சிங்கம் என்றால் வேட்டையாடி என்கிற மனப்பிம்பம் தான் வரும் .ஆனால் லயன் கிங் படத்திற்குப் பிறகு
சிங்கம் என்பது, அப்பா, அம்மா,குடும்பம், பிள்ளைகள் என்கிற அதன் பாச உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. சிங்கத்தின் மீது அனுதாபமும் கவலையும் கொள்கிற மனநிலைக்கு அந்த படம் ரசிகர்களைக் கொண்டு சென்று விட்டது.
அந்த வகையில் தி லயன் கிங் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்ற படமானது.
அதன் தொடர்ச்சியாகத் தான்
‘முஃபாசா : தி லயன் கிங்’.
இப்போது வந்துள்ளது.
சிறுவயது முஃபாசா ,வளங்கள் குறைந்து வறண்டு போன வனப்பகுதியில் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறது. அதன் வாழ்க்கையில் புயல் அடிக்கிறது. அதாவது, வளமிக்க வனப்பகுதிக்குச் செல்லும் போது எதிர்பாராமல் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு, பெற்றோரைப் பிரிகிறது.
போய்ச் சேர்ந்த
புதிய இடத்தில் இருக்கும் சிங்கக் கூட்டத்தின் அரசன், முஃபாசாவை ஏற்க மறுக்கிறது. ஆனால் அந்த ராஜாவின் மகனும், மனைவியும் முஃபாசா மீது பரிவு காட்டி ஆதரிக்கிறார்கள். அதன்படி, புதிய இடத்தில் முஃபாசா வளர்கிறது.
ஆனால் அங்கே வேறொரு ரத்த வெறி பிடித்த சிங்க கூட்டத்தினால் ஆபத்து வருகிறது. புதிய வளர்ப்பு இடத்தில் உள்ள ராஜா மற்றும் வளர்ப்புத் தாயின் உத்தரவுபடி, இளவரசன் டாக்காவுடன் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கிறது முஃபாசா.
ஏற்கெனவே தன் பெற்றோருடன் பயணித்த வளமிக்க மிலேலேவுக்குச் செல்ல விரும்புகிறது .அதன்படி பயணத்தைத் தொடர்கிறது.அந்த சாகசப் பயணத்தில் கொலைவெறிக் கூட்டங்களை எதிர்கொள்கிறது .அது மட்டுமல்ல, டாக்காவின் விரோதத்தையும் சம்பாதிக்கிறது.இவற்றை எல்லாம் எப்படிச் சமாளித்து எதிர்கொள்கிறது முடிவு என்ன? என்பது தான்
‘முஃபாசா : தி லயன் கிங்’படத்தின் கதை.
உலக அளவில் பெரிய ஆதரவைப் பெற்று
குழந்தைகள் கொண்டாடும் சிங்க ராஜாவின் கதை இது. இதன் திரைக்கதையில் காதல் மற்றும் துரோகம் இரண்டையும் இணைத்து பெரியவர்களும் ரசிக்கும் படமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஆற்று வெள்ளம் முதல் இறுதிக் காட்சியில் நடைபெறும் சண்டை வரை கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அசத்தல்.சரியான திரையரங்கு அனுபவத்தைத் தருபவை. உண்மையான சிங்கம் எது, கிராபிக்ஸ் சிங்கம் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிக நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பதிப்பின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர்கள் நாசர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் ஆகிய அனைவரும் தங்களது நட்சத்திரக் குரல்களால் அந்தந்த பாத்திரங்களுக்கு உயிரூட்டி உள்ளனர்.
ரஃபிக்கி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் விடிவி கணேஷ் “இங்கே என்ன சொல்லுது…” என்ற தனது அடையாள வசனத்தைப் பேசி கைதட்டல் பெறுகிறார்.
அர்ஜுன் தாஸின் கம்பீர குரலோடு வரும் முஃபாசாவின் வீரம் மற்றும் விவேகமும், அசோக் செல்வனின் மென்மையான குரலோடு வரும் டாக்காவின் காதல் மற்றும் துரோகமும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் ரசிக்க வைக்கிறது.
தி லயன் கிங் கதாபாத்திரங்களில் சிறுவர்களை அதிகம் கவர்ந்த மற்றும் சிரிக்க வைக்கும் டிமோன் மற்றும் பும்பா கதாபாத்திரங்களின் திரைப் பங்கு இதில் மிக குறைவாகவே இருக்கிறது.
படத்தில் தொழில் நுட்ப நேர்த்திக்கு உழைத்ததை விட கதையாக்கத்திற்கு மேலும் கவனம் செலுத்திப் பலம் சேர்த்திருக்கலாம்.அப்படி செய்திருந்தால் இந்த படத்தின் உயரம் மேலும் அதிகரித்திருக்கும்.
மொத்தத்தில், ’முஃபாசா : தி லயன் கிங்’ சிறுவர்களுக்கு ஏற்ற ஹாலிவுட் விருந்து.