‘மையல்’ திரைப்பட விமர்சனம்

சேது, சம்ரிதி தாரா , பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி , ரத்னகலா, சி.எம். பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை திரைக்கதை வசனம் ஜெயமோகன்.இயக்கி உள்ளார் ஏபிஜி ஏழுமலை,ஒளிப்பதிவு பாலா பழனியப்பன்,இசை அமர் கீத் எஸ். ,எடிட்டிங் வெற்றி சண்முகம், தயாரிப்பு அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால் ஆர்.

மையல் என்றால்  மயக்கம், காதல் என்று பல்வேறு பொருள்கள் உண்டு.
இந்தப் படம் எப்படி என்று பார்க்கலாம் .

படத்தின் கதை என்ன?
அது ஒரு மலைக் கிராமம். அங்கே ஒரு நாள் நள்ளிரவில் தனி வீட்டில் இருக்கும் வயதான தம்பதியினர் கொலை செய்யப்படுகின்றனர்.அதே இரவு ஆடு திருடும் திருடன் ஒருவன் ஒரு மந்தைக்குள் புகுந்து ஒரு ஆட்டைத் திருடி ஒரு பெட்டிக்குள் போட்டு பைக்கில் கொண்டு செல்கிறான்.இதை அறிந்த ஆட்டுக்காரர்கள் துரத்துகிறார்கள். வண்டியை விட்டுவிட்டு ஓடிப்போன அவன், தப்பிப்பதற்காக ஒரு கிணற்றில் குதித்து விடுகிறான். துரத்திய கூட்டம் திரும்பி விடுகிறது.இரவு முழுக்க கிணற்றில் கிடக்கிறான். காலையில் தண்ணீர் எடுக்க வந்த அல்லி, மாடுகளைக் கட்டி இழுக்க வைத்து வாளியில் மேலே தூக்கிக் காப்பாற்றுகிறாள். அவனால் காலால் நடக்க முடியவில்லை. அவனை மாட்டு மேல் போட்டுக் கொண்டு வீடு சென்று பார்த்துக் கொள்கிறாள். மருந்து தடவுகிறாள். நான் திருடன் தான் என்கிறான். பரவாயில்லை என்கிறாள் அவள். அத்துடன் அவன் மேல் அவளுக்கு இனம் புரியாத ஈர்ப்பு வருகிறது .அவளும் பாட்டியும் தான் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சூனியக்கார குடும்பம் என்று பெயர். அந்தக் கிராமத்தில் இருந்து அவர்கள் விலகித் தனியாக இருக்கிறார்கள்.ஊர்க்காரர்கள் பெரிதாக அங்கே யாரும் வருவதில்லை. அவளுக்கும் ஊர் உலகம் தெரிவதில்லை. இந்த நிலையில் போலீஸ் கொலையாளிகளைப் பிடிக்க வலை வீசுகிறது. ஆட்டுக்காரர்கள் அந்த ஆடு திருடனைப் பிடிக்க வேண்டும் என்றும் புகார் கொடுக்கிறார்கள். இப்படிச் சென்று கொண்டிருக்க, ஆடு திருடன் ஒரு நாள் அல்லியின் வீட்டில் இருந்து தப்பித்துச் சொந்த ஊருக்குச் செல்கிறான்.திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு திருந்தி அல்லி உடன் சேர்ந்து வாழலாம் என்று நினைக்கிறான்.தனக்கு இருந்த கொஞ்ச நிலத்தை விற்று புடவை, நகை வாங்கிக் கொண்டு அல்லியைப் பார்க்க செல்லும்போது போலீஸ் அவனைப் பிடிக்கிறது.

அந்த இரட்டைக் கொலை ஆள் வைத்து  செய்து அந்தச் சொத்துக்களை அபகரிக்க நினைப்பவர் ஒரு பண்ணையார்.அதற்கு போலீசும் துணை போகிறது. அதற்காகவே இரண்டு ஆட்களை தயார் செய்கிறார். அவர்களில் ஒருவனையும் போலீஸ் என்கவுன்டர் செய்கிறது இன்னொருவன் அதைப் பார்த்துவிட்டுத் தப்பிக்கிறான். அவனையும் பிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மாடசாமி மீது அந்தக் கொலைப் பழியை சுமத்திக் கதையை முடிக்கப் பார்க்கிறார்கள். முடிவு என்ன என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் பளிச்சென தனியே தெரிவது எளிமையான கதை ,பிசிறு இல்லாத திரைக்கதை, நெருடல் இல்லாத வசனங்கள் காரணம் எழுத்தாளர் ஜெயமோகன். படத்தில் இன்னொரு சொல்லத் தக்க விஷயம்  வறண்ட மலைப் பிரதேசம் ,குகை போன்ற வளைவு நெளிவுகள் போன்ற மலை சார்ந்த பிரதேசங்கள் கதையின் பின்புலமாக அமைந்து தனி அழகு தருகின்றன.அவை கதாபாத்திரங்களில் பின்னணியாக அமைந்து காட்சிகளை அழகாக்குகின்றன.

திருடன் மாடசாமியாக சேது நடித்துள்ளார். சிரிப்பதற்கு வாய்ப்பில்லாத வேடம். அப்படிப்பட்ட பாத்திரத்தில் அவர் சரியாகச் செய்துள்ளார் என்று சொல்ல வேண்டும்.  அல்லியாக சம்ரிதி தாரா நடித்துள்ளார் .அந்த மலைக் கிராமத்துப் பெண்ணாகவே தோன்றுகிறார். அவரது பாட்டி சூனியக்காரி ஆக வருபவரும் ஏதோ மர்மத்தைச் சுமந்தவராகக் தன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பண்ணையாராக சைலன்ட் வில்லனாக பி எல் தேனப்பன் வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் ஒரே மாதிரி இறுக்க முகத்தை வைத்துக் கொண்டுள்ளார். .சூப்பர் குட் சுப்பிரமணி நல்ல போலீசாக வந்து சின்ன சின்ன பாவனைகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

ஒளிப்பதிவு பாலா பழனியப்பன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு குறைவான செலவில் நிறைவான காட்சி அனுபவத்தைத் தருகிறது. அதே போலஇன்னொன்றையும்ட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் , படத்தின் இசை பிரமாதமாக அமைந்திருக்கிறது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி நேர்த்தியாக அமைந்து படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. இசை அமைப்பாளர் அமர்கீத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இவர் இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.பாடல்களில் வாத்தியங்களின் ஆதிக்கம் இல்லாமல் புரிகிற வரிகளில் இனிக்கிற இசை மனதை வருடுகிறது.வசனகர்த்தா தனியாகத் தெரியாத அளவிற்கு இதற்கான வசனங்களை அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்ப எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.போலீஸ் துரத்தும் காட்சிகள் மட்டும் அடிக்கடி வந்து சலிப்பூட்டுகின்றன.

மொத்தத்தில் ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு சிக்கல் இல்லாத திரைக்கதை அமைத்து உள்ளதை சரியானபடி எடுத்து படத்தை நிறைவு செய்துள்ளார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை.

மற்றபடி இந்தப் படம் சலிப்பூட்டாத மையல் என்று கூறும்படி அமைந்திருக்கிறது இதன்  சமையல்.