ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை ; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் உண்டு அப்படிஉருவாகியுள்ள ஒரு படம்தான் ‘துருவங்கள் பதினாறு’.
இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் நரேன். இந்த 21 வயது இளைஞர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குறும்படங்கள் எடுத்து சினிமா பக்கம் வந்திருப்பவர். ஏற்கெனவே ‘விழியின் சுவடுகள்’, ‘நிறங்கள் மூன்று’, ‘ஊமைக்குரல்’, ‘பிரதி’ என 4 குறும்படங்கள் இயக்கி பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றபின் சினிமா மீது நம்பிக்கை வைத்துத் திரைக்களத்துக்கு வந்து விட்டார்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தில் பல புதுமுகங்கள் பங்கு வகிக்கிறார்கள். பிரதான வேடமேற்றிருப்பவர் நடிகர் ரகுமான். கிளை வேர்களாக பலரும் இருக்க ஆணிவேராக ரகுமான் பாத்திரம் இருக்கிறது.
இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். பரபரப்பான படத்துக்கு வேகத்தடை வேண்டாமே என்று பாடல்களை அறவே தவிர்த்துள்ளார் இயக்குநர்.
அது என்ன ‘துருவங்கள் பதினாறு? என்று படம் பற்றி இயக்குநர் கார்த்திக் நரேனிடம் கேட்ட போது:
“இந்தப்படத்தில் 16 பேர் பாத்திரங்களாக வருகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல படத்தின் கதை 16 மணி நேரத்தில் நடக்கிறது. எனவேதான் இப்பெயரை வைத்தோம்.
ரகுமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அவர் தன் பணியில் நடந்த ஒரு சம்பவத்தால் ஊனமுற்றவராகி விடுகிறார். அதனால் பணியைவிட்டுப் போய் விடுகிறார் .ஐந்தாண்டுகள் ஓடி விடுகின்றன. அதற்குப் பிறகு ஒரு பொறி தட்டுகிறது. அன்று, தான் செய்த புலனாய்வு விசாரணையை மறுபடியும் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றவே காட்சிகள் விரிகின்றன. அவைதான் 16 மணி நேரம் படத்தில் நடப்பவை” என்கிறார் இயக்குநர் கார்த்திக்.
ரகுமான் பற்றிப் பேசும்போது ”அவர் பெரிய நடிகர், நடிப்பில் அவர் 32 ஆண்டு கால அனுபவசாலி. அவரை 21 வயதே ஆன புதியவன் நான் எப்படி இயக்குவது என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் அவர் அதைப் போக்கி விட்டார், சகஜமாக்கிப் பழகினார். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் டாமினேட் செய்யவே வில்லை. நடிப்பால் எவ்வளவோ காட்சிகளுக்கு செழுமை சேர்த்திருக்கிறார். அவரிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொண்டேன்.” என்கிறார்.
படத்தின் கதை கோவையில் நடந்தாலும் கோவை, சென்னை, ஊட்டி, என பல ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
மொத்தம் 28 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். படத்தை எழுதி இயக்கி தனது ‘நைட் நாஸ்ட்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்துள்ளார் கார்த்திக் நரேன்.
படத்துக்கு ஒளிப்பதிவு – சுஜித் சாரங், படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், இசை – ஜேக்ஸ் பிஜாய் இவர்கள் மூவருமே ‘தாக்க தாக்க’ படத்தில் பணிபுரிந்தவர்கள்.
கலை – சிவசங்கர், சவுண்ட் இன்ஜினியர் ‘சிங்க் சினிமாஸ்’ சச்சின் சுதாகரன்.
படம் முடிந்து பலரிடம் போட்டுக்காட்டிய போது பலருக்கும் பிடித்திருக்கிறது. பாட்டு ,ஃபைட் எதுவுமில்லாமல் இரண்டு மணி நேரம் இருக்கை நுனிக்கு கட்டிப்போட்டு விடுகிறது படம். அவ்வளவு விறுவிறுப்பு என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
படத்தை பார்த்த ட்ரீம் பேக்டரி பிக்சர்ஸ நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட முடிவு செய்து ஒப்பந்தமும் போட்டு விட்டார்கள். ‘நைட் நாஸ்ட்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்’ நிறுவனமும் அவர்களுடன் கை கோர்த்துள்ளது.
ட்ரீம் பேக்டரி நிறுவனம் ‘துருவங்கள் பதினாறு’ படத்தை வெளியிடுவது என்று முடிவானதுமே படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடிவிட்டது.