ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர் ஈழ இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இசையில் தயாரான ‘ராசாத்தியே.. எனத் தொடங்கும் சுயாதீனப் பாடலின் காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்த் திரையிசையுலகில் புதுமைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் இசை ஆர்வலர்களும், ரசிகர்களும் வரவேற்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஷியாமளாங்கன், 2012 ஆம் ஆண்டில் ‘அழகிய தென்றலே..’ எனத் தொடங்கும் சுயாதீன வீடியோ இசைப் பாடலுக்கு இசையமைத்து வெளியிட்டார்.
இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்திலேயே இணைய வசதியில்லாத அந்த காலகட்டத்தில், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுச் சாதனை படைத்தது. அதேபோல் ‘எனக்கே எனக்கா’ பாடலும் ‘அன்பே’ எனும் பாடலும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இசைக்கலைஞர் ஷியாமளாங்கன், இந்தப் பாடல் வெளியாகி ஒரு தசாப்தம் அதாவது பத்தாண்டுகள் நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் வகையில், அதே பாடலை வேறு இசை வடிவத்துடன் இணைத்து புதிய காணொலியுடன் வெளியிட்டிருக்கிறார்.
‘ராசாத்தியே…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை, இசையுலகின் தனித்துவமான காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார். இவருடன் ராப் இசைக் கலைஞர் ரத்யா, ராப் பாடல் வரிகளை எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அண்மையில் இணையத்தில் வெளியாகி இசை ரசிகர்களின் ஆதரவுடன் சாதனையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்தப் பாடலை இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் ரெட்டை பாதை சேகர் மற்றும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் அழகிய ‘தென்றலே..’ என தொடங்கிய இந்தப் பாடல், தற்போது நவீன இசை வடிவத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்று ‘ராசாத்தியே..: எனத் தொடங்குகிறது.
சுயாதீனப் பாடல் ஒன்றிற்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பாடலை, சில புதிய இசை வடிவத்துடன் இணைந்து வழங்குவது என்பது தமிழ் மொழியிலான சுயாதீன இசையுலகில் புதிது. இதனால் இந்தப் பாடலுக்கும், பாடலுக்கு இசையமைத்த இசைக்கலைஞர் ஷியாமளாங்கனுக்கும் பாராட்டுகள் பல தரப்பிலிருந்து குவிந்து வருகின்றன.
யார் இந்த ஷியாமளாங்கன்?
இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கே தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டே தனது இசையறிவை வளர்த்தவர். மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை மட்டுமல்லாமல் பல நாடுகளில் புகழ்பெற்ற இசை வடிவங்களையும் கற்றிருப்பவர்.
ஷியாமளாங்கி என்பது 74 மேளக்கர்த்தா ராகங்களில் 19ஆவது ஜன்ய ராகமாக கர்நாடக இசையில் இடம் பெற்றிருக்கிறது. மிக அரிய ராகமான இதனை, நினைவூட்டும் வகையில் இவரது பெயர் இருக்கிறது.
இவர், ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டே பல இந்திய இசைக்கலைஞர்களுடன் தொடர்பிலும் இசை படைப்புகளிப்பிலும் பங்கேற்பவர். தனது ஆல்பத்திலும் உலக இசைக் கலைஞர்களை பங்கெடுக்கச் செய்து வருபவர்.
பொதுவாக சுயாதீன ஆல்பங்கள் இசை வடிவங்கள் என்றால் மிகவும் சிக்கனமாக செலவு செய்து உருவாக்குவதுண்டு ஆனால் இவர் சுமார் 40 இசைக் கலைஞர்களைப் பங்கெடுத்த வைத்து மிகப் பிரம்மாண்டமான ஆல்பத்தை உருவாக்கியவர். அதன் மூலம் உலகளாவிய கவனம் பெற்றவர்.
அப்படிப்பட்ட ஷியாமளாங்கன் உருவாக்கிய இந்தப் பாடல் தொடர்பாக இசை விமர்சகர்கள் தங்கள் ஆதரவும் வரவேற்பையும் தெரிவித்து வருகிறார்கள்.
‘ராசாத்தியே..’ எனும் பாடலையும் கேட்கும் போது, இசைக்கலைஞர் ஷியாமளாங்கனின் நுட்பமான தனித்திறன் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் ராப் இசையையும், ராப் பாடலை அளவாகவும், அர்த்தத்துடனும் பயன்படுத்தியிருக்கும் பாணி பாராட்டத்தக்கது. ” எனக் குறிப்பிடுகிறார்கள்.
இதனிடையே ஷியாமளாங்கன், பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் இடம்பெறும் விசில் ஒலியை, சங்கீதமாக எழுப்பி படத்தின் வெற்றிக்கு தன் பங்களிப்பை அளித்தவர் என்பதும், அதற்கான ஒலிப்பதிவு ஆஸ்திரேலியாவில் இவரது இல்லத்தில் இசை அமைப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’, மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ ஆகிய படங்களிலும் பாடல்கள் பாடி தன் பங்களிப்பை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இதுவரை தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார்.
‘இசை என்பது எம்முள் இணையாகப் பயணிக்கும் தவிர்க்க முடியாத இணை சக்தி’ எனும் கொள்கையை உறுதியாக பின்பற்றும் ஷியாமளாங்கன் சுயாதீன பாடல்களை இசையமைத்து வெளியிடுவதில் தொடர்ந்து தனித்துவத்தை பின்பற்றி வருபவர்.
இந்த சுயாதீன பாடல் முயற்சி திரைப்பட நுழைவுக்கான ஒரு படிக்கட்டா என்று கேட்டால்?
“இன்று திரைப்படம் எனது பயணத்தில் ஒன்றாக இருக்குமே தவிர அதுவே முழுமையான இலக்கு என்று கூற முடியாது. ஏனென்றால் இசைப் பயணத்தில் ஏராளமான பாதைகள் பயணங்கள் என் முன் தெரிகின்றன.
முன்பு போல் இப்போதில்லை. காலம் மாறி உள்ளது. இப்போது இது மாதிரி சுயாதீனப் பாடல்களுக்கு தனியே வரவேற்பும் அதற்கான வியாபார வாய்ப்புகளும் ஏராளம் உள்ளன. பாடலைப் பாடி, இசையமைத்துக் கொண்டே இருக்கலாம். அதற்கு ஏராளமான வாய்ப்புகள் திறந்து உள்ளன. உலக இசைக்கலைஞர்களை இணைக்க வேண்டும் என்பதே எனது பெரிய இலக்கு. எனது பாதையில் நான் செல்லும் எனது பயணத்தில் நான் கற்ற இசையை புதிய வடிவமாக கொடுக்க வேண்டும்” என்கிறார் நம்பிக்கையுடன்.