நாசர் ஒரு நிகழ்வில் தான் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றநாட்களை நினைவு கூர்ந்து சுவாரஸ்யமாகப் பேசினார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
‘ அழியாத கோலங்கள் 2 ‘படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழா பாலுமகேந்திரா நூலகத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் நூலை நாசர் வெளியிட்டார். நடிகை அர்ச்சனா பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்ட பின், நாசர் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது ,
“இங்கே இந்த ‘ அழியாத கோலங்கள் 2’ திரைக்கதை நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த தலைப்பே என்னை அழியாத கோலங்களாக மனதில் உள்ள நினைவுகளை நோக்கி அழைத்துச் செல்கிறது.பாலுமகேந்திரா என்கிற நண்பரை,வழிகாட்டியை நான் சந்தித்த உன்னதமான தருணத்தைப் பற்றியும் அவருடன் பழகிய நாட்களை பற்றியும் நினைத்து நெகழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டு செல்கிறது.
இங்கே அர்ச்சனா இருக்கிறார் அவரும் நானும் திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது அவர் பெயர் ராணி சுதா. திரைப்படக் கல்லூரியில் நாங்கள் அங்கு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் பற்றியும் அதன் போதாமைகள் பற்றியும் வருத்தப்படுவோம். குரல்கொடுப்போம். அப்படிப்பட்ட குழுவாக நாங்கள் இயங்கினோம். எங்கள் சினிமா தாகத்துக்கு ஏற்ற தீனி கிடைக்கவில்லை என்று விமர்சித்து கொண்டிருக்கும் மாணவர்கள் நாங்கள். நான், இந்த ராணி சுதா ,மீனாட்சிசுந்தரம் என நண்பர்கள் நாங்கள் எல்லாம் ஒரு குழுவாக இருப்போம். எங்களைக் கண்டாலே திரைப்படக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு ஒவ்வாமை இருக்கும் .அவர்களுக்கு எங்களைப் பிடிக்காது எங்களைக் கடைசி பெஞ்சில் உட்கார வைத்து இருப்பார்கள்.
ஒருநாள் அமெரிக்காவிலிருந்து வில்லியம் க்ரீவ்ஸ் என்ற பயிற்சியாளர் வந்திருந்தார் எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.அவர் நடிப்பு பயிற்சி பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
அப்போது எங்களையெல்லாம் ஏதாவது கேள்வி கேட்கும் கலாட்டா செய்வோம் என்று கடைசி பெஞ்சில் உட்கார வைத்துவிட்டார்கள். நாங்கள் அடக்கமாக இருந்தோம் .அப்போது வில்லியம் க்ரீவ்ஸ் இடம் சில மாணவர்கள் எப்படி நடிப்பது என்று செய்து காட்டினார்கள்.அவர்கள் அனைவரும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த மாணவர்கள். அவர்களுக்கு அடக்கமான மாணவர்கள் .
நடிக்க வந்தவர்களோ பலரும் பேசிக் கொண்டே யிருந்தார்கள். பேசுவதுதான் நடிப்பு என்கிற ரீதியில் இருந்தது. அதை எல்லாம் க்ரீவ்ஸ் சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.பிறகு அது பற்றி பேசச் சொன்னார் நாங்கள் கடைசிப் பெஞ்சில் இருந்து கை தூக்கினோம். எங்கள் ஆசிரியர்களால் தடுக்க முடியவில்லை.இதைப் பார்த்த ஆசிரியர்கள் சற்று பதற்றமானார்கள்.
நாங்கள் ஒரு நிகழ்ச்சியை ஒரு ஒரு காட்சியை நடித்துக் காட்ட வேண்டும் .அதாவது இம்ப்ரோவைசேஷன் என்கிற பொருளில் நாங்கள் செய்து காட்டினோம்.நாங்கள் மூன்று பேர் அப்போது நட்பாக இருப்போம் நானும் ராணி சுதா என்கிற இந்த அர்ச்சனாவும் அனிதா என்கிற இன்னொரு பெண்ணும் திடுதிப்பென்று அந்தக் கற்பனை செய்த காட்சியை நடித்துக் காட்டத் தொடங்கினோம் .
அதாவது என் மனைவியான அர்ச்சனாவுக்குப் படிக்கட்டில் இருந்து விழுந்ததால் அவரது உடல் பெராலிசிஸ் பாதிப்புக்குள்ளாகி விட்டது. உடல் இயங்க முடியாது .படுத்த படுக்கையாக இருப்பார். காது மட்டும் கேட்கும் வாய் பேச முடியாது.அவர் தனது வெளிப்பாடுகளை கண்களால் மட்டுமே காட்ட முடியும் -அப்படி ஒரு கதாபாத்திரம். அனிதா என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்.இப்படி இருக்கும்போது படுத்த படுக்கையாக இருக்கும் அர்ச்சனாவைப் பார்க்க அனிதாவுடன் அந்த அறையில் நான் நுழைவேன். மனைவியிடம் நான் இவள் என்னுடன் மூன்றாண்டுகள் ஒன்றாக அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள்.இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறுவேன்.இந்த விஷயம் அனிதாவுக்குக் கூட தெரியாது.இதை நான் கூறியதும் அனிதா அரண்டு போய் வெளியே ஓடிவிட்டார். எதிர்பார்த்தது அர்ச்சனா எதிர்வினையாற்ற வேண்டும்.
