’ராபர்’ திரைப்பட விமர்சனம்

சத்யா ,டேனியல், ஜெயபிரகாஷ், தீபா சங்கர், சென்ராயன், ஸ்டில்ஸ் பாண்டியன் நடித்துள்ளனர். எஸ்.எம். பாண்டி இயக்கியுள்ளார். ஜோகன் ஷெவனேஷ் இசையமைத்துள்ளார். இம்ப்ரஸ் பிலிம்ஸ் ப்ரொடக்ஷன் மற்றும் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கவிதா எஸ், ஆனந்த கிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.

கிராமத்தில் பாசமுள்ள பிள்ளையாக அம்மாவுடன் இருக்கும் சத்யாவிற்குப் பெரிதாகப் பணம் பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது .அதற்காகச் சென்னைக்குக் கிளம்புகிறார்.இங்கு வந்தவருக்குப் படிப்புக்கேற்ற வேலை இல்லை. வசதியாகவும் வாழ வேண்டும் என்று ஆசை. எனவே குறுக்கு வழியை நாடுகிறார். வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு எனக் குற்றங்களில் ஈடுபட்டுப் பணம் பார்க்கிறார்.ஒரு கட்டத்தில் கொலை செய்யவும் துணிகிறார். இதனால், தொழில் ரீதியான எதிரிகள் அவரை துரத்த,  மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்க அவரைத் தூரத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து நாயகன் சத்யா தப்பித்தாரா? குற்ற செயல்களைத் தொடர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் ‘ராபர்’ கதை.

நாயகனாக நடித்திருக்கும் சத்யாவுக்கு இந்த வேடம் புதிதல்ல என்பதால் தனது வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். அப்பாவி முகம், குறைவான பேச்சு என வருகிறார். குற்றச் செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களைப் பதற விடுகிறார்.

இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் வந்த டேனியல் போப்,இதில் வில்லனாக வருகிறார். மிரட்டவில்லை ஆனாலும் சொதப்பவில்லை.

சிறையில் சென்ராயன் கதை சொல்வது போல் தான் படமே நகர்கிறது.பாசமுள்ள தந்தையாக ஜெயப்பிரகாஷ் வருகிறார்.அவருக்கு உதவும் ஓய்வு பெற்ற போலீஸ்காரராக ஸ்டில்ஸ் பாண்டியன் வருகிறார். இருவரும் சேர்ந்து செய்யும் சில சம்பவங்கள் படம் பார்ப்பவர்கள் அதிரவைக்கும். இருவருமே தங்களது அனுபவ நடிப்பு மூலம் படத்தின் கதையோட்டத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், இசையமைப்பாளர் ஜோகன் செவனேஷ், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி ஆகியோரது பணிகள் நேர்த்தி.குறிப்பாக துரத்தல் காட்சிகளில், புலனாய்வு சார்ந்த காட்சிகளில் தேர்ந்த ஒளிப்பதிவின் மூலம் நிறைய மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர்
என்.எஸ்.உதயகுமார்,

’மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணனின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, ‘மெட்ரோ’ படத்தின் சில சம்பவங்களைப் போலவே இதிலும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருப்பதுதான் சற்றே படத்துக்குப் பலவீனமாகத் தெரிகிறது.ஆனாலும் ஒரு நிமிடம் கூட நம்மை அசர வைக்காமல் பரபரப்பாகக் கதை நகர்கிறது.விறுவிறுப்பாக காட்சிகள் உள்ளன. கிரைம் த்ரில்லர் ரசிகர்கள் மனதை இந்த ‘ராபர்’ கொள்ளையடிக்கும் .