‘மிஸ் யூ’ திரைப்பட விமர்சனம்

சித்தார்த், ஆஷிகா ரங்கநாத்,கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், சஷ்டிகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், சரத் லோகித்ஸ்வரா, அனுபமா குமார்,ரமா நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை என்.ராஜசேகர் இயக்கியுள்ளார்.கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், கோமாளி பாணியிலான கதை.

நாயகன் சித்தார்த்திற்கு ஒரு விபத்து ஏற்படுகிறது, அதனால் இரண்டு ஆண்டுகள் அவரது நினைவு தப்புகிறது.
அதன் பிறகு நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்க்கிறார். கண்டதும் காதல் வருகிறது. ஆஷிகாவோ அவரது காதலை ஏற்கவில்லை மறுத்து விடுகிறார்.பெற்றோரிடம் தான் காதல் வசப்பட்டதைக் கூறுகிறார் சித்தார்த்.அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.சித்தார்த் வாழ்க்கையில் கடந்து போன, அவர் மறந்து போன பக்கங்களைப் புரட்டிக் காட்டுகிறார்கள். சித்தார்த் – ஆஷிகா இருவரிடையே நிலவிய பழைய உறவைப் பற்றிய உண்மையைக் கூறுகிறார்கள். அதன் விளைவு என்ன?சித்தார்த்தின் காதலை ஆஷிகா ஏற்றாரா?  இல்லையா? என்பதைக் கூறுவதே ‘மிஸ் யூ’.

சித்தார்த் கல்லூரிக் கால இளைஞர் போல் இளமையான தோற்றத்தில் வருகிறார்.எனவே இந்தக் காதல் கதை அவருக்குப் பொருந்துகிறது.காதலை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துகிறார்.இது ஒரு காதல் கதை தான் என்றாலும் நாயகியைக் காதலிக்கும் போது வழக்கமான சினிமாத்தனம் இல்லாமல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்தார்த் அதற்கான காதல் காட்சிகளில் மட்டுமல்ல அதிரடி காட்சிகளிலும் வீரம் காட்டியுள்ளார்.

ஆஷிகா ரங்கநாத் பேசும் கண்களுடன் தனது திரைத் தோற்றத்தின் மூலமே பார்வையாளர்களைக் கவர்ந்து விடுகிறார் .அந்தளவிற்கு பாங்கான அழகில் மிளிர்கிறார்.அவரது நடிப்பு கூடுதல் போனசாக உள்ளது.பாலசரவணன், லொள்ளு சபா மாறன், கருணாகரன் ஆகியோர் நகைச்சுவைப் பகுதிகளில் களமாடுகிறார்கள்.அவர்களில் குறிப்பாக கருணாகரன் தனித்து ஸ்கோர் செய்துள்ளார்.அவரது டைமிங் காமெடி ரசிக்க வைக்கும் ரகம்.சஷ்திகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், ரமா, அனுபமா குமார், சரத் லோகிதஸ்வா எனபப் பிற துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிப்புக் கலைஞர்கள் அவரவர் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.


ஜிப்ரான் இசையில் இனிமை, துள்ளல் இரண்டும் கலந்த அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் ஒரு காதல் கதைக்கேற்ற வண்ணமயமான காட்சிகளைக் கண்களுக்குள் நிறுத்துகிறார்.தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும் இந்தக்காதல் கதையை வணிக நோக்கில் கொண்டு சென்றுள்ளது.

இயக்குநர் என்.ராஜசேகருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் எழுத்தாளர் டான் அசோக்.வசனங்களில் செயற்கைத் தனம் இல்லை.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் என்.ராஜசேகர்,தான் எடுத்திருப்பது ஒரு காதல் கதை என்றாலும் நாயகன் சித்தார்த்தத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.அதனால் சில வணிக சமரசங்கள் ஏற்பட்டுள்ளன.அதற்கான காட்சிகள் உபரிகளாகத் தெரிகின்றன.

மழைக்காலத்தில் வந்துள்ளது இந்தப் படம்.காதல் கதை என்னும் அடைமழையில் நனையப் போகிறோம் என்று உட்கார்ந்தால் சிறு மழையாக பெய்து ஓய்கிறது இந்தப் படம்.

இந்தக் கதை மனதை ஆழமாகப் பாதிக்காவிட்டாலும் ஒரு காதல் கதை கொண்ட படத்திற்கே உரிய கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும்.