இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் Capital Film Works சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. எஸ்.பி பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குநர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதை’ வெங்கி மற்றும் அதிதி செங்கப்பா என்று புதியவர்கள், ஜாம்பவான்கள் ஆகியோர் ஒன்று கலந்த நடிப்பு பட்டாளத்துடன் வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது ‘மூணே மூணு வார்த்தை’.
இன்னிசைக் குரலால் நம்மை கவர்ந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் இப்படத்தில் லக்ஷ்மியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
“ நானும் லக்ஷ்மியும் நடித்த மிதுனம் என்ற தெலுங்கு படத்தை பார்த்து எங்களை ஒரு மூத்த தம்பதியர் கதாபாத்திரத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று இயக்குநர் மதுமிதா கேட்டார். இப்படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது. மேலும், இக்கால தலைமுறையினரிடம் இருந்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளக் கூடிய வாய்பாகவும் அமைந்தது” எனக் கூறினார் எஸ்.பி . பாலசுப்ரமணியம்.
“ ஆரம்பத்தில் அர்ஜுனின் பெற்றோராக இருந்த இந்த கதாப்பாத்திரங்களை, எங்களுக்காக தாத்தா, பாட்டி என்று மாற்றி அமைத்தார் இயக்குநர் மதுமிதா. மிகவும் திறமைசாலி. ஒரு நடிகரிடம் எப்படி வேலை வாங்குவது என்று நன்றாக தெரிந்தவர். புதுமுக இசையமைப்பாளர் கார்திகேயமூர்த்தி தனது இசையால் இப்படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளார். இவர் பழம்பெரும் மிருதங்க கலைஞர் மூர்த்தி அவார்களின் பேரன் என்பதை பின்பே தெரிந்தது.
“ இப்படத்தில் ’வாழும் நாள்’ என்ற பாடலை பாடியுள்ளேன். இப்பாடலின் கார்த்திகேயனின் இசையில் அந்த வரிகளை பாடும்பொழுது என் கண்கள் கலங்கியது. தமிழில் வரும் கமர்ஷியல் படங்களில் இது சற்று வித்தியாசமான முயற்சி. ‘மூணே மூணு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “ ஒரு ஹைக்கூ கவிதை.பல இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கி கொண்டிருக்கும் தயாரிப்பாளர் எஸ்.பி சரண் என் மகன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்.” என்று கூறினார் ‘பாடும் நிலா’ எஸ்.பி பாலசுப்ரமணியம்.