ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படம் இன்றளவிலும் ரசிக்கப்படுகிறது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய
இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீரடி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது….
இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்புக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது. இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பது தான். வாழ்வின் இடர்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனிதத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை. முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுதனமாக இருப்பவர். தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். அப்படியே இப்பட கதாப்பத்திரத்தின் குணத்துடன் ஒத்துபோககூடியவர். முகேன் ராவ் உணர்வுகளை எளிதாக கையாளும் அதே நேரம், ஆக்சன் காட்சிகளையும் எளிதாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார். அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொலிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ராண்டி எனும் ரத்னவேலு மற்றும் ஆண்டனி ஆகியோருடன் 25 ஆண்டுகால பழக்கம் எனக்கு. அவர்கள் “வெற்றி” படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் திரைக்கதை கேட்டவுடனே இப்படத்தில் பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டார்கள் ஏனெனில் ரசிகர்களை எளிதாக கவரும் தன்மையுடன் அவரவர் துறைகளில் பல புதுமைகளை படைக்க நிறைய வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தது. ரத்னவேலு இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளாராக விளங்குபவர். இந்திய அளவில் கவனம் பெற்ற எந்திரன், சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்தவர். தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமலஹாசனின் “இந்தியன் 2 “ படத்திலும் பணியாற்றி வருகிறார். மிகப்பெரும் படங்களில் பணியாற்றும் அதே நேரம் கலைக்கு மதிப்பளித்து, தரமான சிறு படங்களிலும் பணியாற்ற தவறுவதில்லை அவர். வெகு சிறு பட்ஜெட் படமான குமாரி 21F தெலுங்கு படத்தில் பணியாற்றினார் அவர். ரஜினிகாந்த், மகேஷ்பாபு போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் இடைவெளியில் இம்மாதிரியான சிறு படங்கள் செய்து, இன்றைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் எங்கள் படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு பெருமை.
தமிழ் சினிமாவில் எடிட்டிங்கில் பல புதுமைகள் செய்து அசத்தியவர் ஆண்டனி. ஒரு ஷாட்டை வைத்து கதையின் பல முனைகளை மாற்றக்கூடியவர். அவருடனான கதை விவாதம் பெரும் சந்தோஷம் தந்தது. திரையில் அவரது மேஜிக்கைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நிவாஸ் K பிரசன்னா இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் மிகுந்த திறமை கொண்டவர். இசையின் பல பிரிவுகளிலும் எளிதாகப் பயணம் செய்து அசத்துபவர் அவர் எங்கள் படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி.
அமித்தா ராம் எங்கள் குழுவில் இணைந்திருப்பது எங்கள் குழுவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பலம். படத்தை பற்றிய அவரது நுண்ணிய விவரங்கள் ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது.
தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீரடி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிப்பது எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. “வெற்றி” திரைப்படம் இந்த அனைத்து நம்பிக்கைளும் பூர்த்தி செய்து பெரு வெற்றி பெறுமென நம்புகிறேன் நன்றி.