அர்ச்சனாவைப் பொறுத்தவரை அணுகுண்டை அடைத்து வைத்தது போல் ஒரு நிலை .எப்படி வெடித்து வெளிப்படுத்தப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.
கை, கால்களை அசைக்க முடியாது பேச முடியாது. ஆனால் கண்களாலேயே அதை நடித்துக் காட்டி “எனக்கு இதில் ரொம்ப சந்தோஷம்.தாராளமாகச் செய்து கொள்ளுங்கள்” என்பார் .இதுதான் காட்சி .
இதைப்பார்த்துக்கொண்டிருந்த வில்லியம் க்ரீவ்ஸ் அதையே தனது வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். காட்சியில் நடிப்பு குவியப் போவது அர்ச்சனாவின் கண்களை நோக்கிக் தான் என்பது அவருக்குத் தெரிந்தது .அதைப் புரிந்துகொண்டு கேமரா நெருங்கிக்கொண்டிருந்தது. 2
தேசிய விருதுகள் பெற்றிருந்தாலும் எந்தப் படத்திலும் அப்படி ஒரு நடிப்பை அவர் கண்கள் வெளிப்படுத்தவில்லை. அன்று அர்ச்சனா கண்களால் நடித்த அந்த நடிப்புக்கு எதுவும் ஈடாகாது.அந்த பேசும் கண்கள் என் நினைவில் இன்றும் நிழலாடுகிறது. வில்லியம் க்ரீவ்ஸ் எங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். இதுதான் நடிப்பு. நடிப்பு என்பது மொழிகளைக் கடந்தது என்றார்.
அர்ச்சனாவை பாராட்டியதுடன் உனக்கு பாலுமகேந்திரா என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் .நாளைக்கு வா என்று அவர் சொன்னார். அவர் பாலுமகேந்திரா என்று கூறியது கூட எங்களுக்கு சரியாக விளங்கவில்லை .அப்படித் தவறான உச்சரிப்புடன் கூறினார்.எனக்கு கூட இன்று டைட்டானிக் படத்தின் கதாநாயகன் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அப்படித்தான் அவரும் உச்சரித்தார்.மறுநாள் அவர் சொன்ன முகவரிக்கு சென்றோம் .சென்று காத்திருந்த இரு நிமிடங்களில்அங்கு உள்ளிருந்து தொப்பி அணிந்தபடி ஒருவர் வந்தார் .அவரைப் பார்த்தவுடன் “பாலுமகேந்திரா” என்று ராணி சுதா ஆச்சரியப்பட்டார் “கத்தாதே அமைதியாக இரு “என்று அவரை அமர்த்தினேன். அப்படித்தான் அவர் பாலுமகேந்திராவிடம் அறிமுகமானார். அவர் படங்களில் நடித்தார் .அவர் முதலில் நடித்தபோது வேறு இரண்டு படங்களில் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் .ஆனால் அவர்கள் அர்ச்சனாவுக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி
அந்த படங்களில் இருந்த தன்னை நீக்கிவிட்டார்கள் என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி என்றேன்அப்படி நடிப்பு வரவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டவர் இவர். இதனால் தான் இந்தியாவின் சிறந்த நடிகையாக 2 முறை தேசிய விருது பெற்றார்.
அவருக்கும் எனக்குமான நட்பு பல்லாண்டுகள் கடந்தும் இன்றும் நீடிக்கிறது .ஆனால் நாங்கள் ஒருவருக்கு அடிக்கடி நலம் விசாரித்துக் கொள்வதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட சந்தித்துக் கொள்வோம். அடிக்கடி நலம் விசாரித்துக் கொள்ள வில்லையானாலும் உணர்வால் அருகில் இருப்பதை போன்று நாங்கள் உணர்கிறோம். அப்படிப்பட்ட அர்ச்சனா இங்கே இருக்கிறார்.
