சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஆஷா சரத் ,குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார்,அருள் எழிலன், வசு மித்ரா நடித்துள்ளனர்.
ராஜுமுருகன் எழுதி இயக்கியுள்ளார்.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
2டி என்டர்டைன்மென்ட் வழங்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இந்தியா வல்லரசு ஆகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். ராக்கெட் விடுகிறார்கள். தலைக்கு மேலே ஆயிரக்கணக்கான விமானங்கள் பறக்கின்றன. இப்படிப்பட்ட இந்த நாட்டில் தான் ஒரு ரேஷன் கார்டு வாங்குவதையே பெரிய கனவாக நினைக்கும் ஏழைகளும் இருக்கிறார்கள்.அப்படி ஒரு சாமான்யனாக தன் கனவை நனவாக்க போராடிக் கொண்டிருக்கும் ஓர் எளிய மனிதர் தான் முத்துச்சிற்பி என்கிற சசிகுமார்.அவரது மனைவி சுசிலாவாக சைத்ரா.ஆனால் அந்த எளிய கனவினை அடைய -அதை நிறைவேற்றுவதற்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு போராட்டம்.ஒரு கட்டத்தில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று ஆவணங்கள் சொல்கின்றன. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஒரு பெரிய டிமாண்ட் வருகிறது. காரணம் அவர்களது சிறுநீரகத்திற்கு விலை மதிப்பில்லாத விலை வைக்கப்படுகிறது. தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்களுக்கு -அவர்களது உறுப்புக்கு பெரிய மதிப்பு வருகிறது. இந்நிலையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் ?இப்படிப்பட்ட அநியாயத்துக்கு எதிராக அவர்களது போராட்டம் தான் ‘மைலார்ட்’ திரைப்படம்.
கோவில்பட்டியில் தனது அடையாளத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சசிகுமார்,மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக கடன் வாங்கி அது வளர்ந்து பெரிதாகி கந்து வட்டிக்காரர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார். சிலர் அவரது வறுமையைப் போக்க சிறுநீரகத்தை விற்கலாம் என்று யோசனை கூறுகிறார்கள். அதன்படி குடும்பத்தினரின் சிறுநீரகங்கள் மத்திய அமைச்சர் சுஜாதா மோகன் என்கிற ஆஷா சரத்துக்குத் தேவைப்படுவதால் இவர்களை வசிய பேச்சு பேசி கவர்ந்து மருத்துவ சிகிச்சை நடக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.அங்கே போனால் சசிக்குமாரின் மனைவி சுசிலாவின் சிறுநீரகம் திருடப்பட்டுள்ளது தெரிகிறது.அதற்குப் பிறகு நடக்கும் பரபர கிருப்பங்களும் நீதி கேட்டு போராடும் ஏழையின் கதையும் தான் மை லார்ட்.
இந்த நாட்டின் அரசு இயந்திரங்களும் அமைப்புகளும் எப்படி சாமானியர்களின் சாதாரண வாழ்க்கையைக் கடனாளி வாழ்க்கையாக மாற்றி நசுக்கிச் சுரண்டுகிறது என்று காட்சிகள் விரிகின்றன.
கிராமத்து அப்பாவித்தனமான தோற்றம் உடல் மொழி தயங்கி தயங்கி பேசும் பேச்சு என்று சசிகுமார் அந்த முத்து சிற்பி பாத்திரத்தில் வெகு பொருத்தமாக உட்கார்ந்து கொள்கிறார். அலட்டிக் கொள்ளாத தனது நடிப்பின் மூலமே அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறார் அவர்.
துறுதுறு தோற்றம் படபட பேச்சு என்று கிராமத்து தைரியசாலி பெண்ணாக சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார் தனது தத்ரூபமான நடிப்பில் கவர்கிறார்.
மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், ஆணவம் அதிகாரம் போன்ற செருக்கையும் திமிரையும் முகத்தில் காட்டி அழகாக நடித்துள்ளார்.நோயாளிப் படுக்கையில் இருந்தாலும் அவரது பாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
நியாயத்திற்குப் போராடும் எதற்கும் விலை போகாத நடுநிலையான போராளிப் பத்திரிகையாளர் நா. கதிர்வேலனாக வருகிறார் குரு சோமசுந்தரம்.அவரது பிடிவாதம் அந்தப் பார்வையிலே தெரிகிறது.
படத்தில் நீதிபதியாக வரும் ஜெயப்பிரகாஷ்,அருளாக வரும் பத்திரிகையாளர் அருள் எழிலன், வழக்கறிஞராக வரும் இயக்குநர் கோபி நயினார், வட்டித் தொழில் செய்யும் வசுமித்ரா என முகம் தெரிந்த நடிகர்களும் சில முகம் தெரியாத நடிகர்களும் தங்கள் இருப்பை அழகாகப் பதிவு செய்துள்ளனர்.
பெரிய பட்ஜெட் படங்களில் கண்களை விரிய வைக்கும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா, எளிமையான கதைக்காக இயக்குநரின் பாதையில் பயணம் செய்துள்ளது பாராட்டத்தக்கது.எப்படிப்பட்ட கேன்வாஸிலும் தன்னால் ஓவியம் வரைய முடியும் என்று அவர் நிரூபித்துள்ளார்.
ஷான் ரோல்டன் அவருக்கான ஆடுகளம் கிடைத்த திருப்தியில் இசைத்து ஆடியுள்ளார். பாடல்கள் பல்வேறு நிறங்கள் காட்டியுள்ளன.பின்னணி இசையும் ஒரு பாத்திரம் போல் வலம் வருகிறது.
படத்தில் சில் இடங்களில் தொய்வை உணர்ந்தாலும் உச்சகட்ட காட்சியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார் படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன்.
எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், அதிகாரத்தின் சுரண்டல்களையும் அமைப்புகளின் சீர்கேடுகளையும் ஆங்காங்கே தொட்டுச் சென்று எளியவர்களின் குரலை ஓங்கி ஒலித்துள்ளார்.
ஒரு சாமானியனின் பாதையின் பயணமாக இந்தப் படம் இருந்தாலும் இதன் உச்சகட்ட காட்சி படம் பார்ப்பவரைக் கலங்க வைக்கும்.
மொத்தத்தில், ‘மை லார்ட்’ எளிய மனிதனின் நீதிக்கான போராட்டம்.


