முற்பகுதி காதல் பின்பகுதி மோதல் என்று உருவாகியுள்ள ரொமான்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் படம் ‘யான்’
துளசியைக் காதலிக்கிறார் ஜீவா. துளசியின் அப்பா கேட்கிறார் ‘பெற்றோர் இல்லாத நீ , பாட்டி சம்பாத்தியத்தில் வாழும் நீ என் மகளை எப்படிக் காப்பாற்றுவாய்?’ என்று. நாயகனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. வெளிநாட்டு வேலை என்று பசிலிஸ்தான் போகிறார். ஆனால் அங்கு ஏர்ப்போட்டில் மாட்டிக் கொள்கிறார். அவரது பையில் அவருக்குத் தெரியாமல் போதை மருந்தை அனுப்பிவிடுகின்றனர் டிராவல்ஸ் கும்பல். அங்கு போதை மருந்து கடத்துவதற்கு கடுமையான தண்டனை. ஜீவாவின் தலையை வெட்டிவிட வேண்டும் என மரண தண்டனை விதிக்கப் படுகிறது.
அந்த சிறையிலிருந்து வெளியாகும் இந்தியரான தம்பி ராமையா மூலம் இது துளசிக்குத் தெரிய வர ,தான் ஒருவரே போராடி எமன் கைக்குள் போன சத்யவானை மீட்கும் சாவித்ரியாக அவதாரம் எடுக்கிறார் துளசி. எப்படி மீட்டார் என்பதே முடிவு.
முதல்பாதி ரொமான்ஸ், துளசியுடன் உடான்ஸ் என்று ஜீவா களை கட்டுகிறார். பின்பாதியிலும் துரத்தல்களிலும் சிரமப்பட்டு உழைத்திருக்கிறார். துளசி அதிகம் சிரிக்காமலேயே காதல் கொள்கிறார். ஜீவாவை மீட்டு வரும் ஆவேச அவதாரம் பலே.
ஜெயப்பிரகாஷ் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும் நாசர் பாசமான தந்தையாகவும் வருகிறார்கள். டாக்சி டிரைவராக வந்து ஜீவா, துளசியை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி உயிர் விடும் கருணாகரன், பசிலிஸ்தான் சிறையில் அடைப்பட்டு கிடக்கும் தம்பி ராமையா ஆகியோரும் மனதில் நிற்கின்றனர். பயங்கரவாதியாக வரும் நவாப்ஷா, அவரது ஏஜெண்டாக வரும் போஸ் வெங்கட் கேரக்டர்களும் பதிகின்றன.
சரி.. போதை மருந்து கடத்துபவர்களுக்கே தலையை வெட்டும் ஒரு நாட்டில் சிறையில் விருப்பப்படி உலவுவது சாவிகளை தூக்கிப் பிடித்து விளையாடுவது ஒரு பெண் போய் மீட்பது என்பவை எல்லாம் டூமச் இல்லையா?
பசிலிஸ்தான் நாடு, பாலைவனம்,சிறைச்சாலை எல்லாம் பார்க்க மிரட்டலாக இருக்கிறது. ஆனால் நம்பகத்தம்மை இல்லாத காட்சிகளால் கேலிக்குரியவை ஆகிவிட்டன.
காதல் ஆக்ஷன் கதையை அழகியலோடு விறுவிறுப்பாய் காட்சிப்படுத்தி உள்ள ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் ஜெயித்து இருக்கிறார் ஆனால் இயக்குநர் ரவி கே. சந்திரன் ?