
நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.
அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டெக்னிஷியன்ஸ் டீமும் ஸ்ட்ராங்காக அமைந்துள்ளது. அறிவழகனின் நெருங்கிய நண்பராக B.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். எடிட்டராக வல்லினம் படத்திற்க்கு தேசிய விருது வென்ற வி.ஜே சாபு ஜோசப் பணிபுரிய இருக்கிறார், ரெட் டாட் பவன் பப்ளிசிட்டி பொறுப்பை ஏற்றுள்ளார்.
இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் விஜய குமார் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்