‘மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்

பிரியங்கா அருள் மோகன் பிரதான வேடம் நேற்று நடித்துள்ள படம் இது.உடன் பெரும்பாலும் கொரிய முகங்கள் வருகின்றன.

ரா. கார்த்திக் இயக்கியுள்ளார்.ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்தார்.

பிரியங்கா சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அவரது தந்தை ஒரு சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிறார் .மிக சுமாரான குடும்பம் தான் என்றாலும் அவரது கனவும் ஆசைகளும் உலக அளவில் விரிந்துள்ளன. இனம் புரியாமல் கொரிய நாட்டின் மீதும் அதன் இசையின் மீதும் ஆர்வம் கொண்டு கொரியா நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை பிரியங்கா மனதிற்குள் ஒரு கனவாக வளர்த்து வருகிறார்.பெற்றோருக்கு அதில் விருப்பமில்லை.இருந்தாலும் ஒரு வழியாக அங்கு செல்லும் காலம் வாய்க்கிறது. அங்கே அன்பு பாசம் நேசம் அவமானம் என அனைத்தையும் சந்திக்கிறார். தான் நினைத்ததற்கு மாறாக அவருக்கு அந்த அனுபவம் இருக்கிறது.அதை மீறி பாலைவனச் சோலை போல் அவருக்கு ஒரு நெகிழ்ச்சி மிக்க தருணம் வாய்கிறது.அதைத் தாய்நாடு திரும்பிய பிறகு தான் உணர்கிறார்.இந்த சூழ்நிலையில் அவர் மீண்டும் கொரியா செல்ல நினைக்கிறார் .ஏன் செல்கிறார் அவர் குடும்பத்தினர் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்
என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘மேட் இன் கொரியா’.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா வசீகரமான முகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பு என்று அந்தப் பாத்திரத்தில் சரியாகப் பொருந்தி அமர்ந்து கொள்கிறார்.படத்தின் கதை அவரைச் சுற்றியே நடப்பதால் பிரதான நாயகியாக அவரே படத்தைத் தோளில் சுமந்துள்ளார்.

இயற்கை எழில் சூழ்ந்த ஊட்டி மற்றும் நவீனம் கொண்ட கொரியா, என இரண்டு வெவ்வேறு களங்களில் கதையும் காட்சிகளும் பயணம் செய்கின்றன.படம் முழுக்க பிரியங்கா மோகன் தனது திரைத்தோற்றத்தால் பார்ப்பவர்களுக்கு நிறைவு தருகிறார்.மகிழ்ச்சி, துயரம், பாசம்,
காதல், பிரிவு, அவமானம், ஏமாற்றம், நம்பிக்கை எனப் பல்வேறு நடிப்புத் தருணங்களில் ஸ்கோர் செய்கிறார்.படத்தின் பிற குறைகளை மறந்து ரசிக்க வைக்கிறார்.

இதுவரை சிறு வேடங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த்,பிரியங்காவின் காதலராகச் சொல்லிக் கொள்ளும்படியான முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் வருகிற கொரிய நாட்டு நடிகர், நடிகைகள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக வருபவர்கள் என அனைவரும் தங்களது பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக கிராணி கிச்சன் விடுதி நடத்தும் அந்த மூதாட்டி தனது பாச நடிப்பால் அனைவரது மனங்களையும் கவர்ந்து கொள்கிறார்.

எந்தக் காட்சியைப் பார்த்தாலும் ரசிக்கும்படியான பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்
ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் செய்துள்ள ஒளிப்பதிவு நேர்த்தி.
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமை, பின்னணி இசை இதம்.

மெதுவாக நகரும் திரைக்கதை,நிறைய நேரம் பிற மொழி பேசிக் கொண்டிருப்பது போன்றவை சிலருக்கு விலக்கம் அளிக்கலாம் .ஆனால் அன்பு என்பதற்கு மொழி எல்லைகளோ பிரதேச எல்லைகளோ கிடையாது என்ற மெல்லுணர்களை வெளிப்படுத்தும் பாத்திரங்களைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ரா. கார்த்திக். சபாஷ்.

எனவே மொழி கடந்தும் ரசிக்க முடியும்.வாழ்க்கையே ஒரு பயணம் தான் .அதில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் முக்கியமானவை என்பதை உணர வைத்துள்ளார் இயக்குநர் ரா.கார்த்திக்.

மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ என்கிற தமிழ்த் தயாரிப்பு தரம் என்றே கூற வேண்டும்.