‘மேதகு’ என்கிற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்க்கைக் கதை திரைப்படமாகி வெளியாகி கொண்டிருக்கிறது.ஏற்கெனவே முதல் பாகம் வந்த கதை , இப்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக மேதகு 2 வருகிறது.
முதல் பாகத்தில் எல் டி டி ஈ இயக்கம் உருவானது எப்படி? அதன் நோக்கம் என்ன? என்று கூறப்பட்டது.அதற்கு தமிழகத் மக்களும், சில தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள் போன்ற வரலாற்றுச் சம்பவங்களை மேதகு 2 விளக்குகிறது.
ஏற்கெனவே கடந்த 2021ம் ஆன்டு வெளியான மேதகு முதல்பாகத்தில் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சினைகளைச் சந்தித்தார்கள் எனக் கூறி இதில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வு மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.
இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்னவெல்லாம் நடந்தன என்பவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுக்காக போராடும் உணர்வு கொண்ட இளைஞர்களை வடிகட்டித் தேர்வு செய்து இயக்கம் கட்டிய வரலாறும் அதற்கு இந்தியாவில் இருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட நெருக்குதல்களை மீறி,அந்த மிரட்டலுக்குப் பணியாமல் பேசுவதும், தொடர்ந்து பிரபாகரன் வீட்டுச் சிறையில் அடைக்கப் படும் காட்சியும் படமாக்கப் பட்டுள்ளது.
அதேபோல் அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆர் எல் டி டி ஈ அமைப்பை அழைத்து பேசி உதவும் காட்சியும் உண்டு.
பிரபாகரன் வேடத்தில் கவுரி சங்கர் நடித்துள்ளார். தோற்றமும் அலட்டல் இல்லாத நடிப்பும் அவருக்குக் கை கொடுக்கிறது.
1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சார அடையாளத்தை அழிக்க எண்ணி யாழ் நூலகத்தைத் தீக்கிரை யாக்கிய துயரமான சம்பவம், தொடர்ந்து இலங்கை முழுவதும் பரவிய தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையையும் கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் பதிவு செய்துள்ளனர்.படத்தைச் சிக்கனமாக எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காட்சிகள் மிக எளிமையாக உள்ளன.இது படத்தின் பலவீனமாக இருக்கிறது.
மேதகு முதல்பாகத்துக்கே தணிக்கைச் சான்று கிடைக்காததால் மேதகு 2 படத்துக்கும் தணிக்கை கிடைக்கப் போவதில்லை என்று பட தரப்பு கூறுகிறது. ஆனாலும் இப்படம் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப் படத்தை வெளியிடுவதற் காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் இக்குழு தொடங்கி யுள்ளது.
தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களி லேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தைப் பார்க்க முடியுமாம்.
மேதகு 2 படம்,வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி வெளிநாட்டுத் திரையரங் குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது