திரைப்படத்தை பொழுதுபோக்கு ஊடகமாகக் கருதாமல் திரை வணிக சட்ட திட்டங்களை மீறி சோதனை முயற்சிகளை வெளிப்படுத்தும் களமாக சிலர் பயன்படுத்துண்டு. அப்படி ஒரு சோதனை முயற்சியான படம் தான் யாத்திசை.யார் திசை என்றால் தென் திசை என்று பொருள் சொல்கிறார்கள் தென் திசையில் பாண்டிய நாட்டில் மையம் கொள்கிறது இந்தக் கதை.
வீரத்துக்கும் தீரத்துக்கும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன் ரணதீரனைக் கொன்று விட்டுக் கோட்டையைக் கைப்பற்றநினைக்கிறான் கொதி. அவன் எயினர் குலத்தைச் சேர்ந்தவன்.தென்குடியை சேர்ந்த அவன் அடங்க மறுத்து மேலேற முயல்கிறான்.அவன் உறுதியை நம்பும் அவனது இனமும் அவனுக்குத் துணையாக நிற்கிறது.தன் படையுடன் நேரடியாகவே மன்னனுடன் மோத முடிவெடுக்கிறான் கொதி. இரு பக்கமும் உயிர்ப் பலிகள் ஏற்பட, எயினர் எண்ணிக்கை கண்டு பாண்டியர்கள் தினறுகிறார்கள்.பின்வாங்கி ஓடி தப்பிக்கிறான்.
கோட்டை கொதியின் கைக்குச் சென்றுவிட, பாண்டிய மன்னன் பதறுகிறான்.எப்படியாவது தான் மீள வேண்டும் என்று நினைத்து பெரும் பள்ளிகள் ஆதரவைப் பெறுகிறான்.அவர்களைத் தன் படையுடன் இணைத்து,கோட்டையைக் கைப்பற்ற பாண்டிய மன்னன் முனைகிறான். அவன் கைக்கு கோட்டை வந்து சேர்ந்ததா?எயினர்கள் எதிர்ப்பை அவன் எவ்வாறு எதிர்கொண்டான் இறுதியில் கோட்டை யார் வசமானது? என்கிற கேள்விக்கெல்லாம் மீதிக் கதை பதில் சொல்கிறது.
இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிந்த இயக்குகரின் துணிச்சலையும் கை கொடுத்த தயாரிப்பாளரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
கதை நிகழும் இடங்களும் மலையும் காடும் சார்ந்த பகுதிகளும் படத்திற்குப் பெரிய பலம். அந்த கேன்வாஸில் இயக்குநர் தான் நினைத்த கதையை கூறமுனைந்துள்ளார்.கதை நிகழும் கரடு முரடான இடங்களும் படப்பிடிப்புக் குழு போக துணியாத பாறை இடுக்குகளும் நம்மை வேறு உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. காட்சிகளை பார்க்கும் போதே
படக் குழுவினரின் உழைப்பு தெரிகிறது.
முகம் காட்டும் நடிகர்கள் புதிதாக இருந்தாலும் போகப்போக அந்த கதாபாத்திரத்தோடு நாம் இணைந்து விடுகிறோம்.
அரசனாக நடித்த சக்தி மித்ரன், எயினர் குலத் தலைவனாக நடித்த செயோன் ஆகிய இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். இதர கதாபாத்திரங்களும் தங்கள் பாத்திரச் சித்தரிப்பாலும் நடிப்பாலும் மனதில் பதிகிறார்கள்.
காட்சிகளின் நாடகத்தனம் கலந்து விடாமல் எதார்த்தத்தை பராமரித்துள்ளார் இயக்குநர்.
ஒருவரை ஒருவர் தாக்கி வெல்லும் காட்சிகள் நிறைய இருப்பதால் ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுகிறது.
அகலமான பட்ஜெட்டில் உருவாகி இருக்க வேண்டிய படத்தை ஒரு புதிய தயாரிப்பாளரை கொண்டு முயற்சி செய்திருப்பது பெரிய சாதனைதான்.
படத்தில் வரும் தேவரடியார் கதாபாத்திரத்திரத்தைப்
பார்வையாளர்களால் மறக்க முடியாது.
பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பின்னணி இசை,படத்தின் வீரியத்தை வெளிப்படுத்துகிறது.
படத்தின் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் படத்தின் தன்மையை மாறாமல் பற்றிச் செல்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பலவீனமும் இடையூறும் என்று அவர்கள் பேசும் மொழியைக் கூறலாம் .அந்தக் காலத்தில் பேசியதாக பிடிவாதமாக இயக்குநர் அம்மொழியைப் பேச வைத்திருப்பது பார்வையாளர்களுக்குப் பெரும் தடையாக இருக்கும். காட்சிகளை கண்டு ரசிப்பதா? சப்டைட்டில் படிப்பதா? என்பது பார்வையாளர்களுக்குத் தேவையில்லாத ஒன்று.
மற்றபடி புதிய முயற்சி புதிய அனுபவம் இந்த யாத்திசை என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.