‘மேக்ஸ்'(MAX) திரைப்பட விமர்சனம்

கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், சுனில், சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.

விஜய் கார்த்திகேயா எழுதி இயக்கியுள்ளார். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார் .எஸ் ஆர் கணேஷ் பாபு படத்தொகுப்பு செய்துள்ளார்.தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ் .

இது ஓர் இரவில் நடக்கும் கதை .ஓர் இரவில் அதிகார வர்க்கத்தின் வாரிசுகள் போலீஸ் தடையை மீறி தடுப்புகளை உடைத்துக் கொண்டு கார் ஓட்டுகிறார்கள். செக்போஸ்ட்டில் நிற்காது போனது மட்டுமல்ல போலீசிடமும் தவறாக நடந்து கொண்டு தகராறு செய்கிறார்கள்.
அவர்களைப் பிடித்து லாக்கப்பில் உள்ளே தள்ளி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அங்கே காவல் பணியில் இருக்கும் சுதீப் நினைக்கிறார். ஆனால் அப்போதுதான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு  வேலையில் சேர்ந்திருக்கிறார்.இது அரசியல்வாதி அமைச்சர் சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் இது மேல் இடத்து விவகாரம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று சக போலீஸ்காரர்கள் கூற சுதீப் அதற்கு ஒப்பதில்லை. இது பிணையில் வர முடியாத வழக்கு என்று தீவிரமாக இறங்குகிறார்.பிடித்து உள்ளே தள்ளி லாக்கப்பில் வைக்கிறார். இதனை அறிந்து அமைச்சர் தனது ஆட்களை அனுப்புகிறார்.
லாக்கப்பில் இருவர் இறந்து போகின்றனர் .அதற்குப் பிறகு நடக்கும் பரபர சம்பவங்கள் தான் இந்தப் படம்.

ஒரே இரவில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் என்கிற போது தமிழ் ரசிகர்களுக்கு ‘கைதி’ படம் நிச்சயம் நினைவுக்கு வரும். இருந்தாலும் இதில் மாறுபட்ட திரைக்கதை அமைத்து அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயா தனித்து வெளியே தெரிகிறார்.

இந்த மேக்ஸ் திரைப்படத்தில் காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய் அதாவது மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்துள்ளார்.ஒரு ஆக்சன் கதாநாயகனாக சுதீப் தன்னைத் தீவிரமாக வெளிக்காட்டி அதில் வெற்றி பெற்றுள்ளார்.

காவல் ஆய்வாளர் ரூபா கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அவை அழுத்தமானவை. இது ஒரு கன்னட திரைப்படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து நிறைய தமிழ் நடிப்புக் கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு உதாரணம் தலைமை போலீஸ்காரராக வரும் இளவரசு .

இரவில் நடக்கும் கதை என்பதை அதற்கேற்ற இருளையும் ஒளியையும் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா.அஜீனிஸ் லோக்நாத்தின் பின்னணி இசையும் குறை சொல்ல ஒன்றுமில்லை.பரபரப்பு குறையாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ் பாபு.

இது மாதிரி படங்களுக்கு தொய்வு ஏற்படக்கூடாது .படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்குள் நம்மைப் பூட்டி வைத்துக் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
அதற்குப் பிறகு நாம் நிமிர முடியாத அளவிற்கு நம்மைக் கட்டிப் போடுகிறார்கள்.

குறிப்பாகப் படத்தின் கடைசி 20 நிமிடம் பார்வையாளர்களை இருக்கையில் அமர்த்தி அசையாது ரசிக்க வைக்கும்  அளவிற்குப் பரபரப்பான காட்சிகள்.

படம் எடுக்கப்பட்டுள்ள முறை சிறிய திரைகளில் ஓடிடியில் பார்த்தால் திருப்தி வராது. திரையரங்கில் சென்று அனுபவித்தால் தான் இந்த பட்டத்தை ரசிக்க முடியும் அந்த அளவிற்கு ஆக்சன் காட்சிகளைப் பிரமாதப்படுத்தியுள்ளார்கள்.

இந்தப் படம் ஆக்சன் பட ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும்.