கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம் ,யோகி பாபு, விக்ராந்த், தீப்ஷிகா, ரோஷினி பிரகாஷ் , டிராகன் மஞ்சு, ஜி.எம்.குமார்,கோபாலகிருஷ்ணன் தேஷ் பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். இசை பி அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு சத்தியஜோதி பிலிம்ஸ் -கிச்சா கிரியேஷன்.
நேர் நிலை எதிர்மறை கொண்ட இரு கதாபாத்திரங்களின் நீயா நானா ஆணவப் போட்டியையும் மோதல்களையும் அடிப்படையாக வைத்து 144 நிமிடங்கள் கொண்ட ஒரு முழு நீள ஆக்சன் திரைப்படமாக ‘மார்க்’ உருவாகியுள்ளது.
இப்படத்தின் கதை என்ன?
ஒரே நாளில் குழந்தைகள் கூட்டமாகக் கடத்தப்படுகிறார்கள். அந்தக் குழந்தைகளை மீட்பதற்கு காவல்துறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட கிச்சா சுதீப் போராடுகிறார். அவரிடம் முதலமைச்சரின் கொலைக்கு ஆதாரமான வீடியோவைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியும் தரப்படுகிறது.ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி சாகச பயணம் மேற்கொள்கிறார்.அந்த இரண்டு சம்பவங்கள் இடையிலுள்ள தொடர்பையும் கண்டு பிடிக்கிறார்.இந்தத் தொடர் ஓட்டத்தில் யார் யார் பக்கம் நிற்கிறார்கள் யார் நட்பானவர் யார் துரோகியானவர் என்கிற மர்மமும் குழப்பமும் பரபரப்பைக் கிளப்பி முடிவை நோக்கிச் செல்வதுதான்
‘மார்க்’ திரைப்படம்.
இடை நீக்கம் செய்யப்பட்டதாலோ என்னவோ கடைசி வரை காக்கிச்சட்டை அணிந்தவராக சுதீப் காணப்படவே இல்லை. மப்டி உடையிலேயே மாஸ் காட்டுகிறார்.ஓடுகிறார், துரத்துகிறார்,சுடுகிறார் ,அடிக்கிறார், துவம்சம் செய்கிறார் .எப்போதும் மது சிகரெட் என்று அலப்பறையுடன் இப்படிப் படம் முழுக்க அவரது சரவெடி அதிரடி தொடர்கிறது.
குழந்தைகளைக் காப்பாற்றத் தூக்கிச் சுமக்கும் போது மூச்சு வாங்கும் காட்சியில் ’இனி சிகரெட் பிடிப்பதைக் குறைக்க வேண்டும் ’என்று அவர் சொல்கிற ’செய்தி’ வரை இந்த ஆட்டம் தொடர்கிறது.
எப்போதும் துப்பாக்கியும் கையுமாக கொன்று விடுவேன் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிற வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, எதிர்ப்பவர்களைத்தான் தோல் உரித்து தலைகீழாக கட்டித் தொங்க விடும் அளவுக்கு கொடூரமானவர். சில இடங்களில் மிகை நடிப்பு கோடு தாண்டினாலும் கொடூரத்தைக் காட்டியுள்ளார்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு வில்லத்தனமும் நகைச்சுவையும் காட்ட அவர் ஏற்றுள்ள ஸ்டீபன் ராஜ் பாத்திரம் ஒரு வாய்ப்பு.
ருத்ரனாக வரும் விக்ராந்த் குறைந்த காட்சிகளில் வந்தாலும் குறை இல்லாமல் வந்து போகிறார்.அவரது பாத்திரம் கதையின் விறுவிறுப்புக்கு உதவி உள்ளது.
பிரபலமாக இருப்பதால் யோகி பாபு என்கிற நடிகரை படத்தில் கொண்டு வந்துள்ள அளவிற்கு அவரைப் பயன்படுத்தவில்லை.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளார்கள்.
கதையின் பெரும் பகுதி இரவில் நடந்தாலும் அந்த குறை தெரியாத அளவிற்கு சரியான ஒளி அமைப்பைக் கொண்டு தனது ஒளிப்பதிவின் மூலம் படத்தின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு.குறிப்பாக காளி கோயில் பாடல் காட்சிகள் பிரமாண்டம்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஒரு வணிகரீதியிலான ஆக்சன் படத்திற்கான அனைத்து வித்தைகளையும் காட்டியுள்ளார்.
குறிப்பாக “அண்ணாத்த யார் தெரிமா…” என்ற பாடல் மாஸ் பீஸ்.
எஸ்.ஆர்.கணேஷ் பாபுவின் படத்தொகுப்பு திரைக்கதையைத் தொய்வின்றி நகர்த்திட உதவியுள்ளது.
படத்திற்கு ஆறு சண்டை இயக்குநர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் சண்டைகளாகவே உள்ளன.குழந்தைகள் சார்ந்த மீட்புக் காட்சிகள் பரபரப்பானவை.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா,முக்கால்வாசி படத்தை சண்டை இயக்குநகள்ர் கையிலே ஒப்படைத்து விட்டார் போலும்.உச்சகட்ட காட்சி குழந்தைகள் சார்ந்த சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும்தான் இயக்குநர் தெரிகிறார்.சிறிய கதையை வைத்துக்கொண்டு தர்க்கங்கள் மீறிய வகையிலான பெரிய பெரிய காட்சிகள் ஆக்கி பார்க்க வைத்துள்ளார்.
ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு பிரம்மாண்டமான காட்சிகளின் மூலம் தன்னை மாஸ் பட இயக்குநர் என்று வெளிப்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர். தனது நோக்கத்தில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
மொத்தத்தில், ‘மார்க்’ மாஸ் படம்.ஆக்சன் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.


