சதீஷ் ,சுரேஷ் ரவி, மோனிகா , மானசா சவுத்ரி, லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் சுப்பிரமணி நடித்துள்ளனர். பிரவீன் சரவணன் இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ, இசை எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்,படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ் ,தயாரிப்பு மேபோகாஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன்.
இதுவரை நகைச்சுவை பாத்திரங்களில் வலம் வந்து கொண்டிருந்த சதீஷ் இதில் ஓரளவு கதாநாயகன் என்கிற சொல்லும் படியான பாத்திரத்தில் நடித்துள்ளார்.சதீஷ் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றுகிறார்.
நாயகி மோனிகா சின்னகொட்லா ஒரு டாக்டர். இருவரும் காதலிக்கிறார்கள் . இரு வீட்டிலும் சம்மதிக்கிறார்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை.திருமணத்திற்குச் சில தினங்களே உள்ள நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவல் அறிந்த சதீஷ், ஏற்கெனவே கறாரான காதலிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எல்லாமே முடிந்து விடும் என்று பயந்து அதை நீக்க முயற்சி செய்கிறார்.
அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, அந்த வீடியோவின் பின்னணி மற்றும் அதை யார், எதற்காக இணையத்தில் பதிவேற்றினார்கள் ? என்பதைக் கலகலப்பாகச் சொல்வது தான் 118.19 நிமிடங்கள் கொண்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் மீதிக் கதை.
நாயகனாக நடித்துள்ள சதீஷ்,கண்டதும் காதல், அதைக்காப்பாற்ற பொய், குட்டு வெளியாகும் அசட்டுத்தனங்கள், அதனால் பிரிவு, அதைச்சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை, அதை எதிர்கொள்ளும் போராட்டங்கள், என்று அனைத்து விதமான நடிப்புத் தருணங்களையும் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
சதீஷின் நண்பராக, படத்தின் மற்றொரு நாயகனாக படம் முழுதும் வரும் சுரேஷ் ரவி, தனது வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார். சதீசுக்கு இணையாகத் தோன்றுவது மட்டுமல்லாமல் இணையாகச் சிரிக்கவும் வைக்கிறார்.
அவர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது அந்தந்த நேரத்து டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்.அவரது பாத்திரம் கதை திருப்பத்திற்கும் உதவுகிறது.
சுரேஷ் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கும் மானசா செளத்ரியும் ,சதீஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லாவும் ஆரம்பத்தில் தலைகாட்டி, ஒரு பாடல் காட்சியில் வலம் வந்து,சில காட்சிகளோடு காணாமல் போய் கடைசியில் முகம் காட்டுகிறார்கள்.
சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
ஒரு வணிகப் படத்திற்கு ஏற்றபடி ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ படம் முழுவதையும் வண்ணமயமாக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் வணிக ரீதியிலான அம்சங்களோடு உள்ளன.பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜு குறைவில்லாத படி தன் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி இயக்கி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறா ர் பிரவீன் சரவணன்.கதாநாயகனின் பிரச்சினை சார்ந்த முதல் பாதியில் இருந்த கலகலப்பு பிறகு குறைந்து விடுகிறது.ஆனாலும் கதாபாத்திரங்களின் நகைச்சுவைச் கூட்டணிக்குப் பலன் கிடைத்துள்ளது.
வீடியோ ஒன்றை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்து ஒரு படத்தை உருவாக்கிய வகையில் இயக்குநர் பிரவீன் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தத்தில், ‘முஸ்தபா முஸ்தபா’ ஓகே ரகம்.


