இளைய திலகம் பிரபு, வெற்றி, கோமல் குமார்,கிருஷ்ண பிரியா, இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார்,தங்கதுரை நடித்துள்ளனர்.எழுதி இயக்கியவர் மகா கந்தன்.ஒளிப்பதிவு ஆலிவர் டெனி, இசை நெளஃபல் ராஜா,பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து, மோகன் ராஜன், எடிட்டிங் கமலக்கண்ணன், கலை இயக்கம் செ. ஐயப்பன்,நடனம் கலைமாமணி ஸ்ரீதர், சண்டைப்பயிற்சி ராகேஷ் ராக்கி,அலுவலக நிர்வாகம் முகமத் நஜிப்,தயாரிப்பு நிர்வாகம் ஆர். பெருமாள் ,உடைகள் ராமகிருஷ்ணன், மேக்கப் பாண்டியராஜன்,நிர்வாகத் தயாரிப்பாளர் ஒய்.வஷீர் அகமத்,இணைத் தயாரிப்பு டி. பாரூக், கே. கோதர் ஷா, கிரசன்ட் சினி கிரியேஷன் சார்பில் தயாரிப்பு கே.எம்.சஃபி .
தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம் போன்ற ஒரு வறண்ட பொட்டல் பகுதியில் கதை நடக்கிறது. 90களின் காலகட்டம் காட்டப்படுகிறது.
செல்லையா என்கிற பிரபு தனது மகன் பட்டா என்கிற வெற்றி மீது பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார். தாய் இல்லாத பிள்ளை என்பதால் அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்.அதேபோல் தந்தையின் மீது மகனுக்கும் அளவு கடந்த அன்பு, மரியாதை , உரிமை.தந்தையே செல்லையா என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு செல்லம்.
சரியாகப் படிக்காத பட்டா குடும்ப கடனை அடைப்பதற்காக உண்டியல் எனப்படும் சட்டவிரோத பணம் பரிவர்த்தனை செய்யும் லிங்கா கும்பலிடம் வேலைக்கு செல்கிறான்.வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை உரியவர்களிடம் பிரித்து சேர்ப்பது அவர்கள் வேலை.அப்படிப் பட்டா வேலை பார்க்கும் போது ஒருநாள் கொண்டு செல்லும் பணம் திருடு போய்விடுகிறது.அதற்கு ஈடாக தன் மகனை ஆபத்திலிருந்து காப்பதற்காக தனது நிலப் பட்டாவை செல்லையா வழங்குகிறார்.ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த பணத்தை யார் திருடியது என்பதை பட்டா கண்டுபிடிக்கிறான்.பணத்தை கொடுத்து அனுப்புகிறவர்களே ஆளை வைத்து திருடுவது தெரிகிறது. இதற்கிடையில் இளம் பெண் பூச்செண்டு அதாவது கிருஷ்ண பிரியா மீது பட்டா காதல் கொள்கிறான். வீட்டை அடமானம் பெற்ற லிங்கா செல்லையா வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறான். இந்த மோதலில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. விளைவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
செல்லையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு சின்னத்தம்பி பாத்திரத்தை நினைவுபடுத்துகிறார். அப்படி ஒரு வெள்ளந்தியான பாத்திரம்.சற்று உடல் எடை கூடியிருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் பிரபுவை பார்த்த திருப்தி.மகன் வெற்றி மீது பிரபு காட்டும் பாசத்தில் அன்புத் தந்தையாக, ஒரு குத்தாட்டம், ஒரு சண்டை காட்சி என கலகல நடிப்பிலும் ஆக்கிரமிக்கிறார்.
எட்டு தோட்டாக்கள் வெற்றியா இது என்று நம்ப முடியாத அளவிற்கு கிராமத்து இளைஞனாக மாறியுள்ளார் வெற்றி. தோற்றம்,உடல் மொழி, வசனம் என அத்தனையிலும் பளிச்சிடுகிறார்.கதாநாயகி கிருஷ்ண பிரியா கிராமத்துக் கிளியாகச் சிறகடிக்கிறார்.
துள்ளித்திரியும் வாலைக்க்குமரியாக வருகிறார். ஆவேசம் வரும்போது வேலு நாச்சியாராகச் சீறிச் சிலிர்க்க வைக்கிறார்.வெற்றிக்கும், அவருக்குமான காதல் நல்ல ரசாயன மாற்றம்.
வட்டி வசூலிக்கும் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் பழைய பாட்டுகளைப் பாடி வில்லத்தனம் காட்டுகிறார். , சட்ட விரோத பணம் பரிமாற்றம் செய்யும் லிங்காவாக நடித்திருக்கும் கன்னட நடிகர் கோமல் குமார் தமிழுக்கு கிடைத்த புது வில்லன்.
இமான் அண்ணாச்சி, தங்கதுரை நகைச்சுவைக்கு பயன்பட்டிருக்கிறார்கள். மீசை லிவிங்ஸ்டன், ஆர்வி உதயகுமார் இருவரின் கதாபாத்திரங்கள் சஸ்பென்சுக்கு பயன்பட்டுள்ளன. 
. புது இயக்குநர் மகா கந்தன் ஒரு நல்ல திரைக்கதையுடன் தந்தை மகன் பாசத்துடன் கூடிய கதையைக் கூற முன்றுள்ளார்.மிகை நடிப்பு காட்டும் சில நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். நௌஃபல் ராஜா இசை , வைரமுத்துவின் வரிகளில் அனைத்து பாடல்களும் சோடை போகாத சுகமான ராகங்களாக ஒலிக்கின்றன. பாடல்களைப் படமாக்கி உள்ள விதமும் அழகான ஒரு ஆல்பம் போல் உள்ளது.
ஆலிவர் டெனி கேமரா கிராமத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.அந்தக் பொட்டல் வெளிகளும் புதர்களும் செம்மண் நிலமும் படத்திற்குப் புதிய நிறம் காட்டுகின்றன.செல்போன் இல்லாத அந்த காலம் நம்மை பழைய காலத்துக்கு இட்டுச் செல்கிறது.
ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சியும் இயற்கையான வீச்சுடன் படமாகி இருக்கிறது. 90கள் மனநிலையில் நம்மை அழைத்துச் செல்கிற ஒரு படம் தான் ராஜபுத்திரன்.


