சமுத்திரக்கனி,பிரமோதினி,தன்ராஜ் கொரனானி,மோக்ஷா,சுனில்,ஹரீஸ் உத்தமன்,சத்யா,ஸ்ரீனிவாஸ் ரெட்டி,பிரித்விராஜ் நடித்துள்ளனர்.திரைக்கதை இயக்கம் –
தன்ராஜ் கொரனானி, இசை -அருண்சிலுவேரு,ஒளிப்பதிவு -துர்கா கொல்லிபிரசாத்,
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் சார்பில் தயாரிப்பு ப்ருத்வி போலவரபு.தமிழில் ஜி ஆர் ஆர் மூவீஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார்.
ஓர் (அ)சாதாரண தந்தையின் கதையைப் பேசியுள்ளது இத்திரைப்படம்.
கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி தசரத ராமன். ஆனால் அவரது மகன் ராகவனோ, பள்ளிப்பருவத்திலேயே தீய பழக்கங்களுக்கு உள்ளாகி, எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாகவும் சூதாடியாகவும் வளருகிறான். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு என்பது முட்டல்மோதலாகவே உள்ளது. தந்தை, மகனின் மீது அதீத பாசம் வைத்துள்ளார். அதைப் புரிந்து கொள்ளாமல் மகன் தந்தையை மிகவும் வெறுக்கிறான். ஒரு தந்தையாகத் தனது மகனின் விருப்பம் என்னவென அறிந்து, மகனுக்காக அதைச் செய்யத் துணிகிறார் தசரத ராமன். ராமாயணத்தில், தந்தைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார் ராமர்; இப்படத்தில், மகனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராமன். இந்தப் பாசப் போராட்டப் பின்னணியில் நகர்கிறது கதை.
இந்தப் படத்தின் மையமாக உள்ளார் சமுத்திரக்கனி. ‘விதை நல்ல விதை; நிலமும் நல்ல நிலம். ஆனால் எங்கே தவறு நடந்தது? நான் சரியா வளர்க்கலையா?’ என மகனை எண்ணிக் கலங்குகிறார். நம்மையும் கலங்க வைக்கிறார் சமுத்திரக்கனி. மகனுக்காக ஒரு தந்தை எந்த அளவிற்குச் செல்வார் என்பதை அவர் ஏற்றிருக்கும் தசரதராமன் பாத்திரம் மூலமாக அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.
சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிரமோதினி வருகிறார்.பிரமாதமாக நடித்துள்ளார். பெற்ற மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், கணவனின் நியாயத்தையும் புரிந்தவராக, இருவருக்கும் இடையில் மன ஊசலாட்டத்தில் இருதலைக் கொல்லி எறும்பாக அல்லாடும் அம்மா பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். நாயகி மோக்ஷாவிற்குக் கதையிலும் படத்திலும் பெரிய வேலை இல்லாவிட்டாலும், அவர் வருகின்ற காட்சிகளில் அழுத்தமாகத் தனது இருப்பைப் பதிந்துள்ளார்.
அனுமன் பக்தராகவும், பவானி பைனான்ஸ் நடத்துபவராகவும் வருகிறார் சுனில். ஆனால் அவர் மிகக் குறைவான காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். சத்யாவும், பாலிரெட்டி பிருத்திவிராஜும் படத்தின் நகைச்சுவைக்கு உதவியுள்ளனர். பாண்டிச்சேரி தேவாவாக ஹரிஷ் உத்தமன் வருகிறார். துணை நாயகன் என்றே சொல்லும்படி மிக முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. படத்தில், அவருக்கு மட்டுமே ஒரு சண்டைக் காட்சி உள்ளது. அவரும் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தேவையும் ஆசையும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதை ஹரிஷ் உத்தமன் மூலமாக அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் தனராஜ்.
இயக்கதில் முதல்படம் இது எனச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தை இயக்கியுள்ள தனராஜ் ராகவனாகவும் நடித்துள்ளார்.
பல படங்களில் நடித்த அனுபவம் அவரது இயக்கத்திற்குப் பெரிதும் கை கொடுத்திருக்கிறது. நடிப்பிலும் அனாயாசமாக ஸ்கோர் செய்து, பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். ‘இப்படியொரு மகன் யாருக்கும் வாய்த்து விடக்கூடாது!’ எனப் பதற்றப்பட வைக்கிறார். அந்தப் பதற்றத்தைத் தணியாமல் பார்த்துக் கொண்டுள்ளது அருண் சிலுவேருவின் பின்னணி இசை. ‘குலசாமி போல’ என்ற யுகபாரதியின் பாடலும், க்ளைமேக்ஸில் மனதைக் கனக்கச் செய்ய வைக்கும் முருகன் மந்திரத்தின் வரிகளில் வரும் பாடலும் கதைக்கருவிற்கு உரம் சேர்ப்பவை.
தனது கேமரா கோணங்களின் மூலமாக கதாப் பாத்திரங்களின் மனச் சித்திரங்களை திரையில் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத்.
‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலாவின் கதைக்கு உயிர் கொடுத்து அசத்தியுள்ளர் தனராஜ் கொரனானி. படம் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், ஒரு கணமேனும் அவர்களது தந்தையை நிச்சயம் நினைத்துப் பார்ப்பார்கள். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி எனலாம்.