‘ராஜா கிளி ‘திரைப்பட விமர்சனம்

தம்பி ராமையா, சமுத்திரகனி, தீபா, பிரவீன் குமார் ஜி ,டேனியல் ஆனி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள்தாஸ், சுவேதா ஸ்ரீம்ட்டன் ,ரேஷ்மா பசுபலேட்டி ,சுபா, விஜே ஆண்ட்ரூஸ் ,மாலிக், கிங் காங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உமாபதி ராமையா இயக்கி உள்ளார் . ஒளிப்பதிவு கேதார்நாத் கோபிநாத், பின்னணி இசை சாய் தினேஷ், எடிட்டர் சுதர்சன் ஆர்.இப்படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

ஆண்கள் பெண்களின் நட்பைத் தங்கள் பெருமையாக நினைப்பதற்கு காரணம் என்ன? இதை மற்ற ஆண்களிடம் தங்களை கண்ணனைப் போல் காட்டிக்கொள்வதற்கான தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான் காரணம்.
தன்னைச் சுற்றி பெண் நண்பர்கள் இருந்தால் தான் ஓர் ஆணழகன் என்றோ கவர்ச்சி வாலிபன் என்றோ லீலைகள் செய்யும் கண்ணன் என்றோ தன்னை இளமையாகவும் ஆண்மையாகவும் உணரக்கூடிய மனப்போக்கு சில ஆண்களிடம் உள்ளது.பெண் மையத்தில் தாங்கள் இருப்பதை தங்களது கௌரவமாக அந்தஸ்தாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.அதை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகும் மனநிலை வந்துவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபரின் கதை இது. தமிழகத்தில் தனது ஆசை நாயகிக்காக அவளது கணவரைக் கொலை செய்த ஒரு தொழிலதிபரின் கதையை நினைவூட்டுகிறது இந்தப் படம்.அந்தக் கதையை எடுத்துக் கொண்டு கற்பனையையும் இணைத்து இப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன?

பிரபலமான தொழிலபதிர் முருகப்ப சென்றாயர். பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருபவர், படிக்காதவர் என்றாலும் பெண் பலவீனம் கொண்டவர். முறையாக கட்டிய முதல் தாரம் இருக்க இரண்டாவதாக வள்ளிமலர் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அத்தோடு அவருடைய சபலம் தீரவில்லை.

அடுத்து மூன்றாவதாக விசாகா என்ற கல்லூரி மாணவியை ஆசை நாயகியாக்கிக் கொள்கிறார். விசாகாவுக்கு ஆல்பர்ட் என்பவர் மீது காதல். திருமண மும் செய்து கொள்கிறார். ஆனால், ஆல்பர்ட் விசாகாவைக் கொடுமைப் படுத்துகிறார். இந்த விஷயத்தில் தனக்கு உதவுமாறு முருகப்ப சென்றாயரிடம் வந்து உதவி கேட்கிறார் விசாகா. தனது ஆட்களை விட்டு ஆல்பர்ட்டை கொலை செய்கிறார் முருகப்பா. போலீஸ் மோப்பம் பிடித்து முருகப்பாவையும் அவரது ஆட்களையும் கைது செய்கிறது.
அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ராஜாகிளி படத்தின் மீதிக் கதை.

தொழிலதிபர் முருகப்பா சென்றாயர் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்துள்ளார். வெள்ளை வேட்டி, சட்டை நயமான பேச்சு என அந்தத் தோற்றம் அவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.நடிப்பிலும் அப்படித்தான் .தனக்கான ஒரு மைதானம் கிடைத்துவிட்டால் தம்பி ராமையாவுக்கு கேட்க வே வேண்டாம். அடித்து விளையாடியுள்ளார்.கட்டிய மனைவி இருந்தாலும் தான் ஆசைப்படும் பெண்களை அப்படியே இனிக்கி இனிக்கப் பேசி கவர்வதில் கை தேர்ந்தவராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் சில காட்சியில் எரிச்சல் ஊட்டினாலும் வாழ்வில் ஒரு வீழ்ச்சி அடைந்து
மனநலம் பாதிக்கப்பட்டு தெருத் தெருவாக சுற்றித் திரியும் போது அவர் மீது பரிதாபம் வரும் அளவிற்கு நடிப்பைக் காட்டி அனுதாபங்களை அள்ளுகிறார்.இப்படி ஒரு பாத்திரத்தில் அப்பாவை வைத்து மகன் உமாபதி ராமையா இயக்கி உள்ளது வேடிக்கையான ஒன்று.

மனநலம் கெட்டுத் தெருவில் திரியும் தம்பி ராமையாவை அழைத்து வந்து ஆதரித்து அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பு இல்லத்தை நடத்துபவராக சமுத்திரக்கனி வருகிறார். கனி கிளைமாக்சில் அன்புரை யாற்றுகிறார்.

படத்தில் தம்பி ராமையாவின் முதல் இரண்டு மனைவியருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. மூன்றாவதாக அவர் வைத்துக் கொள்ளும் கல்லூரி மாணவி விசாகா பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப்பாத்திரத்தில் ஸ்வேதா நடித்துள்ளார். இளமை வழிய வழிய அப்பாத்திரத்தில் அவர் கவர்ச்சியையும் துணிச்சலையும் காட்டி நடித்திருக்கிறார். இவரது அம்மாவாக ரேஷ்மா, உதவி கமிஷனராக அருள்தாஸ், தம்பி ராமையாவுக்கு ஆலோசனை சொல்லும் சாமியாராக பழ கருப்பையா, பள்ளி முதல்வராக ஆடுகளம் நரேன் என துணைப் பாத்திரங்களில் வருபவர்களும் மனதில் பதிகிறார்கள்.
தம்பி ராமையா இட்டதைச் சட்ட மென நிறைவேற்றும் பாதுகாவலர்களாக ஆன்ட்ரூஸ், மாலிக் நடித்திருக்கிறார்கள். ஆசை காட்டி மோசம் செய்யும் ஆல்பர்ட் கதாபாத்திரத்தில் பின்னணிப் பாடகர் கிரிஷ் வருகிறார்.

தம்பி ராமையாவே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. கேதார்நாத், கோபிநாத் ஆகியோர் கதைக்கேற்ற படியான ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

படத்தின் முதல் பாதி இரட்டை அர்த்த வசனங்கள், கொஞ்சம் நெளிய வைக்கும் காட்சிகளுடன் உள்ளது.
இரண்டாவது பாதியில் தம்பி ராமையா ஏற்ற கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும் அளவிற்குக் காட்சிகளை அமைத்துள்ளார்கள்.அதுவே இயக்குநரின் வெற்றியாகும்.

கொண்டவளை மறந்து கண்டவள் பின் திரிந்து வாழ்வில் வீழ்ச்சி அடைந்த ஒரு மனிதனின் கதையாக ஒரு காலத்தில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ரத்தக்கண்ணீர்’.21ம் நூற்றாண்டு ரத்தக்கண்ணீராக ‘ராஜா கிளி ‘உருவாகி இருக்கிறது எனலாம்.வழக்கமான கதாநாயகன் நாயகி அடிதடி சண்டை ஆக்சன் பாணியில் இருந்து விலகி, அப்பாவை வைத்து மகன் இயக்கி இருக்கும் இந்தப் படம் எடுத்துக் கொண்ட கமர்சியல் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.