பாலுமகேந்திரா அவர்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. அவரது சினிமா அறிவு கரிசனம் பற்றிய பெரும் மதிப்பும் உண்டு .ஆனால் அவர் இயக்கத்தில் நான் நடிக்க வில்லை. ‘வீடு’ படத்தில் கூட நடிப்பதாக இருந்தது என்னுடைய கால்ஷீட் தேதிகள் கிடைக்காததால் முடியாமல் போயிற்று .கடைசிவரை அவர் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை அதற்காக நான் வருத்தப்படவில்லை .மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இயக்கத்தில் நடிக்காதது எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.அவர் இயக்கத்தில் நடித்திருந்தால் அவர் ஒரு இயக்குநர் நான் ஒரு நடிகன் என்கிற வகையில்தான் எங்கள் உறவு இருந்திருக்கும். ஆனால் கடைசி வரை நாங்கள் நண்பர்களாக இருக்கும் பேறு கிடைத்து இருக்குமா என்று தெரியாது. அந்தக் குறையை போக்க வேண்டும் என்றோ என்னவோ அவரது தலைப்பில் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். இது திரைக்கதை புத்தகமாக வருவது மகிழ்ச்சி . பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் செயல்படுகிறது. அவரது தொடர்ச்சியாக அவரது எண்ணங்கள் படி சினிமாவை பற்றி ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலுமகேந்திரா சினிமாவின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருந்தார்.சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார். அவர் தனது கடைசிக்காலத்தில் சினிமா பற்றி கூறிய கருத்துக்கள் அவர் உச்சத்தில் இருந்தபோது கூறியிருந்தால் இன்றைய சினிமாவே தலைகீழாக மாறியிருக்கும் .அஜயன் பாலா வெற்றிமாறன் போன்றவர்கள் அவரது எண்ணங்களை செயல்களாக்கி நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களை நான் வாழ்த்துகிறேன் .முன்பெல்லாம் நாங்கள் திரைக்கதைகள் படிக்கும்போது தமிழிலேயே அது கிடைக்காது. ஆங்கிலத்தில் தான் வந்திருக்கும். ஆங்கிலத்தில் உள்ள கதைகளையும் அந்தக் கலாச்சாரத்தின் தன்மையையும் புரிந்து கொண்டு நாங்கள் படிக்கவேண்டும். அப் படத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது பாவ்லா செய்து கொண்டிருக்க வேண்டும். இப்போது சினிமா பற்றி படிப்பவர்கள் பாக்கியவான்கள். ஏராளமான புத்தகங்கள் தமிழில் வருகின்றன .அப்படித்தான் இன்று ‘அழியாத கோலங்கள் 2’ திரைக்கதையாக வந்திருக்கிறது.படத்தைப் போலவே இதை எம்.ஆர்.பாரதி நன்றாக உருவாக்கியிருக்கிறார்.
திரைக்கதை நூலை வெளியிட்டதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நடிகை அர்ச்சனா பேசும்போது,
“நான் இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களை என்றும் மறப்பதில்லை .அவரது பெயரிலான இந்த நூலகத்தில் கூட பாலு சார் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.அவரது படத் தலைப்பில் வந்துள்ள ‘அழியாத கோலங்கள் 2 ‘ படம் அருமையான கதை. அதை எனது நண்பர் எம். ஆர் -பாரதி கூறியபோது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதை எப்படியும் படமாக எடுத்துவிட வேண்டும் என்று பாரதி கூறியபோதே தோன்றியது. எப்படியும் படமாக எடுத்தாக வேண்டும் என்று நினைத்தேன். நடிக்கவும் சம்மதித்தேன் .ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நான் மாறினேன். இதனால் பல கஷ்டங்கள் நஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் இந்தப் படம் பாலுமகேந்திரா அவர்களுக்கு சமர்ப்பணம் என்று வரும் அந்த ஒருவரிக்காக எவ்வளவு இழப்புகளையும் தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. அப்படியே செய்தோம் .இழப்பைப் பற்றி எந்த கவலையும் படாமல் இதை உருவாக்கினோம்.ஒரு பைசா கூட லாபம் வேண்டாம். முதல் வந்தால் பரவாயில்லை, அது கூட போனாலும் பரவாயில்லை என்று தான் இந்த படத்தை ஒரு பிடிவாதமாக எடுத்து முடித்தோம்.படம் பார்த்த எல்லாருக்கும் பிடித்திருந்தது. படத்தை ஊடகங்கள் பத்திரிகைகள் எல்லாரும் பாராட்டினார்கள். ஆனாலும் இந்த கொரோனா பிரச்சினை வந்ததால் அது சரியாக சேர முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் நாங்கள் அடுத்தடுத்து மேலே தொடர்வோம். பாலு சாரை என்றும் நாங்கள் மறக்காமல் காத்துக் கொண்டிருப்போம்” என்றார்
நிகழ்ச்சியில் நடிகர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்,பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் எழுத்தாளர் அஜயன் பாலா ,இயக்குநர் கதிர்,டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் வேடியப்பன், இத்திரைக்கதை நூலைத் தொகுத்திருக்கும் பரசுராமன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.