‘ராஜபீமா’ திரைப்பட விமர்சனம்

ஆரவ், ஆஷிமா நர்வால், நாசர், கே எஸ் ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு ,ஓவியா, பாகுபலி பிரபாகர், சாயாஜி ஷிண்டே, ராகவன், ஜெயக்குமார் நடித்துள்ளனர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார் .சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.எஸ். ஆர் .சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரபி பிலிம்ஸ் மோகன் தயாரித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற கதை யானைகளின் மன உணர்வுகளைப் பற்றி பேசி இருக்கும். செல்லப் பிராணிகள் போலவே யானையும் மனிதர்களிடம் பாசம் காட்டும் .அப்படி ஒரு யானைக்கும் மனிதனுக்கும் உள்ள பாசத்தைப் பற்றி சொல்கிற கதைதான் ‘ராஜ பீமா’ .

சின்ன வயதிலேயே தாயை இழந்து விடுகிறார் ஆரவ். தந்தை நாசரின் அரவணைப்பில் வளர்கிறார் ,ஆனாலும் ஆரவ் மன அழுத்தத்துக்கு ஆளானவராக இருக்கிறார்.

அந்தப் பகுதியில் காட்டில் இருந்து ஊருக்கு தப்பி வரும் யானைகள் பயிர்களைச் சேதப்படுத்துவதாக மக்கள் அவற்றைத் துரத்தி அடிப்பது உண்டு.அப்படி ஒரு யானையை ஊர் மக்கள் விரட்ட முயல்கிறார்கள். அந்த யானையின் தொடு உணர்வு அவருக்குத் தன் தாயை நினைவூட்டுவதால் அந்த யானையை வளர்க்க விரும்புகிறார். யானை வந்த நேரம் அவரது குடும்பத்தில் நல்ல நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன.சுபசகுனமாக அந்த யானையை நினைக்கிறார்கள்.அதற்கு பீமா என்று பெயர் வைத்து குடும்பத்தினர் அந்த யானையிடம் பாசம் காட்டுகிறார்கள்.அந்த ஊரில் வனவிலங்குகளை வேட்டையாடி தந்தம், கொம்புகளை கடத்தும் கும்பல் ஒன்று இருக்கிறது.

ஒரு நாள் ஆரவ் வளர்க்கும் யானையை அரசு சார்பில் நடத்தப்படும் யானை முகாமுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வனத்துறை அழைத்துச் செல்கிறது. ஆனால், அங்கு சென்று பார்க்கும் போதுஅவர்கள் ஆரவின் யானையாக வேறு யானையைக் காட்டுகிறார்கள்.அதிர்ச்சி அடைகிற ஆரவ் அதை நம்பவில்லை,தனது யானையைத் தேட தொடங்குகிறார்.

அவருடைய யானை கிடைத்ததா?அந்த யானை காணாமல் போனது ஏன்? என்பதற்கு பதிலைத் தேடி செல்கிறது படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், ஆக்‌ஷன், நடிப்பு இரண்டிலும் அதகளப்படுத்தியிருக்கிறார். அவரது காதலியுடன் ரொமான்ஸ் காட்சிகளை விட,யானைகளுடன் அதிகம் இருக்கிறார்.அவருக்கும் யானைக்குமான பாசம் நன்கு வெளிப்பட்டுள்ளது.

நாயகியாக வரும் ஆஷிமா நர்வால், ஆரவைக் காதலிப்பது, ஒரு பாடல், சில காட்சிகள் போன்றவற்றிலேயே நிறைவு காட்டியுள்ளார்.கே.எஸ்.ரவிக்குமார் அமைச்சராக வருகிறார்.வில்லன் வேடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக வரும் நாசர் கொங்கு நாட்டுத் தமிழைப் பேசிக் கவர்கிறார்.யாஷிகா ஆனந்த், யோகி பாபு, பாகுபலி பிரபாகர், ஓவியா, சாயாஜி ஷிண்டே, ராகவன், ஜெயக்குமார் என பிற நடிப்பு கலைஞர்களும் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒகே ரகம்.ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமார் கதைக்கு ஏற்ப கேமராவை கையாண்டு உள்ளார்.யானை தோன்றும் காட்சிகள் குழந்தைகளைக் கவரும் .

எழுதி இயக்கியிருக்கும் நரேஷ் சம்பத், விலங்குகளின் அன்பான உலகத்தை பார்வையாளர்களுக்கு காட்டுகிறார்.யானை என்றாலே ஒரு பிரம்மாண்டம் தான். அதை படத்தில் உணர வைத்து காதல், ஆக்‌ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து குடும்பத்தினரும் பார்க்கும் படியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

.மொத்தத்தில், ‘ராஜபீமா’ சோடை போகவில்லை.