படி உடன் இருக்கும் நண்பர்கள் நம்புகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு இதில் ஒவ்வாமை உண்டு. அவ்வப்போது பெண்கள் பற்றி  அப்படித் தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறுவான். இன்னொருவன் சபலம் கொண்டவன்.எந்த முடிவும் எடுக்காத மனநிலை கொண்டவன் ஜீவா. அப்படிப்பட்ட ஜீவா, தற்செயலாக சுமதி என்கிற ஒரு பெண்ணைச் சந்திக்கிறான் ,பார்க்கிறான் லேசாகப் பழகுகிறான். அவள் மீது அவனுக்குக் காதல் வருகிறது .அவன் மீது அவளுக்கும் கூட என்று பிறகு தான் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் அந்தக் காதல் பார்வையைக் காமமாக எண்ணி அவளை அடையத் தூண்டி விட்டுத் தவறாக வழி நடத்துகிறான் கேபிள் டிவி நண்பன். தனிமையான சூழலை உருவாக்கிக் கொண்டு அப்படி அந்த சுமதியை ஜீவா அணுகும் போது அவள் அதிர்கிறாள்.அவன் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான். அதற்குப் பிறகு சில விபரீதங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதுதான் 145.17 நிமிடங்கள் கொண்ட இந்த ‘மாய பிம்பம்’ படத்தின் மீதிக்கதை. 

படம் தொடங்கியதுமே பெண்களைப் பற்றிய வாலிபர்களின் பேச்சு கலகலப்பாக இருக்கிறது.பேச்சு தொடரும்போது எல்லை தாண்டி விடுமோ என்று என்ற பதற்றம் ஏற்படுகிறது.பெண்களைப் பார்த்ததுமே இப்படிப்பட்டவர்கள் என்று கணிக்கிற அந்த வாலிபனின் பாத்திரம் சற்று எரிச்சல் மூட்டினாலும் அது தவறு என்று அதைச் சற்றே சங்கடத்துடன் மறுக்கும் இன்னொரு பாத்திரம் அதைச் சமன் செய்கிறது.ஆண்களைப் பற்றிய இளைஞர்களின் கட்டற்ற எல்லை தாண்டிய உணர்வுகளாக படத்தின் முதல் பாதி சென்றாலும் இரண்டாம் பாதி வேறொரு திசையில் பயணித்து நம்மை இறுக்கமாக அமர வைத்து விடுகிறது.படத்தின் கதை உச்சகட்டத்தை நோக்கிச் செல்லும் பாதையும் பயணமும் பார்வையாளர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கின்றன.

படத்தில் சுமதி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜானகி, திராவிட நிறம் கொண்ட அழகியாக இருக்கிறார். சுடர்விடும் கண்கள், சற்றே அழகு காட்டும் தெற்றுப்பல், உதட்டோர நிழலாய் மென்மயிர் ரேகையின் கருமைஅழகு, மலர் அதரங்கள்,கன்னக்கதுப்புகளின் வசீகரம் என்று தோற்றத்திலும் அலட்டல் இல்லாத மெல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகபாவனைகளிலும் உடல் மொழியியிலும் என்று அவர் பார்வையாளர்களை ஆக்கிரமித்து விடுகிறார்.இடைவேளைக்கு முந்தைய கடைசிக் காட்சியில் அவரது முகபாவனை,கைத்தட்டல் பெறக்கூடியது மட்டுமல்ல கதையை வேறொரு தளத்துக்கு இட்டும் செல்கிறது.இந்தப் படம் முன்பே வந்திருந்தால் அவருக்கு ஓரிடம் கிடைத்திருக்கும்.

மருத்துவக் கல்லூரி மாணவன் ஜீவா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆகாஷ், தனது இயல்பான நடிப்பின் மூலம் பாத்திரமாக மாறிக் கவனிக்க வைக்கிறார்.காதலைக் காமமாக மாற்றிப் புரிந்து கொண்டு பிறகு வருத்தப்பட்டுத் தவிக்கும் காட்சியில் அவர் நடிப்பு கச்சிதம்.தனது காதல் ஓவியம் கரைந்து போன துக்கத்தில் அவர் வருந்தும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகனின் நண்பர்களாக வரும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும்,இயல்பாக நடித்து கதையைத் தொடர்ந்து பயணப்பட வைத்துள்ளார்கள்.

ஜீவாவின் பெற்றோராக வருபவர்களும்,அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தை ,மருத்துவமனையில் பணிபுரியும் வந்த புளியங்கொட்டைப் பல்லழகி, சுமதிக்கு உதவும் இன்னொரு நர்ஸ் என அனைவருமே
தங்கள் நடிப்பின் மூலம் தங்களது கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் எளிதில் பதிகிறார்கள். எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களையும் பின்புலங்களாக எண்ணாமல் பாத்திரங்களாகவே நினைக்க வைக்கிறது.நந்தாவின் இசையில் பாடல்கள் கதை மாந்தர்களின் உணர்வுகளை ஓவியமாக வரைந்துள்ளது.

ஒரு சிறைச்சாலையில் தொடங்குகிற கதை அதன் பயணம் யாரும் யூகிக்க முடியாததாக உள்ளது.ஒரு வழக்கமான தமிழ் சினிமாவின் காதல் கதை என்று எதிர்பார்த்துச் சென்றால் வேறொரு புதிய அனுபவத்தைத் தருகிற படமாக இது மாறிவிடுகிறது.எழுதி இயக்கியிருக்கும் கே.ஜெ.சுரேந்தர் நிச்சயம் பாராட்டுக்குரியவர் தான்.  படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவனின் பார்வையிலான மருத்துவத் தகவல்கள் பார்வையாளர்களுக்கு புதிதாக தோன்றும்.டர்க் கோஸ்டோமியா, ஜீசியஸ்,உடற்கூறாய்வு போன்றவை பற்றியும் பேசப்படுகிறது.

படத்தின் கூறு முறையே மெல்ல மெல்லச் சொல்லும் பாணி தான் .முதல் பாதிப் படத்தில் அப்படி வருவது கூட ஓர்  அழகுதான்.பல இடங்களில் நம்பகமான காட்சிகள்.சில இடங்களில் எதார்த்தம் விலகிய  காட்சிகள் சிறு பின்னடைவு.

இயக்குநரின் எண்ணத்துக்கு ஏற்ப பயணம் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமார்.

காதல் என்கிற ஒற்றைச் சொல்லை எடுத்துக்கொண்டு கதைக் கருவாக்கி அதன் மெல்லிய நுண்ணிய இழையாகப் பிரித்து நெய்து அதில் உயிரோவியம் வரைந்து உள்ளார் இயக்குநர்.

பெண்களை இவள் இப்படிப்பட்டவள் என்று நீங்கள் காணும் பிம்பம் மாய பிம்பம்.அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உண்மை வேறானது,பெண்களின் மனம் ஆழமானது என்று சொல்கிறது கதை.

மொத்தத்தில் இந்த ’மாய பிம்பம்’ ஏமாற்றாது,பார்க்கும் அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது.