‘யாதும் அறியான்’ திரைப்பட விமர்சனம்

தினேஷ் ,ஆனந்த் பாண்டி, அப்புகுட்டி, ப்ராணா, சியாமள்,தம்பி ராமையா நடித்துள்ளனர்.என் .கோபி இயக்கியுள்ளார்.இசை தர்ம பிரகாஷ் .பிரேக்கிங் பாய்ண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

கதாநாயகன் தினேஷ் மனநல மருத்துவர் தம்பி ராமையாவிடம் கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. நாயகன் தினேஷ் சற்றே கூச்ச சுபாவம் கொண்டவர்.ஒரு வழியாக அவருக்கு ஒரு காதலி கிடைக்கிறார்.அவர்தான் பிராணா . காதலியுடன் ஜாலியாகவும், நெருக்கமாகவும் இருக்க விரும்புகிறார் தினேஷ்.காதலியாகி விட்டாலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை.திருமணத்திற்குப் பிறகுதான் எல்லாமும் என்று உறுதியாக இருக்கிறார். இன்னொரு நண்பனின் ஜோடியோடு அப்படிப்பட்ட காதலியை அழைத்துக் கொண்டு மலைவாழ் இடத்துக்கு ஒரு சுற்றுலா செல்கிறார்கள் .எப்படியாவது அவரை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்கிற திட்டத்தோடு செல்கிறார் தினேஷ்.இரண்டு காதல் ஜோடிகளும் வனப் பகுதியில் இருக்கும் தனியான சொகுசு தங்கும் விடுதிக்குச் செல்கிறார்கள். அந்த விடுதியின் பணியாளராக அப்புக்குட்டி இருக்கிறார்.

நண்பரின் யோசனைப்படி தனது காதலியுடன் இணை சேர நாயகன் தினேஷ் முயல்கிறார். தினேஷின் தொடர் முயற்சி வெற்றி பெறுகிறது. வெற்றி மனநிலையில் இருக்கும் தினேஷுக்கு அடுத்த சில நிமிடங்களில் அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது.பிராணா மூர்ச்சையாகிக் கிடக்கிறார்.பயந்து போகிறார் தினேஷ்.தனது நண்பரிடம் இதைக் கூற இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது. அப்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக சம்பவங்கள் நடந்தேறுகின்றன.அதைவிட பார்வையாளர்களுக்குப் பேரதிர்ச்சியாக ஒரு கால மாற்றம் அங்கே நிகழ்கிறது.சம்பவங்கள் நடக்கும் ஆண்டு 2024 இல் இருந்து 2026 ஆகத் தோன்று கிறது.இது என்ன காலக்கடிகாரப் பயணமா? அல்லது கனவா? அல்லது மாயையா ?அல்லது மனத்தின் பிரம்மையா என்கிற கேள்விகளுக்குப் பதில் தான் ‘யாதும் அறியான்’. திரைப்படத்தின் முடிவு.

அறிமுக நாயகன் தினேஷ் முதல் பாதியில்  இந்தப் பிள்ளையும் பால் குடிக்குமா என்கிற முகத்தோடு வருகிறார். முகம் மறைக்கும் கண்ணாடியும் அசட்டு சிரிப்பும்  என்று அப்படி ஓர் அப்பாவித் தோற்றத்தில் வருகிறார் .ஆனால் அவர் படத்தின் பிற்பாதியில் செய்யும் செயல்கள் அதிர்ச்சி ரகமாக உள்ளன.அவரா இவர்? என்கிற அளவில் அவரது பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.அதில் அவரும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் பிராணா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமள், விடுதிப் பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி என அனைவரும் தங்கள் வேலையைச் சரியாகவே செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் எல்.டி வனப்பகுதியில் ஏகாந்த சூழலில் இருக்கும் விடுதியைக் காட்சிப்படுத்தி பயமுறுத்துகிறார். ஒரே அறையில் நடக்கும் காட்சிகளையும் குறிப்பாக நண்பர்கள் இருவரிடையே வரும் மோதல் காட்சியையும் சிறப்பாக எடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

எளிமையான ஒரு  கதைக்கருவை வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ரகப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்.கோபி. 2024 ம் வருடம் நடக்கும் கதையை, 2026 -ம் ஆண்டில் பயணிப்பது போன்று காலம் மாற்றம் செய்து திரைக்கதை அமைத்திருப்பது புதுமை.அந்தக் காலத்தில் தமிழக சூழ்நிலையில் அரசியலில் ஏற்பட இருக்கும் மாற்றத்தினை தனக்கு தோன்றிய கற்பனையை காட்சிகளாக்கி இருக்கும் விதம் சுவாரசியம் தட்டுகிறது.

நாயகனைச் சுற்றி நடக்கும் அனைத்து மர்மங்களுக்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது, என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர் கோபி.படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான குறியீட்டுக் குறிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

புதிய படக் குழு ஒரு த்ரில்லர் படத்துக்கான சஸ்பென்ஸைக் கடைசி வரை பராமரித்துள்ளார்கள்.

மொத்தத்தில், ‘யாதும் அறியான்’ யார் இவன் ? என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறான்.