’மார்கன்’ திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி, அஜய் தீக்ஷன் ,மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திரன், ப்ரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி நடித்துள்ளனர். லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இசை விஜய் ஆண்டனி .தயாரிப்பு விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி.

சித்தர்களின் சித்து விளையாட்டு என்ற கருத்தை எடுத்துக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது.மர்மமான முறையில் பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் உடலில் ரசாயனம் செலுத்தப்பட்டு கலந்து இருக்கிறது.இதைச் செய்யும் மர்ம மனிதன் யார்?மும்பையைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி இதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரிப்பதற்காக சென்னை வருகிறார்.சென்னை காவல்துறை உதவியுடன் அவர் விசாரணையில் இறங்குகிறார். அவருக்குச் சில தடயங்கள் கிடைக்கின்றன. அதன்படி அஜய் தீக்ஷனை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால், அவரது விசித்திரமான செயல்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.ஆனாலும் இன்னொரு புறம் அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்படுகிறார்.  போலீஸ் விசாரணை வளையத்திற்குள் சிக்கிய அஜய் தீக்சன் யார்?, கொலைகளுக்கான காரணம் என்ன?, உண்மையான குற்றவாளியை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்வது தான் ‘மார்கன்’.

விசாரணை அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனி அந்தப் பாத்திரத்தை அனாயாசமாகக் கையாண்டு அமர்க்களம் செய்கிறார்.அவர் உடலில் ரசாயன பாதிப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் அத்துடன் அவர் மேற்கொள்ளும் விசாரணையும், அவரது உடல் மொழியும் சுவாரஸ்யம் கூட்டிப் படத்திற்குப் பலமாக அமைகின்றன.இந்தப் படத்தில் அறிமுகமாகும் அஜய் தீக்சன், ஒரு சகலகலா வல்லவன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன.அதில் லவரும் தன்னை நிரூபித்துள்ளார்.

சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி உள்ளனர்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை சாதாரண காட்சிகளையும் கவனிக்க வைக்கின்றன.குறிப்பாக பின்னணி இசை கூர்மைப் படுத்தப்பட்டுள்ளது.ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா கிரைம் திரில்லர் கதைக்கு ஏற்ப பணித்திருக்கிறது.

விஷ்ணு மற்றும் லியோ ஜான் பாலின் திரைக்கதை வழக்கமான கிரைம் திரில்லர் பாணியில் இருந்தாலும், அதில் கூடுதல் அம்சமாக சித்தர்களின் சித்து விளையாட்டு என்பதைச் சேர்த்திருக்கிறார்கள்.ஆனால் அதைப் பூரணமாக அளிக்கவில்லை. வெற்றிகரமான படத்தொகுப்பாளராகப் பெயர் பெற்ற
லியோ ஜான் பால் சலிப்பூட்டாத வகையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

பார்வையாளர்களுக்கு குற்றவாளி இவர்தான் என்று தெரிந்தாலும் அதை எப்படி விஜய் ஆண்டனி நிருபிக்கிறார் என்கிற பாதையில் விறுவிறுப்பு காட்டியுள்ளார். ஆனால், இரண்டாம் பாதியில் வரும் கிளைக்கதை படம் பார்ப்பவர்கள் எதிர்பாராதது.

மொத்தத்தில், ‘மார்கன்’ ஒரு மார்க்கமானவன்.