டாக்டர் கே.வீரபாபு, மஹானா,சுபாஷ் சூப்பராயன், மயில்சாமி, காதல் சுகுமார், சாம்ஸ்,அம்பானி சங்கர், வெங்கல்ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் வீரபாபு. ஒளிப்பதிவு அருள் செல்வன், இசை சிற்பி.தயாரிப்பு வயல் மூவிஸ்.
கொரோனா காலகட்டம் மக்களுக்குச் சேவை செய்பவர்களை கதாநாயகன் ஆக்கியது.இப்படி மக்களிடம் மருத்துவ சேவை செய்து கதாநாயகன் போல் பிரபலமானவர் தான் டாக்டர் வீரபாபு .அவர்தான் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நாயகன் டாக்டர் வீரபாபு,இந்தப் படத்தில் மூலிகை சம்பந்தப்பட்ட ஈடுபாடு உள்ளவராக வருகிறார்.அதுமட்டுமல்லாமல் சமூக சேவைகளில் இயங்குகிறார்.ஆதரவற்ற முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நேசக்கரம் நீட்டி பாதுகாக்கிறார். நாயகி மஹானா குடும்பத்தில் நடந்த ஒரு குழந்தைக் கடத்தல் வீரபாபுவுக்குத் தெரிகிறது.குற்றவாளிகளைத் தேடி ஓடுகிறார்.வீட்டில் வேலை பார்ப்பவர் தொடங்கி அந்தப் பாதை பெரிய வலைப் பின்னலில் முடிகிறது.
அதில் மற்ற மாநிலத்திலிருந்து குற்றவாளிகளும் சம்பந்தப்பட்டு உள்ளதையும் அறிகிறார்.
குற்றவாளிகளைப் பிடிக்க களத்தில் இறங்கி அவர்களை எப்படி அழிக்கிறார் என்பதுதான் ‘முடக்கறுத்தான்’ படத்தின் கதை.முடக்கத்தான் என்று சொல்லப்படும் முடக்கறுத்தான் மூலிகை முடக்குவாதத்தை நீக்கக்கூடியது. அதுபோல் சமுதாயத்தில் குழந்தைகளைக் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் கொடூரமான மனநோய் கொண்ட மனிதர்களை ஒரு மூலிகையைப் போல் வேரறுக்கும் கதாநாயகனின் கதைதான் இது.
ஒரு புதுமுக நடிகராக இருந்தாலும் தான் ஏற்ற முத்துப்பாண்டி கதாபாத்திரத்திற்கு அழகாகப் பொருந்தி உள்ளார் வீரபாபு.தானே இயக்கி நடிப்பதால் தன் பாத்திரத்திற்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்காமல் இயல்பாக வருகிறார்.பேசும் வசனங்களும் இயல்பாக உள்ளது ஆறுதல் .அதேபோல் சண்டை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.சண்டைக் காட்சிகளைப் பார்க்கும் போது அவரது உழைப்பு தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மஹானா சில காட்சிகளில் வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயனும், இன்னொரு வில்லனாக மயில் பாத்திரத்தில் வருபவரும் மிரட்டுகிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி படத்திற்குப் பலம். சில காட்சிகளில் வரும் மயில்சாமி சிரிக்க வைக்கிறார்.சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரது கூட்டணியில் சில இடங்களில் மட்டும் சிரிப்பூட்டுகிறார்கள்.
அருள் செல்வனின் ஒளிப்பதிவு மிகவும் சாதாரணமாக இருக்கிறது. ஒளிப்பதிவின் மூலம் சில காட்சிகளை உயர்த்திக் காட்டி ,படத்தை பலப்படுத்தி இருக்கலாம்.
சிற்பியின் இசையில் பழநிபாரதியின் வரிகளில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
குழந்தை கடத்துவது ஒரு கொடூரம் என்றால் அவர்களைக் கடத்தி பிச்சை எடுக்க வைப்பது ஒரு சமுதாய இழிவாகும். அதைச் செய்யும் கொடூரர்களை எவ்வளவு தண்டித்தாலும் தகும்.இப்படி ஒரு கதை எடுத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு அதைக் காட்சிப்படுத்தியுள்ளார் வீரபாபு.
நோக்கத்தை மட்டும் நம்பி படத்தை எடுத்திருக்கும் அவர், சினிமாவில் அதன் தொழில் நுட்பத்தை அறியாமல் தெரிந்து கொள்ளாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருப்பது ஒரு சாதாரண படமாக தோன்ற வைக்கிறது.
சினிமா தொழில்நுட்பம் என்கிற வாகனத்தில் ஏறித்தான் நாம் நினைத்த எதையுமே சரியாகப் பேச முடியும்.அப்படி எடுத்து இருந்தால் ‘முடக்கறுத்தான்’ விழிப்புணர்வு ஊட்டும் படமாக மாறி இருக்கும்.