இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ‘ரங்கூன்’.
பர்மாவில் இருந்து வந்து சென்னை வியாசார்பாடி பகுதியில் குடியேறியவர் கெளதம் கார்த்திக். அவர் மக்களில் ஒருவராக இருக்கிறார்.
கடத்தல் தொழில் செய்பவரிடம் வேலைக்கு சேருகிறார். தொழில் போட்டி காரணமாக சிலர் கெளதமின் முதலாளியை கொலை செய்ய முயற்சிக்க, அதில் இருந்து அவரை காப்பாற்றும் கெளதம் கார்த்திக், தனது முதலாளியின் நம்பிக்கைக்கு உரியவராகிறார்.
அவர் மூலம் தங்கம் கடத்தல் தொழிலிலும் ஈடுபடுகிறார். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து, அதை சென்னையில் விற்பனை செய்துக்கொண்டிருக்க, பெரிய அளவில் ஒரு வேலையை செய்து அதன் மூலம் தான் இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று நினைக்கும் கடத்தல் முதலாளி, அந்த பொறுப்பை கெளதம் கார்த்திக்கிடம் ஒப்படைக்கிறார்.
அதன்படி, சென்னையில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மாவுக்கு செல்லும் கெளதம் கார்த்தி, அதை உரியவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு ரூ.6 கோடியை பெற்றுக்கொண்டு சென்னை வருகிறார்.வரும் வழியில் அவரிடம் இருந்து, அவருக்கே தெரியாமல் பணத்தை அடித்து விடுகிறார்கள்.
பணத்தை பறிகொடுத்துவிட்டு பர்மா சாலையில் அழுது புலம்பும் கெளதம் கார்த்திக், இழந்த பணத்தை மீட்பதைக் காட்டிலும், தனது முதலாளிக்கு எப்படியாவது ரூ.6 கோடியை ரெடி பண்ணி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தனது நண்பர்களின் யோசனைப்படி செய்யும் சில செயல்களால் பெரும் சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து மீண்டாரா? அவரது பணத்தை அடித்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? என்பது தான் ‘ரங்கூன்’ படத்தின் கதை.
படத்தின் முதல் பாதியில், சென்னையில் மக்கள் நிறைந்த சில பகுதிகளில் ஜோராக நடக்கும் கடத்தல் தொழில் பற்றியும், ஹவாலா பணம் பரிமாற்றம் பற்றியும், காட்டி படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளார் இயக்குநர். இரண்டாம் பாதியில் காணாமல் போன பணம், அதன் பின்னணி என்று திரைக்கதையை வேகமாக நகர்த்துகிறார்.
இதுவரை நடித்திராத அளவுக்கு சிறப்பாக கௌதம்கார்த்திக் நடித்துள்ளார். சாக்லெட் பாய் என்ற தனது இமேஜை இந்த படத்தில் உடைத்திருக்கும் கெளதம் படம் முழுவதும் ரொம்பவே உழைத்திருக்கிறார்.
பர்மா பொண்ணு என்று சொல்லும் அளவுக்கு நாயகி சனா மக்பால் தோன்றுகிறார். இருந்தாலும், அவரது கதாபாத்திரம் கதைக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. ஆனால், கெளதம் கார்த்திக்கின் நண்பர்களாக நடித்தவர்களும், அவர்களது நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். கெளதம் கார்த்திக்கின் முதலாளியாக நடித்தவரது நடிப்பு இயல்பு.
விக்ரம் ஆர்.எச் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் அனிஷ் தருண் குமாரின் பணியும் திரைக்கதைக்கு கூடுதல் பலம்.
சென்னையில் ஒரு குட்டி பர்மாவே இருக்கிறது, என்பதை காட்டியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அதனை டாக்குமெண்ட்ரியாக சொல்லாமல், ஆக்ஷன், காமெடி நிறைந்த கமர்ஷியல் படமாக சொல்லியிருக்கிறார். அதே சமயம், பர்மாவில் இருந்து வந்தவர்களைப் பற்றி மட்டும் சொல்லாமல், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்களைப் பற்றிய படமாகவும் திரைக்கதையை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
பாடல் காட்சிகளும், காதல் காட்சிகளும் வேகமாக நகரும் படத்திற்கு சற்றே வேகத்தடைகள்தான் என்றாலும், ஆக்ஷன் காட்சிகள் அவற்றைத் தாண்டுகின்றன.