‘மிடில் கிளாஸ்’ திரைப்பட விமர்சனம்

முனீஷ்காந்த் ,விஜயலட்சுமி அகத்தியன் ,ராதாரவி, காளி வெங்கட் ,மாளவிகா அவினாஷ் ,வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கியிருக்கிறார் . சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இசை -பிரணவ் முனிராஜ் ,சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

அன்றாடங்களில் சிக்கி உழலும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையைச் சில கதாபாத்திரங்களின் மூலம் வெளிப் படுத்தி ஒரு திரைப் படமாக ,உருவாக்கி இருக்கிறார்கள்.இதுதான் மிடில் கிளாஸ்.

மாதாந்திர பட்ஜெட் போட்டு வாழ்க்கையை ஓட்டும் நடுத்தர வர்க்கத்துத் தம்பதிகளாக முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகள், மகன் என்று இரண்டு பிள்ளைகள் .அவரவருக்கும் தங்கள் தகுதிக்கு மீறிய அன்றாடக் கனவுகள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் விஜயலட்சுமியின் தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது மூத்த சகோதரியைத் தாண்டி சீர் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் .அதற்காக அளவுக்கு மீறி கடன் வாங்குகிறார். எப்படியாவது பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை நிர்ப்பந்தப்படுத்துகிறார். அவரால் முடியவில்லை.
இறந்து போன முனீஷ்காந்தின் தந்தை ஒரு பரோபகாரியாக வாழ்ந்தவர். ஊரில் அவர் கொடுத்த நிலத்தில் பள்ளிக்கூடம் தொடங்குகிறார்கள் .ஆனால் குடும்பத்திற்கு ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை என்று அவர் குடும்பத்தினரால் தூற்றப்படுகிறார்.

முனீஷ்காந்த் ஒருநாள் வீட்டைச் சுத்தம் செய்யும் போது பழைய காலத்து ட்ரங்க் பெட்டியில் இருந்து ஒரு பத்திரம் கிடைக்கிறது .அதில் அவரது அப்பா 1970 இல் ஒருவருக்குப் பணம் கொடுத்திருக்கிறார் அது கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன . அதை மனைவியிடம் காட்டிய போது அவர் உதாசீனம் செய்கிறார்.இருந்தாலும் அதை எடுத்துக் கொண்டு சென்று முனீஷ் சம்பந்தப்பட்ட ஆளைப் பார்க்கிறார் . நேரில் பார்த்தபோது முனீஷ் காந்தின் தந்தை தனக்கு ஒரு குரு போலவும் பெரிய உதவிகள் செய்து,தன்னை வாழ வைத்தவர் என்று கூறியவர்,ஒரு பிளாங்க் செக்கில் ஒரு கோடி ரூபாய் நிரப்பிக் கொடுக்கிறார். இந்த ஒரு கோடி கிடைத்து விட்டதாக நம்பி குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை முன்னிட்டு ஆளாளுக்கு கனவு காண்கிறார்கள் .ஆனால் செக் காணாமல் போய்விடுகிறது. அதை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் பார்த்தால் காசோலையை பேக்கில் காணவில்லை. அதைத் தேடி பதற்றமும் தவிப்புமாக முனிஷ்காந்த  அலைகிறார். மீண்டும் சேட்டைத் தேடிப்போனால் அவர் மாரடைப்பால் இறந்து விடுகிறார்.தேடல் என்ன ஆகிறது? என்பதே ’மிடில் கிளாஸ்’ படத்தின் மீதிக் கதை.

முனீஷ் காந்த் எல்லாம் ஒரு ஹீரோ மெட்டீரியலா என்று நினைப்பார்கள் .ஆனால் அந்தக் கேள்வி நமக்கு மறந்துவிடும் வகையில் இதில் அந்த நடுத்தர வர்க்கத்து நாயகனாக முனீஷ் காந்த் சரியாகப் பொருந்தி உள்ளார்.அன்றாட அல்லாட்டங்களில் உடம்பைக் கவனிக்காமல் தொந்தியும் தொப்பையுமாக அவரது தோற்றம் அசலாகப் பொருந்துகிறது. நமக்கு வாய்த்தது இதுதான் என்று நம்பிடும்,
பெரிய ஆசையில்லாத மனிதராக இருக்கிறார். ஆனால் அவருக்கு நேர் எதிராக விஜயலட்சுமி இருக்கிறார்.நிறைய சம்பாதிக்க வேண்டும் நிலம்,வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.இதற்காக கணவனை நச்சரித்துக் கொண்டே இருக்கிறார். அந்த அல்லாட்டத்தில் முனீஷ் விழி பிதுங்குகிறார்.தனது மகளையும் மகனையும் நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்குக் கட்டணம் கட்டவே படாத பாடுபடுகிறார். இப்படிப்பட்ட சூழலில் வரும் பாத்திரத்தில் அவர்கள் இருவருமே சரியாகப் பொருந்தி உள்ளனர். மகன் மகளாக நடித்திருக்கும் அந்த சிறுவர்களும் சரியாக நடித்துள்ளனர்.

ஒரு நடுத்தர வர்க்கத்துக்குப் பிரச்சினைகளை திரையில் சொல்ல முயன்றுள்ள இயக்குநரின் முயற்சி புரிகிறது . முதல் பாதி வரை இயல்பான காட்சிகளால் அதை ஈடு செய்கிறார்.ஆனால் படத்தில் விறுவிறுப்பு பற்றிக்கொள்ளும் செக் காணாமல் போகும் காட்சிகளுக்குப் பிறகு தர்க்க மீறல்கள் கண் சிமிட்டுகின்றன. பணத்தட்டுப்பாடு கொண்டு அலைக்கழிப்புக்குள்ளாகும் அந்தமுனீஷ் காந்த் பாத்திரம் அந்த ஒரு கோடி ரூபாய் காசோலையை அவ்வளவு அலட்சியமாகத் தவறவிடுமா? என்கிற கேள்வி எழவே செய்கிறது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

இருந்தாலும் அந்தக் காசோலையைத் தேடி அவர் அலையும் போது அந்த பதற்றத்திலும் பரபரப்பிலும் பார்வையாளர்களும் பங்கேற்று நாமும் தேட ஆரம்பிக்கிறோம்.அவரது பதைபதைப்பு நமக்குள்ளும் கடத்தப்பட்டு விடுகிறது. அந்த அளவிற்கு பரபரக்கிறது கதை.

கதை செல்லும் பாதையில் ஏற்ற வகையில் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவும் ,பிரணவ் முனிராஜின் இசையும் இணைந்து பயணித்துள்ளன.

டிடெக்டிவ் ஏஜெண்டாக ராதா ரவி, ஜாலியான பாத்திரத்தில் வந்து நடித்துள்ளார் .முனீஷ் காந்தியின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். அனுபவ நடிப்பில் அவர்கள் கவர்கிறார்கள். முனீஷின் நண்பராக காளி வெங்கட் வருகிறார்.இப்படிப் படத்தில் தோன்றுபவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே வருகிறார்கள்.

மொத்தத்தில் ’மிடில் கிளாஸ்’ எல்லா கிளாஸுக்கும் பிடிக்கும் திரை அனுபவம்.