‘முடிஞ்சா இவன புடி’ விமர்சனம்

mip4‘நான் ஈ ‘ நாயகன் சுதீப்பிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரே நாயகனாக  தமிழில் நடித்துள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. சுதீப் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார்.

பணப்போராட்டத்தால் தன் தந்தைக்கு நேர்ந்த கதியால் பணத்தேடல் மீது வெறி நாயகன் சுதீப்பிற்கு. எப்படியாவது அடைய எண்ணுகிறார். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீட்டில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை புத்திசாலித்தனமான  முறையில் கொள்ளையடிக்கிறார்.அதை ரகசிய இடத்தில் பதுக்கி  வருகிறார். அந்தவகையில் ஒரு பண முதலையான முகேஷ் திவாரியின் வீட்டில் புகுந்து, அவர் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தையெல்லாம்  அள்ளுகிறார். கொள்ளைபோனது  கணக்கில் இல்லாத கறுப்பு பணம் என்பதால் அவரால் வெளியே சொல்ல முடியவில்லை.உள்ளுக்குள் புகைகிறார்.

இருந்தாலும், போலீசிடம் நேரடியாகப் புகார் தராமல் தனக்கு தெரிந்த காவல் அதிகாரி மூலமாக  திருடியவனை தேடும் முயற்சியில் இறங்குகிறார். இந்நிலையில், போலீசுக்கு ஒரு ரகசிய சி.டி. ஒன்று கிடைக்கிறது. அதில்  வரும் காட்சிகளில் சுதீப் தான் திருடிய பணத்தை நண்பர்களுடன் பங்குபோடுவது பதிவாகியிருக்கிறது. அதில் தெரியும் சுதீப் யார்?  அந்த  சுதீப் ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், மிகவும் நல்ல மனிதர் எனவும் மற்றவர்கள் மூலம் தெரிகிறது.

போலீஸ் சுதீப்பை கைது செய்து அடித்து  துவைத்து விசாரிக்கிறது. ஆனால் சுதீப்  ;நான் அவனில்லை’ என்றும், அது தனது அண்ணன் என்றும், தான் ஒரு நிரபராதி,அப்பாவி என்றும் கூறுகிறார். இதனால் குழப்பமடைந்த போலீஸ் அவரை விடுதலை செய்கிறது.

மீண்டும் அன்னொரு தொழிலதிபரான சரத்லோகித்சவாவின் வீட்டிலும் கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு காரணமும் சுதீப்தான் என்று முறையிட, போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், கோபமடைந்த பணமுதலைகள் முகேஷ் திவாரியும், சரத் லோகித்சவாவும் கொள்ளைபோன தங்களது பணத்தை தாங்களே மீட்டெடுக்க திட்டமிடுகிறார்கள்.

இறுதியில், அந்த கறுப்பு பணத்தையெல்லாம் சுதீப்பிடம் இருந்து மீட்டார்களா? உண்மையில் இந்த கொள்ளைகளுக்கெல்லாம் காரணம் யார்? என்பதைச் சொல்வதே படத்தின்முடிவு.

நாயகன் சுதீப் படத்தின் கதையை தனி ஒருவராகத் தாங்கி நிற்கிறார். சிவன் ,சத்யா என இருமுகம் காட்டி நடித்துள்ளார்.அப்பாவித்தனம், அடிதடி என இருவேறு வகையாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் மாறுபட்ட வெவ்வேறு விதமான நடிப்பை வழங்கியுள்ளார்.

நித்யா மேனன், அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார். எடை போட்டுள்ளதே கவனிக்க வில்லையா நித்யா?

பிரகாஷ்ராஜ் தந்தையாக  வருகிறார். குறைந்த நேரமே வந்தாலும் பளிச்செனப் பதிகிறார். சுதீப் -சதீஷின் காமெடி  சுமார்.

வில்லன்களாக வரும் முகேஷ் திவாரியும் முட்டைக்கண்  சரத் லோகிஸ்த்வாயும்  மிரட்டல் ரகம்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனக்கென உள்ள குறைந்த பட்ச உத்திரவாத மசாலா பாணியில்  வணிகமயமான படத்தை கொடுத்திருக்கிறார்.  அவரது பழைய படமான ‘வில்லன்’  மற்றும் ‘ஜென்டில்மேன்’  படங்களின் நினைவு வருவதை ஏன் தவிர்க்கவில்ல?

ராஜரத்னத்தின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அசத்தல்.இமான் இசையில் பாடல்களைவிட பின்னணி இசை சிறப்பு.

மொத்தத்தில் ‘முடிஞ்சா இவன புடி’  முழு ரவிக்குமார் பிராண்ட் படம்.