பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில் நடித்துள்ளனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார். இசை கதீஜா ரகுமான், தயாரிப்பு மனோஜ் பரமஹம்சா ,ஆர் முரளி கிருஷ்ணன்.
எப்போதும் மெல்லுணர்வுகளைத் திரையில் படைப்பாக வெளிப்படுத்தும் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள அடுத்த படம் ‘மின்மினி’.
பொதுவாகப் பயணம் செய்து ஒரு திரைப்படத்தை எடுப்பார்கள். ஆனால் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு திரை அனுபவத்தையே பயண அனுபவம் ஆக மாற்றி இருக்கும் படம்தான் இந்த மின்மினி.
படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளின் சிறு வயது பருவ காலத்தை முதலில் படமாக்கிவிட்டு ,பின் 8 ஆண்டுகள் காத்திருந்து வளரிளம் பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கி உள்ளார் ஹலிதா ஷமீம் . இப்படிப்பட்ட ஒரு முயற்சி எடுப்பதற்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் அர்ப்பணிப்பும் தேவை. அதை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் ஹலிதா.
கெளரவ் காளை ஊட்டியில் படிக்கும் பள்ளி மாணவர், கால்பந்தாட்ட வீரர் .அதே பள்ளியில் புதிதாக சேரும் மாணவர் பிரவீன் கிஷோர்.பிரவீனை, கவுரவ் அடிக்கடி சீண்டுகிறார். அதற்குள் உள்ளார்ந்த நட்பு இருப்பதை பிரவீன் அறியவில்லை. அதனால் பிரவீன் விலகி இருக்கிறார்.
எதிர்பாராத விதமாக மாணவர்கள் பயணிக்கும் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.
அப்போது மாணவர்களைக் காப்பாற்றுகிறார் கெளரவ் காளை. பிரவீன் கிஷோரைக் காப்பாற்றும் முயற்சியில் பலத்த காயமடைந்து இறந்து விடுகிறார். அவரது இறப்புக்குப் பிறகு அவர் தன்னுடன் நட்பு பாராட்ட விரும்பியதை அறிகிறார்.மனதிற்குள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார் பிரவீன் .தன் மனதை திருப்தி படுத்த கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்.கெளரவ் காளையின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைக்கிறார் எஸ்தர் அனில்.அதன்பிறகு புதிய வாழ்க்கை வாழ்கிறார்.கெளரவ் காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது எதிர்கால ஆசைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயல்கிறார்.
அவர் படித்த பள்ளியில் சேருகிறார். அங்கு கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரவீன் கிஷோரின் நிலை கண்டு அதிர்கிறார்.அதில் இருந்து அவரை மீட்டெடுக்க முயல்கிறார். அதற்காக ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தப் பயணம் எஸ்தர் அனிலுக்கு வெற்றிப் பயணமாக அமைந்ததா? என்பதே ‘மின்மினி’.
பாரி மற்றும் சபரி இடையே நடக்கும் பள்ளி காலக்கட்ட சம்பவங்கள்,என காட்சிகளை க் காட்டிவிட்டு, கதையை வேறு பக்கம் திருப்பும் இயக்குநர் ஹலிதா படம் பார்ப்பவர்களை ஒரு பயணத்திற்குத் தயாராக்குகிறார். சமீம், சபரி மற்றும் பிரவீனாவுடன் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்கிறார்.
வாழ்க்கையில் கசப்புகளை எதிர்கொள்வது எப்படி? வாழ்க்கையில் முன்னே உள்ள லட்சியத்தை நோக்கி நகர்வது எப்படி என்று சொல்லாமல் சொல்கிறார்.
சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர், பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் மூன்று பேரும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். பள்ளி பருவத்திலும் சரி, இளம் வயது பருவத்திலும் சரி இவர்களுடைய அளவான நடிப்பு ரசிகர்களைக் கவர்கிறது.
கதை சொல்லும் முறை, தொழில்நுட்ப ரீதியாக படத்தை உருவாக்கிய விதம் ஆகியவற்றுக்காக இயக்குநர் ஹலிதா சமீம் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர்.ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிப்படுத்திய விதம் இதம்.இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இயக்குநரின் பாதையில் பயணம் செய்துள்ளனர்.
ஹலிதா சமீம் படங்களுக்கென்று ஒரு உளப்பதிவு உள்ளது. அதை இப்படமும் நிறைவேற்றி உள்ளது எனலாம்.